Thiruppugazh Song 142 – திருப்புகழ் பாடல் 142

திருப்புகழ் பாடல் 142 – பழநி

தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் …… தனதான

கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்துமணத் திதத்துமுகக்
கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் …… தலமேராய்

கவட்டையுமெத் தடக்கிமதர்த்
தறக்கெருவித் திதத்திடுநற்
கலைச்சவுளித் தலைக்குலவிக் …… களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்
தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
றவித்திழிசொற் பவக்கடலுற் …… றயர்வாலே

சலித்தவெறித் துடக்குமனத்
திடக்கனெனச் சிரிக்கமயற்
சலத்தின்வசைக் கிணக்கமுறக் …… கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
திருக்குதனக் குடத்தினறைப்
புயத்தவநற் கருத்தையுடைக் …… குகவீரா

பொருப்பரசற் கிரக்கமொடுற்
றறற்சடிலத் தவச்சிவனிற்
புலச்சிதனக் கிதத்தைமிகுத் …… திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதிற்
சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் …… துடையோனே

செருக்கொடுநற் றவக்கமலத்
தயற்குமரிக் கருட்புரிசைத்
திருப்பழநிக் கிரிக்குமரப் …… பெருமாளே.