Mahabharatham story in Tamil 28 – மகாபாரதம் கதை பகுதி 28

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-28

பீமன் அவளது பேச்சுக்கு வளையவில்லை. உயிர் போய்விடும் என்பதற்காக கொள்கையை விடுபவர்கள் நாங்கள் அல்ல. மேலும், அரக்கப்பெண்ணான உன்னை ஒரு மானிடன் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் ? இந்த திருமணத்தை இரண்டு குலங்களுமே ஏற்றுக் கொள்ளாது, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, இவர்களின் குரல் கேட்டு இடும்பன் வந்து விட்டான். அவன் தன் தங்கையைக் கரித்துக் கொட்டினான். நான் இவர்களைப் பிடித்து தின் என அனுப்பி வைத்தால், நீ இங்கு வந்து காதல் வசனமா பேசிக்கொண்டிருக்கிறாய். அரக்க குலத்தைக் கெடுக்க வந்தவளே ! ஒழிந்து போ ! என அவளை கொல்ல முற்பட்டான். பீமன் அவனுக்க நல்ல வார்த்தைகளைச் சொன்னான்.

இடும்பன் கேட்கவில்லை. அடேய் மானிடப்பதரே ! அவள் மீது உனக்கும் காதல் என்றால், என்னோடு போருக்கு வா ! என்னைக் கொன்றுவிட்டு அவள் கரம்பிடி, என வம்புச்சண்டைக்கு இழுத்தான். பாண்டவர்களைத் தாக்கினான். பீமன் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டான். இந்தப் போர் வெகுநேரம் நீடித்தது. மரங்களை வேரோடு பிடுங்கி இருவரும் சண்டை போட்டனர். பீமனின் தாக்குதலை இடும்பனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் அடிபட்டு சாய்ந்தான். சற்றுநேரத்தில் உயிர் போய்விட்டது. அண்ணன் மறைந்த துக்கத்தை இடும்பியால் தாங்கமுடியவில்லை என்றாலும், பீமனின் வீரம் கண்டு மகிழ்ந்தாள்.

தனக்கு துணையாக வாய்க்கப்போகிற வன் அரக்கர்களையே அழிக்கும் வல்லமையுள்ளவன் என்பது கண்டு நெஞ்சு பூரித்தது. இப்போத முன்பை விட அதிகமாக பீமனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவளது நிலை தர்மருக்கு நன்றாகப் புரிந்தது. இடும்பி ! கவலைப்படாதே ! என் தம்பி உனக்கு மணாளன் ஆவான், என ஆறுதல் சொன்னார். குந்திதேவியும் இடும்பிக்கு ஆறுதல் கூறினாள். இவர்கள் இருவரது வற்புறுத்தலால் இடும்பியை அந்த வனத்திலேய திருமணம் செய்து கொண்டான் பீமன். இப்படியே சில காலம் கழிந்தது. இடும்பி ஒரு தங்கமகனைப் பெற்றாள். வீரத்தில் பீமனையும் தாண்டியவன் அவன். அவனுக்கு கடோத்கஜன் என பெயர் சூட்டினர்.

ஒருநாள் கடோத்கஜன் தந்தையிடம் வந்தான். என் அன்புத் தந்தையே ! இனியும் நாங்கள் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். நான் என் தாய் இடும்பியுடன் மீண்டும் இடும்ப வனத்துக்கே போய்விடுகிறேன்.

நீங்கள் எப்போது என்னை நினைத்தாலும், அங்கே வந்து நான் நிற்பேன். என் தந்தைக்குரிய பணிவிடைகளைச் செய்வேன் என்றான். பீமனும் பாண்டவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இடும்பி கண்ணீர் மல்க கணவனிடமிருந்து விடைபெற்றாள். இதன்பிறகு, வியாசமுனிவர் அங்கு வந்தார். அவர் பாண்டவர்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனை சொன்னார். அதன்படி அவர்கள் வேத்திரகீயம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.

அங்கே பிராமணர்கள் நிறைந்திருந்தனர். அதற்கேற்றாற்போல், பாண்டவர்களும் பிராமணர்களைப் போலவே வேடமிட்டு அவ்வூருக்குள் சென்றனர். அவ்வூர் பிராமணர்கள் கருணை மிக்கவர்கள். ஊருக்கு புதிதாக வந்த விருந்தினர்களை வரவேற்று தினமும் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். இனிய உணவைப் பரிமாறினர். ஒருநாள், ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அவ்வீட்டுப் பெண் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள், குந்திதேவி அதைக் கவனித்து, தாயே ! எல்லா மகிழ்ச்சியும், வசதியும் நிறைந்த ஊர் இது. இங்கேயும் கண்ணீரா ? நீ ஏன் அழுகிறாய் ? என்றாள். அப்பெண் குந்தியிடம், தாயே ! இவ்வூரைப் பிடித்த சாபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

இவ்வூர் காட்டில் பகாசுரன் என்பவன் வசிக்கிறான். கோரைப் பற்களும், அவலட்சணமான முகமும் கொண்ட அவனுக்கு நரமாமிசம் என்றால் உயிர். எங்கள் ஊர் பிராமணர்களை இஷ்டம் போல் பிடித்து தின்பான். ஒருநாள், என் தந்தை, அவனை நேரில் சந்தித்து, பகாசுரா ! நீ கண்டபடி மனிதர்களை உண்ணாதே. நாங்கள் தினமும் உனக்கு ஒரு வண்டி நிறைய அறுசுவை உணவும், நீ கடித்து சாப்பிட ஒரே ஒரு மனிதனையும் அனுப்பி வைக்கிறோம்எல்லாரையும் ஒரே சமயத்தில் கொல்லாதே என பேசினார். பகாசுரனும் ஒப்புக்கொண்டான். இன்று என் வீட்டு முறை. எனக்கு ஒரே மகன். அவனை அனுப்பினால், எனக்கு கொள்ளி வைக்க பிள்ளையில்லாமல் போகும். என் மருமகளை அனுப்புவது கூடாத செயல். ஏனெனில், அவள் நல்வாழ்வு வாழ்வதற்காக பிறர் வீட்டில் இருந்து வந்தவள். அவளை கடைசி வரை காப்பாற்றுவது புகுந்த வீட்டின் கடமை. என் கணவரைத் தான் அனுப்ப வேண்டும். ஆனால், அவர் இன்றி நான் இருக்க மாட்டேன். நானாகப் போய் விடலாம் என்றால் என் கணவரை கவனிக்க என்னை விட்டால் ஆளில்லை, என்றாள். குந்திக்கு நிலைமை புரிந்தது. அந்த பிராமண பெண்ணுக்கு ஆறுதல் சொன்னாள். மகளே ! இதற்காகவா கவலைப்படுகிறாய். நீங்கள் யாருமே பகாசுரனுக்கு இரையாக வேண்டாம். நான் ஐந்து பிள்ளைகளைப் பெற்றவள்.

உன் வீட்டின் சார்பில் அவர்களில் ஒருவரை பகாசுரனுக்கு உணவாக அனுப்புகிறேன், என்றாள். அவளது தியாகம் கண்டு பூரித்த பிராமணப்பெண், விருந்தினர்களாக வந்தவர்களை பலி கொடுக்க தங்கள் மனம் ஒப்புக் கொள்ளாது என்றாள். இருந்தாலும் குந்தி அந்தப் பெண்ணிடம், என் மகன்களில் ஒருவன் முரடன். சக்தியில் அனுமானைப் போன்றவன். அவனைக் கண்டால் அரக்கர்களே அஞ்சுவார்கள். இடும்பன் என்ற அரக்கனைக் கொன்று அவனது தங்கையையே மணம் முடித்தவன் அந்த பலவான். அவனை அனுப்பி, பகாசுரனைக் கொன்று, உங்கள் ஊருக்கே விடுதலை அளிக்கிறேன், என்றாள் குந்தி. அந்தப் பெண் மகிழ்ந்தாள்.

மலைபோல உணவு தயாரானது. அதை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டான் பீமன். பகாசுரன் வசித்த யமுனை நதிக்கரைக்கு சென்றான். அங்கே, பகாசுரன் பசியுடன் காத்திருந்தான். அடேய் மூடா ! ஏனடா தாமதம் ! என் பசியைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ? என்றவனாய் பீமனை விழுங்கப் பாய்ந்தான். பீமன் அவனைக் கண்டு கொள்ளவில்லை. வண்டியின் மீது ஏறினான். அதிலுள்ள உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான்.