Thiruppugazh Song 299 – திருப்புகழ் பாடல் 299

திருப்புகழ் பாடல் 299 – திருத்தணிகை
ராகம் – காபி ; தாளம் – அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு – அதீதம்)

தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனத்ததன தனதான தனத்ததன தனதான
தனத்ததன தனதான …… தனதான

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் …… மயலாலே

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிக்முள …… அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி …… யவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல …… மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத …… மகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு …… புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை …… யுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு …… பெருமாளே.