Thiruppugazh Song 157 – திருப்புகழ் பாடல் 157

திருப்புகழ் பாடல் 157 – பழநி

தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன …… தனதான

சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி …… யணுகாதே

சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை …… யொழியாதே

மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது …… மொருநாளே

வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத …… மருள்வாயே

நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு …… மயிலேறி

நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு …… முருகோனே

குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு …… மணவாளா

குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு …… பெருமாளே.