Thiruppugazh Song 193 – திருப்புகழ் பாடல் 193

திருப்புகழ் பாடல் 193 – பழநி

தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன
தந்தன தந்தன தான தந்தன …… தனதான

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் …… பலபேசி

மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு …… முரையாலே

சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ …… னயராதே

தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் …… மெலிவேனோ

கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு …… முறையாலே

கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் …… மருகோனே

குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய …… மணிமார்பா

கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் …… பெருமாளே.