திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

தசாவதாரம் குறித்து ஆன்மீக மற்றும் அறிவியல் அறிவு மிக்க ஒரு தாய்க்கும் அவருடைய மகனுக்குமான ஓர் உரையாடல்

“அம்மா நான் ஒரு மரபணு விஞ்ஞானி! நான் US-ல் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய விஞ்ஞானத்துறையில் வேலை பார்க்கிறேன். சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு! அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா அம்மா?”- மகன்.

அவனது அம்மா புன்னகைத்தவாறே அவனது அருகில் அமர்கிறாள்.
“எனக்கு டார்வின் பற்றி தெரியும் வாசு! ஆனால் நீ தசாவதாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா வாசு – விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்…”

மகன் இல்லையென பதிலளிக்கிறான். “அப்படியென்றால் உனக்கும் டார்வினுக்கும் தெரியாத ஒன்றை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேள்.” என்று கூறியபடி தொடங்கினாள்.

முதல் அவதாரம் – மச்சவதாரம்

அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!
வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான்.

இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம்

அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது!

மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம்.

இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் டைனோசர் என்று கூறிடும் விலங்கைப் போல். சரியா?”

வாசு விரிந்த கண்களுடன் தலையை ஆட்டினான்.

நான்காவது அவதாரம் – நரசிம்ம அவதாரம்

அது பாதி மனிதனும் பாதி விலங்குமாய், பரிணாம வளர்ச்சியில் காட்டுவிலங்குகளிருந்து சற்றே மேம்பட்ட அறிவாற்றலை உடைய உயிரினத்தின் வளர்ச்சியைக் குறிப்பது!”

ஐந்தாவது – வாமன அவதாரம்

குள்ளம் அல்லது நடுத்தரமாக உண்மையில் வளர சாத்தியக்கூறுகளை உடைய உயிரினம். ஏன் தெரியுமா?
உண்மையில் மனிதரில் இரண்டு வகை,
Homo Erectus – ஆதி மனிதன்;
Homo sapiens – தற்கால மனிதன்.
பரிணாம வளர்ச்சியில் வெற்றி பெற்ற முழுமையான அறிவாற்றல் பெற்றவர்கள்.” வாசு பிரமித்துப் போய் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டிருந்தான்.

ஆறாவது அவதாரம் – பரசுராமன்

இது கோடாலி போன்ற ஆயுதங்களைக் கையாளத் தெரிந்த, ஒரு மூர்க்கமான கோபமுடைய, வனம் மற்றும் குகைவாசி!

ஏழாவது அவதாரம் – ராமன்

முதல் சிந்திக்கும் அறிவாற்றல் மேம்பட்ட மனித இனத்தைக் குறிப்பது! சமூக விதிகள், உறவுகளின் அடிப்படை ஆகியவற்றை எடுத்துக்காட்டியது இந்த அவதாரம்.

எட்டாவது அவதாரம் – பலராமர்

உண்மையான விவசாய நலன் அறிந்த, வாழ்வில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் அவதாரம்! உடல் பலம் கூடி மூர்க்கத்தனம் இல்லாத விவசாயத்தைக் காப்பதோடு, மல்யுத்தம் முதலியவற்றில் நிபுணராகத் திகழ்ந்தது!

ஒன்பதாவது அவதாரம் – கிருஷ்ணர்

நல்ல அரசனாகவும், அரசியல் தந்திரங்களில் தேர்ந்தவனாகவும், சமூகத்திற்கு காதல் வாழ்க்கையின் நெறிகளைப் போதிப்பவனாகவும் வாழ்ந்து மனித இனம் செழித்து வாழ வழிவகைகளைக் காட்டிய அவதாரம். மனிதன் தன் நற்பண்புகளாலும், குணங்களாலும் அரசனாகி புகழுடன் ஆட்சி செய்து அரசியல் தந்திரங்களில் நிபுணனாகி தெய்வமாக வணங்கப்படும் நிலைக்கு உயர்வதென்பது கிருஷ்ண அவதாரமாக உள்ளது.

பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரம்

நீங்கள் உங்களது ஆராய்ச்சியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அற்புத சக்திகளைக் கொண்ட அவதாரம். மரபணுவில் உயர்ந்த ஓர் அவதாரம்!

வாசு. எதுவும் பேச முடியாமல் தாயைப் பார்க்கிறான்.
“அற்புதமான தகவல் அம்மா? எப்படி இவ்வாறு நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள்?”
“ஆம் வாசு! இதுதான் உண்மை! இந்தியர்கள் நம் முன்னோர்கள் பல அற்புதமான உண்மைகளை அறிந்தே வைத்திருந்தனர். ஆனால், விஞ்ஞானம் என்ற பெயரிட்டு அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், புராணக் கதைகளாகக் கூறி வந்தனர்.

புராணங்கள் அர்த்தமுள்ளவை!

நாம் பார்க்கும் விதம்தான் எல்லாம்! புராணங்களோ, விஞ்ஞானமோ, நீங்கள் வைக்கும் பெயர் தான் வேறுபடுகிறது. உண்மை எல்லாம் ஒன்றே!

மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்கள் மிருகங்களின் வெவ்வேறு நிலைகளையும் இதர அவதாரங்கள் மனித வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளையும் சித்தரிக்கின்றன என்பது புரிகிறதா? இதனால்தான் சொல்கிறேன், “தசாவதாரம் தான் டார்வின் கொள்கைக்கு முன்னோடி என்று”… தசாவதாரத்தின் மகிமை புரிய ஆரம்பித்தது…

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவன் அவதரித்த பத்து அவதாரங்களாவன (தசாவதாரம்)

வாருங்கள்… ஆன்மீக ரீதியாக திருமாலின் 10 அவதாரங்களையும் அந்தந்த அவதாரங்களின் காரணங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

திருமாலின் பத்து அவதாரங்கள்

மச்ச அவதாரம்
கூர்ம அவதாரம்
வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமன அவதாரம்
பரசுராமர் அவதாரம்
இராம அவதாரம்
பலராம அவதாரம்
கிருஷ்ண அவதாரம்
கல்கி அவதாரம்