திருப்புகழ் பாடல் 197 – பழநி
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானா தனாதன …… தனதான
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக …… மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மோலான வாயித …… ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன …… நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் …… தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் …… விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு …… முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி …… விடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் …… பெருமாளே.