திருப்புகழ் பாடல் 154 – பழநி
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத் …… தனதான
சகடத்திற் குழையிட் டெற்றிக்
குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
களபப்பொட் டுதலிட் டத்திக் …… குவடான
தனதுத்திப் படிகப் பொற்பிற்
டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் …… கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் …… கிடைநாளிற்
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் …… சடமாமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் …… டிடிபேரி
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
சுரர் பொற்புச் சொரியக் கைத்தொட் …… டிடும்வேலா
பகலைப்பற் சொரியத் தக்கற்
பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
குருவொத்துப் பொருளைக் கற்பித் …… தருள்வோனே
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் …… பெருமாளே.