திருப்புகழ் பாடல் 294 – திருத்தணிகை
ராகம் – மோகனம்; தாளம் – கண்ட த்ருவம் (17)
(எடுப்பு /5/5 0 /5)
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்ததன …… தனதான
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த …… மலராலே
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு ……நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி …… தளராதே
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் …… வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த …… கதிர்வோலா
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த …… மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த …… கழலோனே
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த …… பெருமாளே.