சிவசடாட்சர துதி | Shiva Shadakshara Stotram

சிவசடாட்சர துதி | Shiva Shadakshara Stotram

சீரான வாழ்விற்கு வழிகாட்டும் மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் சொல்ல வேண்டிய சிவசடாட்சரதுதி

ஓங்காரமே பரப்பிரம்மம் அனைத்தும் ஓங்காரத்திலிருந்து தோன்றியவை. ‘அ’ கார ‘உ’ கார ‘ம’ கார சங்கமத்தினால் தோன்றிய ஓங்காரனுக்கு என் நமஸ்காரம்.
தேவதேவரே உமக்கு நமஸ்காரம், பரமேஸ்வரரே உமக்கு நமஸ்காரம். வெள்ளேற்று அண்ணலே நமஸ்காரம். ‘ந’ கார சொரூபரே உமக்கு நமஸ்காரம்
மகாதேவரும் மகாத்மாவும் மகாபாதங்களை அழிப்பவரும், நடராஜனுமாகிய ‘ம’ கார சொரூபனுக்கு நமஸ்காரம்.
க்ஷேமங்களை அளிப்பவரும் சாந்த ரூபரும், ஜகந்நாதனும், எல்லா உலகையும் காப்பவரும், க்ஷேமம் என்ற பதத்திற்கு இறைவனும் ‘சி’ கார சொரூபனும் ஆகியவருக்கு நமஸ்காரம்.
எவருக்கு காளை வாகனமோ, வாசுகி கழுத்தில் அணியாக உள்ளதோ, எவரின் இடப்பக்கம் அன்னை பராசக்தி இருக்கிறாளோ, அந்த ‘வ’ கார சொரூபருக்கு என் நமஸ்காரம்.
எந்த இடத்தில் எல்லாம் சர்வ வியாபியான மகேஸ்வரன் லிங்க உருவில் நாளும் பூஜிக்கப்படுகிறாரோ அங்கெல்லாம் அருளும் அந்த ‘ய’ கார சொரூபருக்கு நமஸ்காரம்.
சக்தியிடம் கூடிய ஓங்காரத்தை யோகிகள் நாளும் தியானித்து, அபீஷ்டங்களையும் மோஷத்தையும் பெறுகிறார்கள். அந்த ஓங்கார சொரூபருக்கு நமஸ்காரம்.
மகாதேவரே பரம மந்திரம், மகாதேவரே மேலான தவம். மகாதேவரே மேன்மையான வித்யை. மகாதேவரே அனைவருக்கும் போக்கிடம். அவருக்கு என் நமஸ்காரம்.
ஓம் நமசிவாய என்றுகூறி லிங்கத்தை வழிபடுவோர்க்கு ஆசைகளைத் தீர்த்து மோஷத்தை அளிக்கவல்ல விச்வ ரூபருக்கு நமஸ்காரம்.
சோமன், நட்சத்திரங்கள், போலன்றி ஸ்வயம் பிரகாசமாயும் எந்தவிதமான தளையோ தடையோ அல்லாதவரும் ஆனவருக்கு நமஸ்காரம்.
மகாதேவரும் பெரும் ஜோதி சொரூபரும், எல்லையற்ற தேஜசை உடையவரும், சாந்த மூர்த்தியும், பிரம்மமும், லிங்கமூர்த்தியுமான சிவனுக்கே நமஸ்காரம்.
ஓங்காரமானவரும், விஷேசமானவரும், துந்துபி வாத்தியத்துக்குரியவரும், ருத்ரரும், பிரதான தெய்வமுமான நம சிவாயத்தை வணங்குகிறேன்.
சர்வ லோகங்களுக்கும் குருவானவரும், எல்லா பாவ நோய்களையும் தீர்க்கும் மருந்தீஸ்வரரும், எல்லா வித்யைகளுக்கும் ஆதார நிதியாக இருப்பவருமான தட்சிணா மூர்த்தியை வணங்குகிறேன்.
ஞானநந்தரும், ஞானரூபரும் அனைத்து ஞானங்களுக்கும் ஆணிவேராய் இருப்பவரும் தவத்தின் பலனைக் கொடுப்பவரும், எல்லாச் செல்வங்களையும் அளிப்பவருமான சநாதனரை- ஆதி முதல்வனை வணங்குகின்றேன்.
சத்யமானவரும், பரபிரம்ம புருஷரும், அர்த்தநாரீஸ்வரரான சிவனின் இடப்பாகமர்ந்த அன்னை கருமை நிறம், அண்ணலின் வடபாகம் சிவப்பு. பவளம் போன்ற மேனியான கிருஷ்ண பிங்களரும், அப்பாலுக்கு அப்பாலானவரும் விசேஷமான கண்களையுடையவரும், விஸ்வ ரூபியுமானவரை நமஸ்கரிக்கின்றேன்.
எல்லா இஷ்டங்களையும் சித்திக்கச் செய்பவரும், இரவானவரும், பகலுமானவரும், உமாபதியும், எல்லா வித்யைகளுக்கும் அதிபதியானவரும், எல்லா ஈஸ்வரர்களுக்கும் மேலான சர்வேஸ்வரராக தாமேயானவருமாகியவரை நமஸ்கரிக்கின்றேன்.
பசுக்கூட்டங்கள், தனம், தீர்க்காயுள், பலம், மக்கள், மற்றும் அனைத்து வளங்களும் மகாவிஷ்ணு போன்ற வளமும் சிவ சங்கல்பத்தால் நிச்சயம் கிடைக்கும். உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
சத்யம்-அன்னை, ஞானம்-தந்தை, தர்மம்-தமையன், கருணை-நண்பன், சாந்தி-பத்தினி, பொறுமை-சகிப்புத்தன்மை-பிள்ளைகள், என்ற ஆறு வகையான பந்தங்கள் அனைத்தும் எனக்கு நீயே. யாவுமாக நீயே இருந்து காப்பவன் நீயே. உன்னைப் பணிகிறேன். உனக்கு நமஸ்காரம்.
சிவசிவ சிவாய நமக! நமசிவாய சிவசிவ சிவாய நமக! சிவசிவ சிவாய நமக!