திருப்புகழ் பாடல் 72 – திருச்செந்தூர்
ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன …… தனதான
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது …… மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் …… தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடுவேற் குரிய …… நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல …… மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற …… முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை …… விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித …… வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய …… பெருமாளே.