- தந்தைதாய்
தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை
சகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதே
இந்திரசா லங்கனவு கானல் நீராய
இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1.
என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம்
யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்கா
அன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரி
ஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2.
அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றை
அறியாத சிறியேன்நான் அதனால் முத்திக்
கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங்
கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3.
கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக்
கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன்
விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம்
விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா லன்றோ. 4.
ஓவென்ற சுத்தவெளி யொன்றே நின்றிங்
குயிரையெல்லாம் வம்மினென உவட்டா இன்பத்
தேவென்ற நீகலந்து கலந்து முத்தி
சேர்த்தனையேல் குறைவாமோ செகவி லாசம். 5.
செகத்தையெல்லாம் அணுவளவுஞ் சிதறா வண்ணஞ்
சேர்த்தணுவில் வைப்பைஅணுத் திரளை எல்லாம்
மகத்துவமாப் பிரமாண்ட மாகச் செய்யும்
வல்லவா நீநினைத்த வாறே எல்லாம். 6.
சொல்லாலே வாய்து டிப்பதல்லால் நெஞ்சந்
துடித்திருகண் நீரருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே இருந்தநெஞ்சுங் கல்லால் முக்கட்
கனியேநெக் குருகிடவுங் காண்பேன் கொல்லோ. 7.