திருப்புகழ் பாடல் 108 – பழநி
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத் …… தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் சேலை யுடுத்திட்
டலர்குழ லோதிக் கோதி முடித்துச் …… சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்
டகில்புழு காரச் சேறு தனத்திட் …… டலர்வேளின்
சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத்
தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் …… டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்
றுயரற வேபொற் பாதமெ னக்குத் …… தருவாயே
கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் …… தொடுவோனே
கெருவித கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் …… தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகைம யிற்பொற் …… பரியோனே
பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் …… பெருமாளே.