Thayumanavar Songs – பைங்கிளிக்கண்ணி

  1. பைங்கிளிக்கண்ணி

அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்
சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1.

அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்
சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2.

ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்
பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3.

ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து
சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4.

ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்
கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5.

இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்த
அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6.

உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறி
சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே. 7.

ஊருமிலார் பேருமிலார் உற்றார்பெற் றாருடனே
யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே. 8.

ஊறைப்பா ராமல்எனக் குள்ளகத்து நாயகனார்
சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே. 9.

என்று விடியும் இறைவாவோ என்றென்று
நின்றநிலை எல்லாம் நிகழ்த்தாய்நீ பைங்கிளியே. 10.

எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச்
சிந்தைமட லாலெழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே. 11.

கண்ணுள்மணி போல்இன்பங் காட்டி எனைப்பிரிந்த
திண்ணியரும் இன்னம்வந்து சேர்வாரோ பைங்கிளியே. 12.

ஏடார் மலர்சூடேன் எம்பெருமான் பொன்னடியாம்
வாடா மலர்முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே. 13.

கல்லேன் மலரேன் கனிந்தஅன்பே பூசைஎன்ற
நல்லோர்பொல் லாஎனையும் நாடுவரோ பைங்கிளியே. 14.

கண்டதனைக் கண்டு கலக்கந் தவிரெனவே
விண்டபெரு மானையும்நான் மேவுவனோ பைங்கிளியே. 15.

காணாத காட்சி கருத்துவந்து காணாமல்
வீணாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே. 16.

காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்னஅருள்
வேந்தன் எமைஇழுத்து மேவுவனோ பைங்கிளியே. 17.

காதலால் வாடினதுங் கண்டனையே எம்மிறைவர்
போதரவா யின்பம் புசிப்பேனோ பைங்கிளியே. 18.

கிட்டிக்கொண் டன்பருண்மை கேளாப் பலவடிகொள்
பட்டிக்கும் இன்பமுண்டோ சொல்லாய்நீ பைங்கிளியே. 19.

கிட்டூராய் நெஞ்சிற் கிளர்வார் தழுவஎன்றால்
நெட்டூர ராவர்அவர் நேசமென்னோ பைங்கிளியே. 20.

கூறுங் குணமுமில்லாக் கொள்கையினார் என்கவலை
ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே. 21.

சின்னஞ் சிறியேன்றன் சிந்தைகவர்ந் தார்இறைவர்
தன்னந் தனியே தவிப்பேனோ பைங்கிளியே. 22.

சிந்தை மருவித் தெளிவித் தெனையாள
வந்தகுரு நாதன்அருள் வாய்க்குமோ பைங்கிளியே. 23.

சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை
அல்லும் பகலும் அணைவேனோ பைங்கிளியே. 24.

தற்போதத் தாலே தலைகீழ தாகஐயன்
நற்போத இன்புவர நாட்செலுமோ பைங்கிளியே. 25.

தன்னை அறியுந் தருணந் தனிற்றலைவர்
என்னையணை யாதவண்ணம் எங்கொளித்தார் பைங்கிளியே. 26.

தாங்கரிய மையலெல்லாந் தந்தெனைவிட் டின்னருளாம்
பாங்கியைச்சேர்ந் தார்இறைக்குப் பண்போசொல் பைங்கிளியே. 27.

தாவியதோர் மர்க்கடமாந் தன்மைவிட்டே அண்ணலிடத்
தோவியம்போல் நிற்கின்எனை உள்குவரோ பைங்கிளியே. 28.

தீராக் கருவழக்கைத் தீர்வையிட்டங் கென்னைஇனிப்
பாரேறா தாண்டானைப் பற்றுவனோ பைங்கிளியே. 29.

தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்
பாங்குகண்டால் அன்றோ பலன்காண்பேன் பைங்கிளியே. 30.

தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத
எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே. 31.

நன்னெஞ்சத் தன்பரெல்லாம் நாதரைச்சேர்ந் தின்பணைந்தார்
வன்னெஞ்சத் தாலேநான் வாழ்விழந்தேன் பைங்கிளியே. 32.

நானே கருதின்வர நாடார்சும் மாஇருந்தால்
தானே அணைவரவர் தன்மைஎன்னோ பைங்கிளியே. 33.

நீர்க்குமிழி போன்றவுடல் நிற்கையிலே சாசுவதஞ்
சேர்க்கஅறி யாமல் திகைப்பேனோ பைங்கிளியே. 34.

நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின்வே றென்றணையார்
வஞ்சகத்தார் அல்லரவர் மார்க்கமென்னோ பைங்கிளியே. 35.

பன்முத் திரைச்சமயம் பாழ்படக்கல் லாலடிவாழ்
சின்முத் திரைஅரசைச் சேர்வேனோ பைங்கிளியே. 36.

பச்சைகண்ட நாட்டிற் பறக்கும்உனைப் போற்பறந்தேன்
இச்சைஎல்லாம் அண்ணற் கியம்பிவா பைங்கிளியே. 37.

பாசபந்தஞ் செய்ததுன்பம் பாராமல் எம்மிறைவர்
ஆசைதந்த துன்பமதற் காற்றேன்நான் பைங்கிளியே. 38.

பாராசை அற்றிறையைப் பற்றறநான் பற்றிநின்ற
பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே. 39.

பேதைப் பருவத்தே பின்தொடர்ந்தென் பக்குவமுஞ்
சோதித்த அண்ணல்வந்து தோய்வாரோ பைங்கிளியே. 40.

பைம்பயிரை நாடும்உன்போற் பார்பூத்த பைங்கொடிசேர்
செம்பயிரை நாடித் திகைத்தேன்நான் பைங்கிளியே. 41.

பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர்
மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. 42.

பொய்ப்பணிவேண் டேனைப் பொருட்படுத்தி அண்ணலென்பால்
மெய்ப்பணியுந் தந்தொருகால் மேவுவனோ பைங்கிளியே. 43.

மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎ லாமுறங்குங்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே. 44.

மட்டுப்படாத மயக்கமெல்லாந் தீரஎன்னை
வெட்டவெளி வீட்டில்அண்ணல் மேவுவனோ பைங்கிளியே. 45.

மாலைவளர்ந் தென்னை வளர்த்திறைவர் பன்னெறியாம்
பாலைவனத் தில்விட்ட பாவமென்னோ பைங்கிளியே. 46.

மெய்யில்நோய் மாற்றவுழ்தம் மெத்தவுண்டெம் அண்ணல்தந்த
மையல்நோய் தீர்க்க மருந்தும்உண்டோ பைங்கிளியே. 47.

மேவுபஞ்ச வண்ணமுற்றாய் வீண்சிறையால் அல்லலுற்றாய்
பாவிபஞ்ச வண்ணம் பகர்ந்துவா பைங்கிளியே. 48.

வாய்திறவா வண்ணமெனை வைத்தாண்டார்க் கென்துயரை
நீதிறவாச் சொல்லின் நிசமாங்காண் பைங்கிளியே. 49.

வாட்டாப் படாத மவுனஇன்பங் கையாலே
காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே. 50.

வாரா வரவாக வந்தருளும் மோனருக்கென்
பேராசை எல்லாம்போய்ப் பேசிவா பைங்கிளியே. 51.

விண்ணவர்தம் பாலமுதம் வேப்பங்கா யாகஎன்பால்
பண்ணியதெம் அண்ணல்மயல் பார்த்தாயோ பைங்கிளியே. 52.

விண்ணுள் வளியடங்கி வேறற்ற தென்னஅருள்
கண்ணுள் அடங்கிடவுங் காண்பேனோ பைங்கிளியே. 53.

விண்ணார் நிலவுதவழ் மேடையிலெல் லாருமுற
மண்ணான வீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே. 54.

உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந்தென் கள்ளமெல்லாம்
வள்ளல்அறிந் தால்எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே. 55.

ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரைநான்
தாகத்தின் வண்ணந் தழுவனோ பைங்கிளியே. 56.

தானே சுபாவந் தலைப்படநின் றான்ஞான
வானோ னவரும் வருவாரோ பைங்கிளியே. 57.

கள்ளத் தலைவரவர் கைகாட்டிப் பேசாமல்
உள்ளத்தில் வந்த உபாயமென்னோ பைங்கிளியே. 58.