2023 சனிபெயர்ச்சி | மகரம் ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

மகர ராசி அன்பர்களே…!

மகர ராசிக்கு ஜென்ம இடத்தில் இருந்துவந்த சனி பகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் மனையில் புதிய வீடு கட்டுவதற்கான எண்ணங்கள் மேம்படும். உங்களின் மீதான வதந்திகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உயர் கல்வி சார்ந்த சிந்தனைகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த இடைவெளிகள் மறையும். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடலாம்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பங்கு சந்தை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். இருக்கின்ற துறைகளில் முயற்சிகளையும் உழைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் படிப்படியாக முன்னேறுவீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். முன்ஜாமீன் போடுவது போன்ற செயல்களை தவிர்க்கவும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான லாப ஸ்தானத்தை பார்ப்பதினால் பயணம் தொடர்பான விஷயங்களில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். மனதளவில் புதுவகையான தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு நன்மைகளை அடைவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தனித்தன்மையை வெளிப்படுத்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள்.

சனி ராசிக்கு இரண்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் பலவிதமான குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் உதயமாகும். வருமானத்தை பெருக்குவதற்கான யோசனைகள் பிறக்கும். பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்கு தோன்றலாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கவும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள். உற்றார், உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

பெண்களுக்கு திட்டமிட்ட காரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பொருளாதாரம் சாதகமாக இருக்கும். மறைமுகமான எதிரிகளை அறிந்து கொள்வீர்கள். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு பலமுறை புரிந்து படிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மையை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.

பொருளாதாரம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம். தேவைக்கேற்ப தனவரவுகள் இருந்தாலும் அதைப்பற்றி விவரங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். கடன் தொடர்பான விஷயத்தில் பலமுறை யோசித்து செயல்படவும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். கண், பல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். குதிகால் மற்றும் கணுக்களில் வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பழகும் தன்மையில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். தொழில் சார்ந்த துறைகளில் மந்தமான சூழ்நிலைகள் விலகும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்கள் நேரிடலாம். மேலும் செயல்களில் அலட்சியமின்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு

துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைதோறும் வழிபட ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட செல்வமும், செல்வாக்கும் மேம்படும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.