Mahabharatham story in Tamil 57 – மகாபாரதம் கதை பகுதி 57

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 57

திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே! என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மரத்தையே பிடுங்கி அடிக்கும் அளவுக்கு ஒரு வீரனா என ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்டு தப்பி ஓடினர். அந்த நச்சுவேர்களை பீமன் விடவில்லை. எல்லாரையும் அடித்தே கொன்று விட்டான்.

ஊர் மக்களுக்கு இந்த விஷயம் பரவியது. திரவுபதி சொன்னது போல, இது நிச்சயமாக கந்தவர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். அரண்மனைக்கு வந்த புதியவர்கள் மீது அவர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. விராட மகாராஜாவும் இதையே நம்பி விட்டான். இதன்பிறகு, பாண்டவர்களும், திரவுபதியும் மீதி காலத்தையும் அங்கேயே கழிக்க எண்ணி தங்கிருந்தனர். இதனிடையே அஸ்தினாபுரத்தில் எவ்வித கஷ்டமும் இல்லாமல், 12 ஆண்டுகள் பதவியில் இருந்த துரியோதனின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவன் கர்ணனிடம், நண்பா! பாண்டவர்களின் வனவாசம் 12 ஆண்டுகள் முடிந்து, அஞ்ஞான வாசமும் தொடங்கி விட்டது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒற்றர்கள் பல தேசங்களுக்கும் சென்று, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டார்கள். அவர்களின் அஞ்ஞான வாசம் முடிந்து விட்டால், நாம் அவர்களுக்கு இந்திரபிரஸ்தத்தை திருப்பிக் கொடுக்க வேண்டிவரும். அதற்குள் அவர்களைக் கண்டுபிடித்து வெளியில் வரச் செய்தாலே, அவர்களுக்கு இனி நாடு கிடைக்காது. இதற்கொரு வழி சொல், என்றான்.

கர்ணனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது, அங்கு வந்த பீஷ்மா, துரியோதனனை மட்டம் தட்டும் வகையில் பேசினாலும், அந்தப் பேச்சில் இருந்தே ஒரு வழி கண்டுபிடித்து விட்டான் துரியோதனன். துரியோதனா! பாண்டவர்கள் எங்கியிருக்கிறார்களோ அந்த இடம் செழிப்பாக இருக்கும். காய்ந்த புல் கூட பசும்புல்லாகி விடும் எனச்சொல்லி சிரித்தார். தாத்தாவின் விஷமப்பேச்சு அவனுக்கு சுட்டாலும், மீண்டும் ஒற்றர்களை அழைத்து ஒற்றர்களே! நீங்கள் தற்போது சென்ற நாடுகளில் எந்த நாடு மிகச் செழிப்பாக இருந்தது? என்றான். ஒரு ஒற்றன் அவன் முன்னால் வந்து, மாமன்னரே! நான் விராட தேசத்துக்கு சென்றிருந்தேன். சில காலம் முன்பு வரை பஞ்சத்தில் தவித்த அந்த நாடு இப்போது செழித்திருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். பசுக்கள் ஏராளமாகப் பால் தருகின்றன. அது மட்டுமல்ல! விராட நாட்டு மன்னனின் மைத்துனனும், மாபெரும் மல்யுத்த வீரனுமான கீசகன் என்பவன் ஒரு பணிப்பெண்ணை விரும்பியிருக்கிறான். ஆனால், அவன் கொல்லப்பட்டான் என்ற அதிசய தகவலையும் கேள்விபட்டேன், என்றான்.

துரியோதனனுக்கு ஓரளவு புரிந்துவிட்டது. கர்ணன் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு, நண்பா! நாம் விராடதேசத்தின் மீது படையெடுப்போம். அங்குள்ள பசுக்களை கவர்ந்து வருவோம். பாண்டவர்கள் அங்கியிருந்தால் பசுக்களை காப்பாற்ற நிச்சயம் வருவார்கள். அப்போது, நம் எண்ணம் ஜெயிக்கும் என்றான். துரியோதனன், ஆதிக்கத்துக்கு உட்பட்ட திரிகர்த்த அரசின் மன்னனான —விராட தேசத்துக்கு சென்று பசுக்களை கவர்ந்து வரும்படி அனுப்பினான். அவன் அங்கு சென்று, பசுக்களை கவர்ந்ததை கேள்விப்பட்ட விராடமன்னன் அவற்றை மீட்க பெரும்படையுடன் சென்றான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ஒரு கட்டத்தில் சுசர்மன் தோற்கும் நிலையில் இருந்தான். ஆனால், எப்படியோ சுதாரித்து சிறப்புமிக்க தன் அம்புகளை எய்த்து, விராடனே வீழச்செய்தான். அவனை தன் தேர்க்கடியில் கட்டி இழுத்துச் செல்ல எண்ணியபோது, போரை வேடிக்கை பார்க்க வந்திருந்த கங்க முனிவராகிய தர்மர், தன் தம்பி பீமனை நோக்கி கண்ஜாடை காட்டவே, புரிந்து கொண்ட பீமன், போர்க்களத்தில் நின்ற தேரில் ஏறிச்சென்று, சுசர்மனின் தேரில் மோதி அதை உடைத்தான். மன்னனை விடுவித்து, சுசர்மனை அதே தேர்க்காலில் கட்டினான்.

விராட மன்னன் பாலாலயனான பீமனுக்கு நன்றி தெரிவித்தான். தாமக்கிரந்தி என்ற பெயருடன் மாறு வேடத்தில் இருந்த நகுலன் போர்க்களத்தில் நின்ற எதிரிகளின் ஆயிரம் குதிரைகளைக் கைப்பற்றிக் கொண்டான். தந்திரி பாலன் என்ற பெயரில் இருந்த சகாதேவன், களவாடப்பட்ட பசுக்களை மீட்டு ஆயர்களிடம் ஒப்படைத்தான். கைதான சுசர்மனை விடுதலை செய்து விடும்படி, விராடனிடம் கங்க முனிவர் கேட்டுக் கொள்ளவே, அவன் விடுவிக்கப்பட்டான். சுசர்மன் போரில் தோற்றதை அறிந்த துரியோதனன் அவமானம் அடைந்தான். தானே நேரில் போருக்குச் செல்வதென முடிவெடுத்து விராட தேசத்துக்கு விரைந்தான். அந்த தேசத்தில் இருந்த பயிர் பச்சைகளை நெருப்பு வைத்து அழித்தான். பசுக்களைக் கவர்ந்து கொண்டான். விராடராஜன் அப்போது நாட்டின் வேறொரு பகுதியில் இருந்தான். ராஜா இல்லாத இந்த நேரத்தில், விராடனின் மனைவி சுதேஷ்ணை பொறுப்புணர்வுடன், தன் பணிப்பெண்களை அழைத்து துரியோதனனின் படைகள் நம்மை முற்றுகையிட்டுள்ளன. நீங்கள் மதில்களின் மீது ஏறி நின்று நாட்டைக் காக்க வாளுடன் புறப்படுங்கள், எனக் கட்டளையிட்டாள்.

இதைப் பார்த்த விராடனின் மகன் உத்தரகுமாரன், அம்மா! நானிருக்க தாங்கள் பெண்களை அனுப்பலாமா? நான் தனிமையில் சென்று போரிட்டு பசுக்களை மீட்டு வருவேன், என்றான். அப்போது பணிப்பெண்ணாய் இருந்த திரவுபதி, இளவரசே! இவள் பெயர் பிருகந்நளை. தேரோட்டுவதில் வல்லவள். அர்ஜுனனுக்கு தேரோட்டிய அனுபவம் மிக்கவள், இவளை அழைத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும், என்று பேடியாக மாறியிருந்த அர்ஜுனனைச் சுட்டிக் காட்டினாள்.