திருப்புகழ் பாடல் 39 – Thiruppugazh Song 39 – கண்டுமொழி கொம்பு: Kandu Mozhi Kombu

திருப்புகழ் பாடல் 39 – திருச்செந்தூர்

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த …… தனதான

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று …… பலகாலும்

கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்று …… விதியாலே

பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து …… புகழோதும்

பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்ச …… லெனவாராய்

வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய டைந்து சந்தின் …… மிக்முழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு டன்க லந்த …… மணிமார்பா

திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு னைந்து துங்க …… மயில்மீதே

சென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர் வந்த மர்ந்த …… பெருமாளே.