திருப்புகழ் பாடல் 178 – பழநி
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன …… தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு …… மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ …… வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் …… மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம …… தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமரர்புரி கின்ற கூரிய …… வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண …… முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியே
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் …… மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய …… பெருமாளே.