திருப்புகழ் பாடல் 19 – திருப்பரங்குன்றம்
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு …… மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் …… தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு …… தொழில்தானே
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ …… துளதோதான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு …… வடிவேலா
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி …… மருகோனே
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ டும்படை விடுசர வணபவ
திறற்கு கன்குரு பரனென வருமொரு …… முருகோனே
செழித்த தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய …… பெருமாளே.