திருப்புகழ் பாடல் 138 – பழநி
தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான …… தனதான
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் …… உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க …… ளதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான …… வுபதேசந்
தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறு
திருவடி யெனக்கு நேர்வ …… தொருநாளே
கெலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு
குரகத முகத்தர் சீய …… முகவீரர்
குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை …… விடுவோனே
பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு …… மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் …… பெருமாளே.