Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: அருளியல்பு

  1. அருளியல்பு

ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்
றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1.

பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்
மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2.

ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்த
தீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3.

எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்
வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4.

சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்
மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5.

வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்
வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6.

சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்
பூரணதே யத்திற் பொருந்துநாள் எந்நாளோ. 7.

கன்றுமன வெப்பக் கலக்கமெலாந் தீரஅருள்
தென்றல்வந்து வீசுவெளி சேருநாள் எந்நாளோ. 8.

கட்டுநமன் செங்கோல் கடாவடிக்குங் கோலாக
வெட்ட வெளிப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 9.

சாலக் கபாடத் தடைதீர எம்பெருமான்
ஓலக்க மண்டபத்துள் ஓடுநாள் எந்நாளோ. 10.

விண்ணவன்தா ளென்னும் விரிநிலா மண்டபத்தில்
தண்ணீர் அருந்தித் தளர்வொழிவ தெந்நாளோ. 11.

வெய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலறத்
துய்ய அருளில துயிலுநாள் எந்நாளோ. 12.

வெய்ய பிறவிவெயில் வெப்பமெல்லாம் விட்டகல
ஐயனடி நீழல் அணையுநாள் எந்நாளோ. 13.

வாதைப் பிறவி வளைகடலை நீந்தஐயன்
பாதப் புணைஇணையைப் பற்றுநாள் எந்நாளோ. 14.

ஈனமில்லா மெய்பொருளை இம்மையிலே காணவெளி
ஞானமெனும் அஞ்சனத்தை நான்பெறுவ தெந்நாளோ. 15.

எல்லாம் இறந்தவிடத் தெந்தைநிறை வாம்வடிவைப்
புல்லாமற் புல்லிப் புணருநாள் எந்நாளோ. 16.

சடத்துளுயிர் போலெமக்குத் தானுயிராய் ஞானம்
நடத்துமுறை கண்டுபணி நாம்விடுவ தெந்நாளோ. 17.

எக்கணுமாந் துன்ப இருட்கடலை விட்டருளால்
மிக்ககரை ஏறி வெளிப்படுவ தெந்நாளோ. 18.