Thiruppugazh Song 139 – திருப்புகழ் பாடல் 139

திருப்புகழ் பாடல் 139 – பழநி

தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
தனதனன தத்த தந்த …… தனதான

களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்து
கயலொடுப கைத்த கண்கள் …… குழைதாவக்

கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்து
கடியிருளு டுக்கு லங்க …… ளெனவீழ

முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப
முருகிதழ்சி வப்ப நின்று …… விலைகூறி

முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
முடுகுமவ ருக்கி ரங்கி …… மெலிவேனோ

இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து
இனியபொரு ளைப்ப கர்ந்த …… குருநாதா

இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப
எனதுதலை யிற்ப தங்க …… ளருள்வோனே

குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து
குமரசிவ வெற்ப மர்ந்த …… குகவேலா

குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்த
குரவர்மக ளைப்பு ணர்ந்த …… பெருமாளே.