திருப்புகழ் பாடல் 21 – திருச்செந்தூர்
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா …… தனதான
அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ …… ரறியீரோ
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா …… துயில்வாரா
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே …… னிதுபோதா
திங்கு நின்றதென் வீடே வாண
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா …… தருள்வாயே
மங்கு லின்புறு வானாய் வானு
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா …… எரிதீயாய்
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் …… மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் …… மருகோனே
ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் …… பெருமாளே.