திருப்புகழ் பாடல் 116 – பழநி
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன …… தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி …… லதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு …… வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோ த அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக …… மெலிவானாள்
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை …… வருவாயே
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் …… மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை …… யருள்பாலா
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக …… மயில்வீரா
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் …… பெருமாளே.