தர்பைப்புல் | Tharpai

தர்பைப்புல்

ஒரு காலத்தில் தம்போத்பவா என்ற மாபெரும் மன்னன் விதர்ப தேசத்தில் இருந்தான். அவன் பல புண்ணியங்களையும் செய்து கொண்டே இருந்ததினால் அவனுக்கு பெரும் வரங்கள் கிடைத்து இருந்தன. அவன் உலகெங்கும் சுற்றி அனைத்து நாடுகளையும் வென்றவன். அவனே மஹா பாரதத்தில் உத்யோக பர்வ காண்டம் 99 தில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவான். இனி அவன் வெல்வதற்கு நாடுகளே இல்லை என்ற நிலை வந்த போது அவனுடைய ராஜ குரு கூறினார் ‘மன்னா இனி நீங்கள் ஏன் பூமியில் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். தேவ லோகத்துக்குச் சென்று அங்குள்ள ரிஷி முனிவர்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். அதுவே இனி உங்கள் பெருமைக்கு தகுந்ததாக அமையும். அதைக் கேட்ட மன்னனுக்கும் ஆசை துளிர் விட்டது. ஆகா… நாம் உண்மையிலேயே மிகப் பெரிய மன்னன்…. பூமியிலேயே அனைத்தையும் வென்று
விட்ட நான் தேவலோகம் சென்று அதையும் வென்று வர வேண்டும் என எண்ணத் துவங்கினான். அப்படி எண்ணியவன் ஒரு நாள் பெரும் படையுடன் கிளம்பி தேவலோகத்துக்குச் சென்றான். படையினரை தேவலோகத்தின் வாயிலிலேயே நிற்க வைத்தப் பின் நேராக பிரும்மாவிடம் சென்றவன் தான் வந்தக் காரியத்தைக் குறித்துக் கூற பிரும்மா அவனுடைய அகங்காரத்தை அடக்க முடிவு செய்தார். பிரும்மா கூறினார் தம்போத்பவா நீ இன்னமும் பூமியில் உள்ள சிலரை வெற்றி கொள்ளாமல் இங்கு வந்து என்னப் பயன்… போ… முதலில் அங்கு சென்று அவர்களை வென்றுவிட்டு வா. தம்போத்பவா வியப்புற்றான். பூமியில் நான் வெல்ல இனியதும் யாரும் இருக்கின்றார்களா என ஆச்சர்யமாக அவரிடம் கேட்க பிரும்மா பூமியில் வட பகுதியில் இருந்த கந்தமாதனா என்ற பகுதியில் உள்ள நதிக்கரையில் அமர்ந்து இருந்த இரண்டு தேவ முனிவர்களை வெற்றிக் கொண்டு விட்டு தேவலோகத்துக்கு வருமாறு கூறி அனுப்பினார்.

தம்போத்பவாவும் உடனே கிளம்பி கந்தமாதனாவிற்குச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தபடி தவத்தில் இருந்த இரண்டு முனிவர்களைப் பார்த்தான். இவர்களையா நான் வெல்ல வேண்டும்? பிரும்மாவிற்கு புத்தி பேதலித்து விட்டதா என்று எண்ணியவன் அவர்கள் எதிரில் சென்று நின்று கொண்டு அவர்களுடைய தவத்தைக் கலைத்தான். கண்களை விழித்தவர்களிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டப் பின்னர் அவர்கள் தம்முடன் சண்டை இட்டு ஜெயிக்க வேண்டும் இல்லை என்றால் சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும் என இறுமாப்புடன் கூறினான். அவர்களை சுற்றி தர்பைப் புல் வைக்கப்பட்டு இருந்தது. முனிவர்கள் கூறினார்கள் ‘தம்போத்பவா நீ ஒரு பெரிய மன்னன். ஆனால் நாங்கள் முனிவர்கள். நாங்கள் ஏன் உன்னுடன் சண்டைப் போட வேண்டும். நீ உன் வழியில் போ நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம் என்றார்கள். ஆனால் அது மன்னன் மனதில் ஏறவில்லை. அவர்களின் தவத்தை இடையூறு செய்த வண்ணம் வாளை உறுவி வைத்துக் கொண்டு அவர்களை சண்டைக்கு அழைத்தான்.

எத்தனை நேரம் தான் விதண்டாவாதம் செய்வது என எண்ணிய முனிவர்கள் தமது முன்னால் வைத்து இருந்த ஒரு கட்டு தர்பை புற்களை எடுத்து அவன் மீது வீசினார்கள். அந்த ஒரு கற்று தர்பைப் புல் பல கற்றுகளாக மாறி அவனைத் தாக்கத் துவங்கின. அவன் தனது வாளினால் தர்பைகளை வெட்ட வெட்ட அவை பெருகிக் கொண்டே போனது மட்டும் அல்லாமல் அவன் கேடயங்களும் அவன் மீது விழுந்து கொண்டு அடிகளை தடுக்க முடியாமல் திணறி இரண்டாக உடைந்து விழுந்தது. தர்ப்பைப் புற்கள் அவன் உடலெங்கும் கீறிக் கீறிக் காயப்படுத்த அவனால் சண்டை இட முடியாமல் அப்படியே முனிவர்கள் முன்னால் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். உடலெங்கும் ரத்தம் வழிய தமது காலடியில் விழுந்து கிடந்தவனை எழுப்பினார்கள் முனிவர்கள். உடல் முழுதும் வலியால் துடி துடித்தபடிக் கிடந்தவன் எழுந்திருந்தான். முனிவரே ஒரு தர்பைப் புல் என் அனைத்து ஆயுதங்களையும் வலுவிழக்கச் செய்து விட்டதை எண்ணி வியக்கின்றேன். அதற்கு அத்தனை மகிமையா? என்று கேட்டதும் அவன் முன்னால் நாரத முனிவர் அமைதியாக சிரித்துக் கொண்டே காட்சி தந்தார். மீண்டும் மீண்டும் அவரிடம் தனது அறியாமையினால் ஏற்பட்ட தவறைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டதும் நாரதர் கூறினார் மன்னா அகங்காரம் தன்னையே அழிக்கும் என்பது பழமொழி. அதற்கு உதாரணமாக நீயே இருக்கிறாய். தர்பையை என்ன அத்தனை கேவலமாக நினைத்து விட்டாயா?

தட்சிணாமூர்த்தி கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் . அவருடைய வலது கால் ‘அபஸ்மரா’ என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அது அறியாமையை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார். அவரது கீழ் வலது கை மூலம் ஞான முத்திரையை காட்டுவார். அந்த தக்ஷிணாமூர்த்தி யார் தெரியுமா? சிவபெருமான்… ஆமாம் அவர் சிவபெருமானின் ஒரு ரூபம் ஆவார்.

அப்படிப்பட்டவர் கையில் உள்ள தர்பையை வேறு யாரிடமாவது காண முடியுமா? அப்படிப்பட்டவர் கையில் வைத்துள்ள தர்பையை நீ வெறும் புல்லாகவா நினைக்கின்றாய்?. அதை எதற்காக அவர் தனது கையில் வைத்து இருக்கின்றார் தெரியுமா? தியான நிலையில் உள்ளவர் கையில் ஆயுதம் வைத்து இருக்கக் கூடாது. ஆனால் அதே சமயத்தில் தியானத்தை தடுக்க வருபவர்களை ஆயுதமாக அது மாறி தாக்க வல்லமைக் கொண்ட சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளதே தர்பை என்பதை அவர் மூலம் அறிய முடிகின்றது. நமக்கு ஏற்படும் பல கெடுதல்களையும் போக்கவல்லது தர்பை என்று வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. அதனால் தான் நல்லதோ, கெட்டதோ, இரண்டு காரியங்களை செய்யும் போதும் தர்பையினால் ஆனா பவித்ரம் {மோதிரத்தை} ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொண்டே காரியங்களை செய்கிறோம். ஹோம குண்டங்களில், யாக குண்டங்களில் நான்கு பக்கமும் தர்பையை வைப்பது அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த கார்யம் செய்யும் போது அதை ஏன் விரலில் ஒரு மோதிரம் போல போட்டுக் கொள்கின்றோம் தெரியுமா? அந்த நேரத்தில் விரல் என்பது நமது உடலை குறிக்கின்றது. ஆகவே நமது உடலை சுற்றி நம்மைக் காப்பது ஒரு சக்தி. அந்த சக்தியாகவே பாவிக்கப்படுவதே தர்ப்பை.

தெய்வத்தன்மையும் தன்னுள்ளே கொண்டுள்ளதாக தர்பையானது கருதப்படுகிறது. எளிய முனிவர்களுக்குக் கவசமாக உள்ள அப்படிப்பட்ட தர்பையே சக்தியாக உருவெடுத்து உன்னைத் தாக்கி அழித்தது. இப்படியாக நாரதர் கூறியதைக் கேட்ட தம்போத்பாவா வெட்கி தலைக் குனிந்தான். அவரை வணங்கி துதித்து விட்டு நாட்டிற்குத் திரும்பியவன் முதலில் ராஜ குருவை அரண்மனையில் இருந்து துரத்தி அடித்தான். அடுத்து தனது அனைத்து அரசையும் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டு தக்ஷிணாமூர்த்தியின் பக்தனாக மாறி தனது கடைசி காலத்தை அமைதியாக கழித்தான்…