மகாபாரதம் பகுதி-84
பகவான் நாராயணனின் அவதாரமான அந்தக் கிருஷ்ணன் மீது பகதத்தன் தொடர்ந்து அம்புகளை விடுத்தான். அந்த அம்புகள் கிருஷ்ணனின் ஸ்பரிசம் படுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, கிருஷ்ணனின் உடலில் மாலை போன்ற வடிவில் போய் விழுந்தன. அந்த அம்புமாலையைத் தாங்கிய கிருஷ்ணரின் அழகை தேவர்கள் வானுலகில் இருந்தபடி புகழ்ந்தனர். உலக உயிர்கள் பகவானின் மீது பல துõஷணைகளைச் செய்கின்றன. நீ ஆண்டவனா? உனக்கு கண் இருக்கா? காது இருக்கா? என்றெல்லாம் நாம் கூட துன்ப காலங்களில், பகவானைத் திட்டுகிறோம். பகவான் அதைப் பொருட்படுத்துகிறானா? கண்டு கொள்ளாமலே இருக்கிறான். நமது திட்டுகளையும் அர்ச்சனையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவனிடம் இருக்கிறது. அதுபோல் தான், பகதத்தன் தன் மீது தொடுத்த அம்புகளை மாலையாக ஏற்றுக் கொண்டாராம் கிருஷ்ணர். இப்போது பரமாத்மா மனித நிலைக்குத் திரும்பினார்.அர்ஜூனா, பிடி இந்த நாராயணாஸ்திரத்தை! பகதத்தன் மீது இதை எய்தால் அவன் அழிவது உறுதி, என்றார். அந்த அம்பை பணிவுடன் வாங்கிய அர்ஜுனன் அதை பகதத்தன் மீது எய்தான். மலை போல் நின்று போரிட்டுக் கொண்டிருந்த பகதத்தனை அது பல நுõறு துண்டுகளாகக் கிழித்துப் போட்டது. மேலும், அவனுடைய யானைப்படை முழுவதையும் அழித்து விட்டது. இதுகண்டு சகுனியின் புதல்வர்கள் வ்ருஷஜயன், ஜயன் என்பவர்கள் அர்ஜுனன் மீது அம்பு எய்தனர்.
அவற்றை லாவகமாக சமாளித்த அர்ஜுனன் அவ்விருவரையும் கொன்றான். இதைக் கண்ட சகுனி மிகுந்த ஆவேசத்துடன், தர்மரைக் கொல்வதற்காக வில்லுடன் தேரில் பாய்ந்தான். தர்மர் அவனிடம், ஏ சகுனி! இங்கே நடப்பது சூதாட்டமல்ல. போர். இங்கே அம்புகளுக்கு தான் வேலை. அவை ஒன்றும் பகடைக்காய்கள் அல்ல. மரியாதையாக ஓடிவிடு. இல்லாவிட்டால், இக்கணமே என் அம்புகளுக்கு பலியாவாய், என்று கடும் குரலில் எச்சரித்தார். அந்த வார்த்தைகளே சகுனியைப் பயமுறுத்த சகுனி ஆவேசம் ஒடுங்கி ஓடிவிட்டான். இன்னொரு புறத்தில் பீமன் தனியொருவனாக நின்று, துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், துரியோதனன், கர்ணன் ஆகிய வீராதி வீரர்களை சமாளித்துக் கொண்டிருந்தான். அவன் மீது தொடுக்கப் பட்ட அம்புகள், மலையில் விழுந்த மழைத்துளி போல் தெறித்து விழுந்ததே தவிர பயனேதும் ஏற்படவில்லை. ஆனால், தன் பாணங்களால் எதிர்த்து நின்ற அனைவரையும் காயமடையச் செய்தான். ஒரே நேரத்தில் தர்மர், கிருஷ்ணனுடன் கூடிய அர்ஜுனன், பீமன் ஆகியோரின் கொடிய தாக்குதலைத் தாள முடியாமல் கவுரவப்படைகள் பின்வாங்கின.
இந்த சமயத்தில் கர்ணன் துரோணரை நோக்கி கேலியாக பேச ஆரம்பித்தான். குருவே! நேற்று தாங்கள் தர்மரை சிறைபிடிப்பதாக வாக்களித்தீர். இன்று அதை நிறைவேற்றி எங்கள் மனங்களைக் குளிரச் செய்து விட்டீர். வேதம் ஓதும் உமக்கு போர்த் தொழில் சரிவராது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீரா? என்றான் சிரித்தபடியே. துரோணருக்கு அவமானமாகப் போய்விட்டது.ஏ கர்ணா! இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறாயே! உன்னால் மட்டும் தர்மரை விற்போரில் ஜெயித்து விட முடியுமா என்ன! கர்ணா! நீ மட்டுமல்ல. இங்கிருக்கும் வீரர்கள் யாராயிருந்தாலும் சரி. தர்மரை சிறைபிடிப்பவன் யாரோ அவனே இந்த உலகத்திலேயே சிறந்த வீரன் என்று கவுரவிக்கப்படுவான். முடிந்தால் செய்யுங்கள். ஆனால், அவனை எதிர்க்கச் செல்வோருக்கு ஒன்று சொல்கிறேன். தர்மனின் வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் ராமபாணத்தை விட வலிமை வாய்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்றார். இப்படியாக அன்றைய மாலைப் பொழுது நெருங்கவே போர் முடிவுக்கு வந்தது. கவுரவர்கள் பகதத்தன், சகுனி புதல்வர்கள் போன்றோரின் இழப்புடன் பாசறை திரும்பினர். மறுநாள் பதிமூன்றாவது தினமாக போர் தொடர்ந்தது. அன்று துரோணர் மிகச்சீக்கிரமாகப் போர்க்களத்துக்குப் போய்விட்டார். திரவுபதியின் சகோதரனும் பாண்டவர் சேனாதிபதியுமான திருஷ்டத்யும்னன், பெரும்படையுடன் வந்து சேர்ந்தான். அவனைத் துரோணர் கடுமையாகத் தாக்கினார். அவரது போர்த்திறனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவரது அம்பு வீச்சு முன் நிற்கமுடியாத அவன், பலமிழந்து ஓடிவிட்டான்.
ஒரு படையின் சேனாதிபதியே புறமுதுகிட்டு ஓடினால், நிலைமை என்னாகும் என்பதைச் சொல்லத் தேவையில்ல. திருஷ்டத்யும்னன் தலை குனிந்து தர்மர் முன் வந்ததும், தர்மர் அவனைத் தேற்றினார். வெற்றியும், தோல்வியும் மனித வாழ்வில் சகஜமானவை. திறமைசாலிகளும் தோற்றுப் போவதுண்டு, யானைக்கும் அடி சறுக்குவதுண்டு. திருஷ்டத்யும்னன் மகாவீரனா யினும் துரோணரின் தோற்று வந்து நின்றதைக் கண்ட தர்மர் அவனைக் கோபிக்கவில்லை, கேலி செய்யவில்லை. மாணவன் தேர்வில் குறைந்த மார்க் வாங்கினான் என்றால், அவனைப் புண்படுத்தும்படி பேசக்கூடாது. அடுத்தமுறை நல்ல மார்க் வாங்கு என ஆறுதல் சொல்ல வேண்டும், அது அவனை ஊக்கப்படுத்துவதாக அமையும். அப்படி ஒரு மாணவனின் நிலையில் வந்து நின்ற திருஷ்டத்யும்னனை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட தர்மர், இதற்கெல்லாம் கலங்கலாமா? உன்னி லும் சிறந்த வீரன் யார் இருக்கிறான் இந்த பூமியிலே? நீயே கலங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இருப்பினும், இப்போது நீ களைத்திருக்கிறாய். சற்று ஓய்வெடுத்து விட்டு பிமன்யுவை அழைத்துக் கொண்டு போ, என்றார்.அபிமன்யுவும், திருஷ்டத்யும்னனும் சற்றுநேரத்தில் களத்தில் புகுந்தனர். சிறுவனாயினும் அபிமன்யு அன்று கொன்றழித்த வீரர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. துர்க்கை அவனது தோளில் விளையாடினாள். அபிமன்யு சுபத்திரையின் மகன் என்பதால், கிருஷ்ணர் அவனுக்கு தாய்மாமன் இல்லையா? தாய்மாமன் தனக்கு கற்றுத்தந்த மந்திரங்களை உச்சாடனம் செய்து தொடுத்த அம்புகள் கவுரவர் படை அமைத் திருந்த வியூகத்தையே சிதறடித்தது. கவுரவப்படைத் தளபதியும், ஆச்சாரியருமான துரோணரை நோக்கி அவன் அனுப்பிய அம்புகள் அவரை நிலை குலையச் செய்தன. அவர் தடுமாறி நின்றார். ஒரு சிறுவனிடம் தோற்றோமே என்று தலை குனிந்து நின்ற வேளையில், கர்ணன் அபிமன்யுவை நோக்கி வந்தான்.