சிவபார்வதி துதி | Shiva Parvati Thuthi

வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற சிவபார்வதி துதி:

கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.

மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.

திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகள் உடுத்தும் சிவைக்கு போற்றி வணக்கம்.

சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.

த்ரிபுராகரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.

பரம ஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங் குழலை உடையவளுக்கு வணக்கம்.

கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி. குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி. வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே! வணக்கம்.

பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப் படுபவளுக்கு நமஸ்காரம்.

அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா/ மகாலட்சுமியால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.

உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.

பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே. வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுத மயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தன மயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் பெருகிட அருள்வீராக,