Mahabharatham story in Tamil 81 – மகாபாரதம் கதை பகுதி 81

மகாபாரதம் பகுதி – 81

காரணம் இல்லாமல் கடவுள் காரியம் எதையும் செய்வதில்லை. கிருஷ்ண பகவானின் சங்கொலி, போர் வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அதிபயங்கர சப்தமாய் ஒலிக்க, பீஷ்மரின் காதில் அது தேனாய் பாய்ந்தது. உயிர் போகும் தருணத்தில் மனிதனுக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. எப்படி உயிர் போகிறதோ, அதற்கு தகுந்தாற் போன்ற வலியும் ஏற்பட்டு துடிக்க வைக்கும். பீஷ்மரின் உடலில் அர்ஜுனன் பாய்ச்சிய ஏராளமான அம்புகள் பெரும் வலியை உண்டாக்கியது. அந்த மகாத்மா அதைப் பொறுத்துக் கொண்டார். கிருஷ்ணரின் சங்கொலியை தெய்வீக ஒலியாக மதித்து, கோவிந்தா, கோபாலா, மதுசூதனா, திரிவிக்ரமா, புண்டரீகாக்ஷா, தாமோதரா, ஸ்ரீவிஷ்ணு, நாராயணா என பகவானின் நாமத்தை உச்சரித்தபடியே சாய்ந்தார். அவரது உடலில் பாய்ந்திருந்த அம்புகள் அவரைத் தரையில் படுக்கவொட்டாமல் தடுத்தன. அந்த அம்புப்படுக்கையில் பீஷ்மர் சாய்ந்தார். தலை தொங்கிக் கொண்டிருந்தது. அவர் உயிர் விரைவில் பிரிந்து விடும் என்பதை உணர்ந்த கிருஷ்ணரும், அர்ஜுனனும் தேரில் இருந்து இறங்கி ஓடி வந்தனர். பீஷ்மர் இருவரையும் மாறி மாறி பார்த்தார். அவரது வேதனையைக் கண்டு அந்த மாயக்கள்வனே கூட கண்ணீர் வடித்து, நானும் இப்பூமியில் ஒரு மானிடப்பிறவியே என்று நிரூபித்து விட்டான் என்றால் நிலைமையைப் பாருங்களேன்!
அர்ஜுனன் கதறி விட்டான். பிதாமகரே! இந்த கொடிய காட்சியை என்னால் காண முடியவில்லையே, என்று முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதான்.

தர்மர், பீமன், நகுல சகாதேவர் அனைவரும் அழுதனர். துரியோதனன் கதறினான். நாங்கள் இனி என்ன செய்வோம்? என்று புலம்பினான். அந்த நிமிடம் வரை போரில் ஈடுபட்ட இருதரப்பு வீரர்களும் ஓடிவந்து அழுதனர்.ஐயோ! தர்மம் சாய்ந்து விட்டதே! தந்தைக்காக பிரம்மச்சரியம் ஏற்று, அதைக் கடைசி வரை கடைபிடித்த வீர மைந்தரே! நீர் எங்களை விட்டு பிரிகிறீரா? எங்கள் வம்சத்தின் பிதா என்பதால் உம்மை பிதாமகர் என்று புகழ்வோமே! இனி, உம்மை போல் யார் ஒருவர் இந்த குரு வம்சத்தில் பிறக்கப் போகிறார்கள்! ஒழுக்கம், பெருமை, ஞானம், நீதி, தர்மம் ஆகியவற்றின் வடிவமே! இனி, எங்களுக்கு முடிசூட்டி வைக்க யார் இருக் கிறார்கள்? என்றெல் லாம் புலம்பினார்கள். பீஷ்மர் அவர்களை நோக்கி, கலங்காதீர்கள் மக்களே! விதிப்பயனைத் தடுக்க வல்லவர் யார்? அரச குடும்பத்தில் பிறந்தவன் அம்புகளுக்கு இரையாக வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன்படி, அம்புகள் பாய்ந்து வீழ்ந்து கிடக்கிறேன், என்றவர், அர்ஜுனனை அழைத்து, என் உயிரினும் மேலான மாணவனே! நீ பாய்ச்சிய அம்புகள் எனக்கு இன்பம் தருகின்றன. பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் உணர்கிறேன். ஆனால், தலை தொங்குகிறது கவனித்தாயா! என் தலையை சாய்த்து வைக்க ஏற்பாடு செய்யேன், என்றதும், அர்ஜுனன் சில அம்புகளை தரையில் பாய்ச்சினான். அது தலையணை போல் அமைய, பீஷ்மர் அதில் சுகமாக தலை சாய்த்தார். பின்னர் துரியோதனனை அழைத்த மர்,துரியோதனா! இப்போது, நமது மானம் காக்க ஒரே ஒருவன் தான் இருக்கிறான். அவன் தான் கர்ணன். எவ்வளவு பெரிய மாவீரர்களையும் அவன் அழித்து விடுவான். காலம்யாரையும் விட்டு வைப்பதில்லை.

ஆனால், அந்த காலத்திற்கே காலம் குறிப்பவன் கர்ணன். அவனது புத்திக்கூர்மை யாருக்கும் இல்லை. நான் சாய்ந்து விட்டேன். நாளை முதல் நம் படைக்கு அவனை சேனாதிபதியாக நியமித்து போரை நடத்து, என்றார். பீஷ்மரின் உடலில் இத்தனை அம்புகள் பாய்ந்தும் அவர் உயிர் பிரியாததற்கு காரணம், அவர் பெற்ற வரமே. அவர் நினைத்தாலன்றி, அவரது உயிர் பிரியாது. தட்சிணாயண காலமான, சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலத்தில் (மார்கழி) குருக்ஷேத்ர போர் நடந்தது. அவர் உத்ராயண (தை) காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். தட்சிணாயணத்தில் உயிர் பிரிந்தால், மறுபிறவி கிடைக்கும் என்பது விதி. பீஷ்மர் முக்தியடைய விரும்பினார். பிறவாநிலை பெற உத்ராயணம் வரை உயிரை உடலில் தக்க வைக்கப் போவதாக பாண்டவ, கவுரவர்களிடம் சொன்னார். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜபித்தபடியே கண் மூடியிருந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டு வருணபகவான் கண்ணீர் வடித்தான். ஏனெனில், பீஷ்மர் வருணனின் மகன் என்பது முந்தைய கதை.

வருணன், தேவலோக மங்கை ஒருத்தியின் இடுப்பழகை ரசித்ததால், பிரம்மாவின் சாபத்தைப் பெற்றான். ஆடையை சரி வர அணியாத அந்தப் பெண்ணையும் பிரம்மா, மண்ணில் பிறக்கச் செய்தார். அவர்கள் மானிடராக பிறந்து பூமியில் திரிந்தனர். அவர்களே அடுத்த பிறவியில் சந்தனுவாகவும், கங்கையாகவும் பிறந்து மணந்து கொண்டனர். தான் செய்யும் எந்தச் செயலுக்கும் காரணம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை திருமணத் துக்கு முன் சந்தனுவுனுக்கு விதித்திருந்தாள் கங்கை. சந்தனுவும் ஒப்புக் கொண்டான். ஏழு பிள்ளைகள் பிறந்ததும் அவர்களை நதியில் வீசி கொன்று விட்டாள் கங்கை.

எட்டாவது பிள்ளை பிறந்ததும், பொறுக்க முடியாத சந்தனு அவளிடம் குழந்தையை ஏன் கொல்லப்போகிறாய்? எனக் கேட்க, அவள் கோபித்தாள். ஆனாலும், அவர்களது முந்தைய பிறவி வரலாறைச் சொன்னாள். அந்த எட்டாவது மைந்தனே பீஷ்மர். பின்னர், அவர்கள் சாபம் நீங்கி தேவலோகம் சென்றுவிட்டனர். ஆக, பீஷ்மர் வருணனின் மைந்தனாகிறார். தன் மகனின் மரணம் கண்டு குளிர்ந்த வருணனின் உடல் கூட சூடாகிப் போனது.உலகில் ஒரு நல்ல மானிடன் பிறந்தான். தர்மம் பிறழாமல் நடந்தான். பெற்றவருக்காக திருமணமே செய்யாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தான். ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தான். அத்தகையை மானிடனுக்கு தேவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் மாரி பொழிந்தனர். அன்றிரவு, கர்ணன் துரியோ தனனைச் சந்தித்தான்.இப்போது சொல் துரியோதனா! நான் படைத்தளபதி ஆகட்டுமா? என்று கேட்டான். வேண்டாம்… உனக்கு தளபதி பதவி வேண்டாம், என்றான்.பீஷ்மரே சொன்ன பிறகும் ஏமாற்றமா? கர்ணன் துரியோதனனை கேள்விக் குறியுடன் நோக்கினான்.