Thiruppugazh Song 163 – திருப்புகழ் பாடல் 163

திருப்புகழ் பாடல் 163 – பழநி
ராகம் – பூர்வி கல்யாணி; தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன …… தனதான

தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு …… வதனாலே

தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு …… துயர்தீர

அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன …… திருபாதம்

அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர …… இசைவாயே

சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் …… மதுசூதன்

திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி …… மருகோனே

பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் …… புதல்வோனே

பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் …… பெருமாளே.