திருப்புகழ் பாடல் 75 – திருச்செந்தூர்
ராகம் – ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன …… தனதான
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
பங்க வாண்முக முடுகிய நெடுகிய …… திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி லாதொரு பகடது முதுகினில் …… யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெ …… னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன் …… வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
வந்த தூயவெண் முறுவலு மிருகுழை …… யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
குன்ற வாணர்த மடமகள் தடமுலை
மந்த ராசல மிசைதுயி லழகிய …… மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் …… மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் …… பெருமாளே.