Thayumanavar Songs – தன்னையொருவர்

23. தன்னையொருவர்

தன்னை யொருவர்க் கறிவரிதாய்த்
தானே தானாய் எங்குநிறைந்
துன்னற்கரிய பரவெளியாய்
உலவா அமுதாய் ஒளிவிளக்காய்
என்னுட் கலந்தாய் யானறியா
திருந்தாய் இறைவா இனியேனும்
நின்னைப் பெருமா றெனக்கருளாம்
நிலையைக் கொடுக்க நினையாயோ. 1.

நினையு நினைவுக் கெட்டாத
நெறிபெற் றுணர்ந்த நெறியாளர்
வினையைக் கரைக்கும் பரமஇன்ப
வெள்ளப் பெருக்கே நினதருளால்
மனைவி புதல்வர் அன்னைபிதா
மாடு வீடென் றிடுமயக்கந்
தனையும் மறந்திங் குனைமறவாத்
தன்மை வருமோ தமியேற்கே. 2.

வரும்போம் என்னும் இருநிலைமை
மன்னா தொருதன் மைத்தாகிக்
கரும்போ தேனோ முக்கனியோ
என்ன என்னுள் கலந்துநலந்
தரும்பே ரின்பப் பொருளேநின்
தன்னை நினைந்து நெக்குருகேன்
இரும்போ கல்லோ மரமோஎன்
இதயம் யாதென் றறியேனே. 3.

அறியுந் தரமோ நானுன்னை
அறிவுக் கறிவாய் நிற்கையினால்
பிறியுந் தரமோநீ என்னைப்
பெம்மா னேபே ரின்பமதாய்ச்
செறியும் பொருள்நீ நின்னையன்றிச்
செறியாப் பொருள்நான் பெரும்பேற்றை
நெறிநின் றொழுக விசாரித்தால்
நினக்கோ இல்லை எனக்காமெ. 4.

எனதென் பதும்பொய் யானெனல்பொய்
எல்லா மிறந்த இடங்காட்டும்
நினதென் பதும்பொய் நீயெனல்பொய்
நிற்கும் நிலைக்கே நேசித்தேன்
மனதென் பதுமோ என்வசமாய்
வாரா தைய நின்னருளோ
தனதென் பதுக்கும் இடங்காணேன்
தமியேன் எவ்வா றுய்வேனே. 5.

உய்யும் படிக்குன் திருக்கருணை
ஒன்றைக் கொடுத்தால் உடையாய்பாழ்ம்
பொய்யும் அவாவும் அழுக்காறும்
புடைபட் டோடும் நன்னெறியாம்
மெய்யும் அறிவும் பெறும்பேறும்
விளங்கு மெனக்குன் னடியார்பால்
செய்யும் பணியுங் கைகூடுஞ்
சிந்தைத் துயருந் தீர்ந்திடுமே. 6.

சிந்தைத் துயரென் றொருபாவி
சினந்து சினந்து போர்முயங்க
நிந்தைக் கிடமாய்ச் சுகவாழ்வை
நிலையென் றுணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப் படியுன் அருள்வாய்க்கும்
எனக்கப் படிநீ அருள்செய்வாய்
பந்தத் துயரற் றவர்க்கெளிய
பரமா னந்தப் பழம்பொருளே. 7.

பொருளைப் பூவைப் பூவையரைப்
பொருளென் றெண்ணும் ஒருபாவி
இருளைத் துரந்திட் டொளிநெறியை
என்னுட் பதிப்ப தென்றுகொலோ
தெருளத் தெருள அன்பர் நெஞ்சந்
தித்தித் துருகத் தெவிட்டாத
அருளைப் பொழியுங் குணமுகிலே
அறிவா னந்தத் தாரமுதே. 8.

ஆரா அமிர்தம் விரும்பினர்கள்
அறிய விடத்தை அமிர்தாக்கும்
பேரா னந்தச் சித்தனெனும்
பெரியோய் ஆவிக் குரியோய்கேள்
காரார் கிரக வலையினிடைக்
கட்டுண் டிருந்த களைகளெலாம்
ஊரா லொருநாட் கையுணவேற்
றுண்டால் எனக்கிங் கொழிந்திடுமே. 9.

எனக்கென் றிருந்த உடல்பொருளும்
யானும் நினவென் றீந்தவண்ணம்
அனைத்தும் இருந்தும் இலவாகா
அருளாய் நில்லா தழிவழக்காய்
மனத்துள் புகுந்து மயங்கவுமென்
மதிக்குட் களங்கம் வந்ததென்னோ
தனக்கொன் றுவமை அறநிறைந்த
தனியே தன்னந் தனிமுதலே. 10.