சிவ அகவல் | Lord Shiva Agaval in Tamil

சிவ அகவல்- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க, தினமும் நேரம் கிடைக்கும் போது சிவ அகவல் சொல்லுங்கள்.

அகர முதல்வனென்று இருப்போய் போற்றி!
ஆல நீழல் அமர்ந்தோய் போற்றி!
இளமான் இடக்கரம் ஏற்றோய் போற்றி!
ஈசானமெனும் முகத்தோய் போற்றி!
உருத்திர மந்திரம் உவப்போய் போற்றி!
ஊழி முற்றினும் நிலைப்போய் போற்றி!
எருக்க மலரினையணிந்தாய் போற்றி!
ஏறுமீதேறி வருவோய் போற்றி!

ஐம்பெரும் பூதம் படைத்தோய் போற்றி!
ஒப்பார் மிக்கார் இல்லோய் போற்றி!
ஓங்காரமெனத் திகழ்வோய் போற்றி!
ஒளவிய மற்றோர்க் கணித்தோய் போற்றி!
அஃகாப் பேரருள் பொழிவோய் போற்றி!
கண்ணுக்கு இனிய வடிவோய் போற்றி!
காமனைக் காய்த்த விழியோய் போற்றி!
கிரிதனை வில்லென ஏற்றோய் போற்றி!

கீதம் ஓர்க்கும் செவியோய் போற்றி!
குறையேதில்லாப் பெரியோய் போற்றி!
கூத்தம் பலந்தனில் ஆடுவோய் போற்றி!
கெடுமதி அரக்கனைச் செற்றோய் போற்றி!
கேழில்மா பரஞ்சோதியாய் போற்றி!
கைத்தலம் மழுவொன் றேந்தியோய் போற்றி!
கொன்றை வேய்ந்த சடையோய் போற்றி!
கோதில் நஃல்லறம் ஓதுவோய் போற்றி!

கௌரீ தன்னை மணந்தோய் போற்றி!
ஙப்போல் குழைவார்க் கருள்வோய் போற்றி!
சக்தியோஜாத முகத்தோய் போற்றி!
சான்றோர் தொழுதிடும் சுழலோய் போற்றி!
சிற்றம்பலத்தே ஆடுவாய் போற்றி!
சீர்மிகு வாசகம் உவந்தோய் போற்றி!
சுத்த நிர்க்குணச் சோதியோய் போற்றி!
சூதிலார்க்குச் சேயோய் போற்றி!

செந்தழல் அன்ன மேனியாய் போற்றி!
சேண்திகழ் கயிலை உறைவோய் போற்றி!
சைவப் பேரொளி பொழிவோய் போற்றி!
சொற்பதம் கடந்த இறையோய் போற்றி!
சோதித் தூணென நீண்டோய் போற்றி!
சௌபாக்கியமெலாம் நல்குவாய் போற்றி!
ஞயம்பட மொழிவார்க்கினியோய் போற்றி!
ஞானநுதல் விழி பெற்றோய் போற்றி!

ஞிமுறு மிழற்றும் தாரோய் போற்றி!
தத்புருஷமெனும் முகத்தோய் போற்றி!
தாயினும் சாலப் பரிவோய் போற்றி!
திலகவதிக்கருள் புரிந்தோய் போற்றி!
தீயினை ஏற்ற கரத்தோய் போற்றி!
துடிகொண்டெழுத்தெலாம் ஒலித்தோய் போற்றி!
தூநீர்க் கங்கை மிலைந்தோய் போற்றி!
தென்பால் நோக்கி அமர்ந்தோய் போற்றி!

தேவ தேவனென்றிருப்போய் போற்றி!
தைப்பூசந்தனை உவப்போய் போற்றி!
தொழுவார்க்கிரங்கி அருள்வோய் போற்றி!
தோன்றாத்துணையென நிற்போய் போற்றி!
நந்தன் பத்தியை மெச்சியோய் போற்றி!
நாவரசர்க்கருள் பூத்தோய் போற்றி!
நிதிபதியொடு நட்புடையோய் போற்றி!
நீக்கமற்றெங்கும் நிறைந்தோய் போற்றி!

நுணக்கரு நுட்பென இருப்போய் போற்றி!
நூறாயிரம்பெயர் கொண்டோய் போற்றி!
நெய்தயிர் ஆன்பால் ஆடுவோய் போற்றி!
நேரிய அறந்தனை உரைத்தாய் போற்றி!
நைவளப் பண்கேட்டுவப்போய் போற்றி!
நொடிக்குள் முப்புரம் செற்றோய் போற்றி!
நோக்கரு நோக்கென இருப்போய் போற்றி!
பரிமேல் பரிவுடன் வந்தொய் போற்றி!

பார்பதம் அண்டம் கடந்தோய் போற்றி!
பிட்டுண்டடி யுண்டிருந்தோய் போற்றி!
பீடார் மதுரை உறைவோய் போற்றி!
புனித வதியினை ஆண்டோய் போற்றி!
பூவுள் நாற்றம் போன்றோய் போற்றி!
பொய்மழை எனவருள் பொழிவோய் போற்றி!
பேரானந்தம் விளைப்போய் போற்றி!
பையரவம் இடை அசைத்தோய் போற்றி!

பொன்னென மின்னும் மேனியாய் போற்றி!
போக்கும் வரவும் இல்லோய் போற்றி!
பௌவம் சூழ்பார் காப்போய் போற்றி!
மலரவன் காணா முடியோய் போற்றி!
மாலவன் காணாக் கழலோய் போற்றி!
மின்னிடுஞ் சூலம் ஏற்றோய் போற்றி!
மீளா வுலகு தருவோய் போற்றி!
முத்தமிழ் போற்றும் புலவோய் போற்றி!

மூவா மேனி அழகோய் போற்றி!
மெய்யெலாம் வெண்ணீறு அணிந்தோய் போற்றி!
மேதகு காஞ்சி உறைந்தோய் போற்றி!
மைவளர் நஞ்சமிடற்றோய் போற்றி!
மொய்வலி முயலகன் அழுத்தினோய் போற்றி!
மோனத் திருந்தறம் உரைத்தோய் போற்றி!
மௌவல் மாலை பூண்டோய் போற்றி!
மணிவண்ணா போற்றி!

யாணை முகத்தினைப் படைத்தோய் போற்றி!
வந்திப் பார்க்கருள் நல்குவோய் போற்றி!
வாமதேவ முகத்தோய் போற்றி!
விசயற் கம்பு தந்தோய் போற்றி!
வீரி தன்னை பயந்தோய் போற்றி!
வெற்றி வேலனைப் பயந்தோய் போற்றி!
வேடன் விழிதர ஆண்டோய் போற்றி!
வையை வெள்ளம் மிகுத்தோய் போற்றி!

அஃகா இன்பம் அளிப்போய் போற்றி!
ஒளடதம் நோய்க்கெனத் திகழ்வோய் போற்றி!
ஓருரு ஒருபெயர் இல்லோய் போற்றி!
ஒருவனென்ன ஒளிர்வோய் போற்றி!
ஐந்திணை நிலமெலாம் உரியோய் போற்றி!
ஏழிசை மடுக்கும் செவியோய் போற்றி!
என்பு மாலை பூண்டோய் போற்றி!
ஊனினை உருக்கெழில் உருவோய் போற்றி!

உலக உயிர்க்கெலாம் விழியோய் போற்றி!
ஈறு நடுமுதல் ஆனோய் போற்றி!
இசைவல் காழியன் ஆண்டோய் போற்றி!
ஆரூரன் தனை ஆண்டோய் போற்றி!
அகோர முகந்தனை யுடையோய் போற்றி!
போற்றி! போற்றி! பரமா போற்றி!

சரணம் சரணம் சிவனே சரணம்!
அரணாம் அரணம் நீயே அரணம்!
என் பிழையாவும் பொறுத்திடு ஐயா!
என் கல் மனத்தைக் குழைத்திடு ஐயா!
என்னை இன்னே ஆட்கொள் ஐயா!
சரணம் சரணம் சரணம் சிவனே!