Thiruvembavai Song 10 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

பொருள்:

தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!