2023 சனிபெயர்ச்சி | மிதுன ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

மிதுன ராசி அன்பர்களே!

கூர்மையான சிந்தனைத் திறன் உடைய உங்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இங்கே பார்க்கலாம். மிதுன ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிலும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வீட்டில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறைந்து உற்சாகம் பிறக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

மறுமணம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தர்ம காரியங்களுக்கு உண்டான உதவிகளை செய்வீர்கள்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

வீடு மற்றும் வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். எண்ணிய பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான ரண ரோக ஸ்தானத்தை பார்ப்பதினால் பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும்.

வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை கையாளுவதில் கவனம் வேண்டும்.

சனி ராசிக்கு ஒன்பதாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையான சூழல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் மனதில் தோன்றும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிக்கேற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மாணவர்கள் பாடங்களில் முழுமையான கவனத்துடன் இருக்க வேண்டும். நண்பர்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தெளிவுகள் மனதில் ஏற்படும். விளையாட்டுத்துறையில் திறமைக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்.

பொருளாதாரம்

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். விலகி இருந்த நட்புகள் விரும்பி வருவார்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பத்திரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்கான எண்ணங்கள் மேம்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிறு தூர நடை பயணங்களின் மூலம் உடலளவில் சில மாற்றங்கள் காணப்படும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பேச்சுக்களில் தெளிவும் செயல்பாடுகளில் கவனமும் தொழில் சார்ந்த நெருக்கடிகளும் குறையும்.

கவனம்

நடைபெறவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் சிறுதொழில் சார்ந்த செயல்பாடுகளில் புதிய அனுபவமும், வித்தியாசமான சிந்தனைகளும் உண்டாகும். மேலும் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

சனிக்கிழமைதோறும் விநாயகரை வழிபட தடைகள் விலகும். புதன்கிழமைதோறும் அருகில் இருக்கும் பெருமாளை வழிபட சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.