Thayumanavar Songs – எனக்கெனச் செயல்

  1. எனக்கெனச் செயல்

எனக்கெ னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்
தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்
மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீ
நினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம். 1.

உளவ றிந்தெலாம் நின்செய லாமென வுணர்ந்தோர்க்
களவி லானந்தம் அளித்தனை அறிவிலாப் புன்மைக்
களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்
தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய். 2.

என்னைத் தான்இன்ன வண்ணமென் றறிகிலா ஏழை
தன்னைத் தான்அறிந் திடஅருள் புரிதியேல் தக்கோய்
பின்னைத் தானின்றன் அருள்பெற்ற மாதவப் பெரியோர்
நின்னைத் தான்நிக ரார்என வாழ்த்துவர் நெறியால். 3.

ஏது மின்றித்தன் அடியிணைக் கன்புதான் ஈட்டுங்
காத லன்டர்க்குக் கதிநிலை ஈதெனக் காட்டும்
போத நித்திய புண்ணிய எண்ணரும் புவன
நாத தற்பர நானெவ்வா றுகுய்வேன் நவிலாய். 4.

வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும்
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும்
நீத நிர்க்குண நினையன்றி ஒன்றும்நான் நினையேன். 5.

நெறிகள் தாம்பல பலவுமாய் அந்தந்த நெறிக்காஞ்
செறியுந் தெய்வமும் பலபல வாகவுஞ் செறிந்தால்
அறியுந் தன்மையிங் காருனை அறிவினால் அறந்தோர்
பிறியுந் தன்மையில் லாவகை கலக்கின்ற பெரியோய். 6.

பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்ததிற் பிறங்கும்
உரிய பல்லுயிர் எத்தனை அமைத்தவைக் குறுதி
வருவ தெத்தனை அமைத்தனை அமைத்தருள் வளர்க்கும்
அரிய தத்துவ எனக்கிந்த வணைமேன் அமைத்தாய். 7.

கணம் தேனுநின் காரணந் தன்னையே கருத்தில்
உணரு மாதவர்க் கானந்தம் உதவினை யொன்றுங்
குணமி லாதபொய் வஞ்சனுக் கெந்தைநிர்க் குணமா
மணமு லாமலர்ப் பதந்தரின் யாருனை மறுப்பார். 8.

கன்னல் முக்கனி கண்டுதேன் சருக்கரை கலந்த
தென்ன முத்தியிற் கலந்தவர்க் கின்பமா யிருக்கும்
நன்ன லத்தநின் நற்பதந் துணையென நம்பச்
சொன்ன வர்க்கெனா லாங்கைம்மா றில்லைஎன் சொல்வேன். 9.

தந்தை தாய்தமர் மகவெனும் அவையெலாஞ் சகத்தில்
பந்த மாம்என்றே அருமறை வாயினாற் பகர்ந்த
எந்தை நீஎனை இன்னமவ் வல்லலில் இருத்தில்
சிந்தை தான்தெளிந் தெவ்வணம் உய்வணஞ் செப்பாய். 10.

துய்யன் தண்ணருள் வடிவினன் பொறுமையால் துலங்கும்
மெய்யன் என்றுனை ஐயனே அடைந்தனன் மெத்த
நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றைநூ றாக்கும்
பொய்ய னென்றெனைப் புறம்விடின் என்செய்வேன் புகலாய். 11.

ஒன்ற தாய்ப்பல வாய்உயிர்த் திரட்கெலாம் உறுதி
என்ற தாய்என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய
நின்ற தாய்நிலை நின்றிடும் அறிஞஎன் நெஞ்சம்
மன்ற தாய்இன்ப வுருககொடு நடித்திடின் வாழ்வேன். 12.

தனியி ருந்தருட் சகசமே பொருந்திடத் தமியேற்
கினியி ரங்குதல் கடனிது சமயமென் னிதயக்
கனிவும் அப்படி யாயின தாதலாற் கருணைப்
புனித நீயறி யாததொன் றுள்ளதோ புகலாய். 13.

திருந்து சீரடித் தாமரைக் கன்புதான் செய்யப்
பொருந்து நாள்நல்ல புண்ணியஞ் செய்தநாள் பொருந்தா(து)
இருந்த நாள்வெகு தீவினை யிழைத்தநாள் என்றால்
அருந்த வாவுனைப்பொருந்துநாள் எந்தநாள் அடிமை. 14.

பின்னும் முன்னுமாய் நடுவுமாய் யாவினும் பெரிய
தென்னுந் தன்மையாய் எவ்வுயிர்த் திரளையும் இயக்கி
மன்னுந் தண்ணருள் வடிவமே உனக்கன்பு வைத்துந்
துன்னும் இன்னல்ஏன் யானெனும் அகந்தையேன் சொல்லாய். 15.

மின்னை யன்னபொய் வாழ்க்கையே நிலையென மெய்யாம்
உன்னை நான்மறந் தெவ்வணம் உய்வணம் உரையாய்
முன்னை வல்வினை வேரற முடித்தென்று முடியாத்
தன்னைத் தன்னடி யார்க்கருள் புரிந்திடும் தக்கோய். 16.

எம்ப ராபர எம்முயிர்த் துணைவஎன் றிறைஞ்சும்
உம்பர் இம்பர்க்கும் உளக்கணே நடிக்கின்றாய் உன்றன்
அம்பொன் மாமலர்ப் பதத்தையே துணையென அடிமை
நம்பி னேன் இனிப் புரப்பதெக் காலமோ நவிலாய். 17.

பாடி யாடிநின் றிரங்கிநின் பதமலர் முடிமேல்
சூடி வாழ்ந்தனர் அமலநின் னடியர்யான் தொழும்பன்
நாடி யேஇந்த உலகத்தை மெய்யென நம்பித்
தேடி னேன்வெறுந் தீமையே என்னினிச் செய்வேன். 18.

களவு வஞ்சனை காமமென் றிவையெலாங் காட்டும்
அளவு மாயைஇங் காரெனக் கமைத்தனர் ஐயா
உளவி லேஎனக் குள்ளவா றுணர்த்திஉன் அடிமை
வளரும் மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன். 19.

வான நாயக வானவர் நாயக வளங்கூர்
ஞான நாயக நான்மறை நாயக நலஞ்சேர்
மோன நாயக நின்னடிக் கன்பின்றி முற்றுந்
தீன னாய்அகம் வாடவோ என்செய்வேன் செப்பாய். 20.

ஏத மற்றவர்க் கின்பமே பொழிகின்ற இறையே
பாத கக்கருங் கல்மனங் கோயிலாப் பரிந்து
சூத கத்தனா யாதினும் இச்சைமேல் தோன்றும்
வாத னைக்கிட மாயினேன் எவ்வணம் வாழ்வேன். 21.

தெளிவொ டீகையோ அறிகிலான் அறிவிலான் சிறிதும்
அளியி லான்இவன் திருவருட் கயலென அறிந்தோ
எளிய னாக்கினை என்செய்வேன் என்செய்வேன் எல்லா
ஒளியு மாய்நிறை வெளியுமாய் யாவுமாம் உரவோய். 22.

கண்ணி னுள்மணி யென்னவே தொழும் அன்பர் கருத்துள்
நண்ணு கின்றநின் அருளெனக் கெந்தநாள் நணுகும்
மண்ணும் விண்ணும்மற் றுள்ளன பூதமும் மாறாப்
பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய். 23.

சகமெ லாந்தனி புரந்தனை தகவுடைத் தக்கோர்
அகமெ லாநிறைந் தானந்த மாயினை அளவில்
மகமெ லாம்புரிந் தோரைவாழ் வித்தனை மாறா
இகமெ லாமெனைப் பிறந்திடச் செய்ததேன் எந்தாய். 24.

ஏய்ந்த நல்லருள் பெற்றவர்க் கேவலாய் எளியேன்
வாய்ந்த பேரன்பு வளர்க்கவுங் கருணைநீ வளர்ப்பாய்
ஆய்ந்த மாமறை எத்தனை அத்தனை அறிவால்
தோய்ந்த பேர்கட்குந் தோன்றிலாத் தோன்றலாந் தூயோய். 25.

தக்க நின்னருட் கேளவியோ சிறிதின்றித் தமியேன்
மிக்க தெய்வமே நின்னின்ப வெள்ளத்தில் வீழேன்
ஒக்கல் தாய்தந்தை மகவெனும் பாசக்கட் டுடனே
துக்க வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என்செய்வான் துணிந்தேன். 26.

பவம்பு ரிந்திடும் பாவியேற் கருள்நிலை பதியத்
தவஞ்செ யும்படித் தயவுசெய் தருள்வதே தருமம்
அவம்பு ரிந்திடார்க் கானந்த அமிர்தத்தை அளிக்க
நவங்கொள் தத்துவத் திரையெறி கடலெனும் நலத்தோய். 27.

உற்று ணர்ந்தெலாம் நீயல தில்லையென் றுனையே
பற்று கின்றனர் எந்தைநின் னடியர்யான் பாவி
முற்று மாயமாஞ் சகத்தையே மெய்யென முதல்தான்
அற்றி ருந்திடத் தொழில்செய்வான் தனிநிக ரானேன். 28.