Mahabharatham Episode 12 – மகாபாரதம் பகுதி 12

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-12

குழந்தைகள் மூவரும் இளமைப்பருவம் எய்தினர். திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்றாலும் கூட, மூத்தவனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்தினாபுரத்தின் மன்னர் பதவி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார் பீஷ்மர். திருதராஷ்டிரனுக்காக காந்தார தேசத்துக்கு சென்றார் பெண் பார்த்தார் பீஷ்மர். அந்நாட்டு மன்னன் சுபலன். அவனுக்கு பீஷ்மர் குடும்பத்தில் பெண் கொடுக்க வேண்டும் என்றால் கசக்கவா செய்யும்? தன் மகள் காந்தாரியை அழைத்தான்.

அழகுப்பதுமையான அவள் தந்தை முன் வந்து நின்றாள். அம்மா! பீஷ்மர் வந்திருக்கிறார். தன் குலம் காக்க வந்த திருதராஷ்டிரனுக்கு உன்னைப் பெண் கேட்க. என்னம்மா சொல்கிறாய்? தந்தையே! இதெல்லாம் என்ன கேள்வி! பெற்றவர்களைப் பெருமைப்படுத்துபவளே பெண். நான் இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? என் நன்மை என்னை விட தங்கள் கையில் தான் அதிகம் இருக்கிறது, என்றாள் பணிவோடு காந்தாரி. குடும்பத்திற்கேற்ற குலவிளக்கு, என பாராட்டினார் பீஷ்மர். காந்தாரியின் அண்ணன் சகுனி அங்கே வந்தான்.

காந்தா! தந்தையார் உன்னிடம் சம்மதம் கேட்பதில் ஒரு உட்பொருள் இருக்கிறது. உனக்கு பார்த்துள்ளமாப்பிள்ளைக்கு பார்வை கிடையாது. அதையும் யோசித்துக் கொள்,. அண்ணா! இதில் யோசிக்க ஏதுமில்லை.

என் சகோதரனுக்கும், தந்தைக்கும் தெரியாதது என்ன? அவர் பார்வையில்லாதவராக இருந்தால் என்ன? நானும் இந்தக்கணமே என் பார்வையை இழந்து விடுகிறேன், என்றவள், வேகமாகத் தன் அறைக்குச் சென்று, பொன்னால் செய்யப்பட்ட ஒரு பட்டையை எடுத்து வந்தாள். அதைத் தன் கண்ணில் கட்டினாள். எனக்கு வரப்போகும் கணவரால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதே போல நானும் இவ்வுலகத்தைப் பார்க்க மாட்டேன், என சொல்லிவிட்டு குனிந்த தலையுடன் தோழிப் பெண்களின் துணையுடன் தன் அறைக்குப் போய் விட்டாள்.

மகாபாரதத்தை ஏன் படிக்கச் சொல்கிறோம் இதுபோன்ற நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளத்தான். பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்கும் பெண்கள் இப்போது குறைந்து போய் விட்டார்கள்.

குறிப்பாக திருமண விஷயத்தில், பெற்றவர்கள் எடுக்கும் முடிவை பல பெண்கள் ஆமோதிப்பதில்லை. போதாக்குறைக்கு காதல் என்ற படு குழியில் வேறு விழுந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். ஒரு பார்வையற்றவனை மணக்கக்கூட அந்தக்காலத்துப் பெண் சம்மதித்திருக்கிறாள். அதற்காக தன் சுகத்தையும் அழித்துக் கொண்டாள் என்று பாரதத்தில் படிக்கும் போது அக்காலப் பெண்களைப் பற்றி நம் நெஞ்சு மகிழ்ச்சியால் விம்முகிறது. இந்த தேசம் இத்தனை வன்முறைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நிற்கக்காரணம் இவளைப் போன்ற பெண்கள் செய்த தியாகத்தால் தான். பெண்கள் பெற்றவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். காந்தாரியின் சம்மதம் கிடைத்ததும் ஒரு நல்லநாள் பார்க்கப்பட்டது.

அக்காலத்தில் மன்னர்கள் பல பெண்களை திருமணம் செய்ய அனுமதி இருந்தது. அதன்படி திருதராஷ்டிரனுக்கு பல மனைவிகள் ஏற்கனவே இருந்தாலும், காந்தாரியே பட்டத்தரசியானாள்.

இங்கே இப்படியிருக்க, சுரதை என்ற பெண்மணி துர்வாச முனிவருக்கு பல சேவைகள் செய்து வந்தாள். துர்வாசர் என்றாலே எல்லாருக்கும் தெரியும். அவர் பெரிய கோபக்காரர் என்று. சுரதை ராஜகுமாரி என்றாலும் கூட, அவர் மனம் கோணாமல் சேவை செய்து வந்தாள். இவள் சூரன் என்ற மன்னனின் மகள். அவளை குந்திபோஜன் என்ற மகாராஜா, தன் மகளாக சுவீகராம் எடுத்துக் கொண்டான். குந்திபோஜனின் அரண்மனைக்குத் தான் துர்வாசர் வந்திருந்தார்.

வந்தவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள மகளையே நியமித்திருந்தான் மன்னன். குந்திபோஜனின் மகளான பிறகு சுரதைக்கு அவளது சொந்தப் பெயர் மறைந்து விட்டது. அவளுக்கு குந்தி என்று பெயர் நிலைத்து விட்டது. இப்போது குந்தி சிறுமியாகத்தான் இருந்தாள். அவள் தன் தோழியரோடு அம்மானை ஆடுவாள். ஆற்றுக்குச் சென்று தோழியருடன் நீச்சலடித்து மகிழ்வாள். ஊஞ்சல் கட்டி ஆடுவாள். இப்படி விளையாட்டுபருவமுள்ள சிறுமி கோபக்கார துர்வாசருக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்று மன்னன் கொஞ்சமும் எண்ணி பார்க்கவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் அந்த பணியை ஒப்படைத்துவிட்டான்.

குந்தியும் தன் விளையாட்டுகளையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு, முனிவருக்கு தேவையான பணி விடையை அவரது மனம் கோணாமல் செய்து வந்தாள். துர்வாசருக்கு சந்தோஷம். எப்போதும் கடுகடுவென இருப்பவர்களைக் கூட பொறுமை மகிழ்ச்சிகரமாக்கி விடுகிறது. துர்வாசர் சமயத்தில் கோபபட்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் சிறுமி குந்தி சேவை செய்தாள். துர்வாசரே அசந்து விட்டார். அம்மா! குந்தி, நான் புறப்படுகிறேன். இங்கிருந்த காலத்தில் எனக்கு வேண்டிய பணிவிடைகளை நல்ல முறையில் செய்தாய். உன்னைப் போன்ற பொறுமையுள்ள பெண்ணை பூமியில் நான் இதுவரை பார்க்கவில்லை. உபசாரம் என்பது பெரியகலை. பிறர் மனம் கோணாமல் உபசரிப்பவர், சொர்க்கத்திற்கு செல்வார்கள். இந்த உபசரிப்புக்காக பரிசொன்று தரப்போகிறேன். நீ பெற்றுக் கொள், என்றாள். என்ன இருந்தாலும் குந்தி குழந்தை தானே! மேலும் அவர் கோபக்கார மகரிஷி. வேண்டாம் என்று சொல்லி அவர் சபித்து விட்டாலோ, தந்தையிடம் புகார் சொன்னாலோ என்னாவது? குந்தி பணிவுடன் கைகட்டி நின்றாள். அவளை அருகில் அழைத்த மகரிஷி, தன் மடியில் இருத்திக் கொண்டு, அம்மா! ஒரு ரகசிய மந்திரம் ஒன்றை உனக்கு கற்றுத் தரப்போகிறேன். இது யாருக்கும் கிடைக்காத அரிய பரிசு. கவனமாகக் கேள், என்றார்.