Thiruppugazh Song 68 – திருப்புகழ் பாடல் 68

திருப்புகழ் பாடல் 68 – திருச்செந்தூர்
ராகம் – தோடி/அடாணா
தாளம் – அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)

தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,
தகிடதக-2 1/2

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன …… தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு …… செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக …… துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை …… வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக …… அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல …… வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய …… அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் …… பெருமாளே.