துவாதச லிங்கங்கள் துதி | Thuvathasa Jothir Linga Thuthikal

பாவம் போக்கும் துவாதச லிங்கங்கள் துதி – 12 ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் சிவன் அருள் கிடைக்க அனுதினமும் சொல்ல வேண்டிய 12 ஜோதிர் லிங்க துதிகள்:

பரிசுத்தமானதும், மிக்க அழகானதுமான சௌராஷ்டிர தேசத்தில் பக்தியை அளிப்பதற்காக கருணையாய் அவதாரம் செய்தவரும், சந்திரகலையை சிரோபூஷணமாக கொண்டவரும் ஜோதிர்மயமாக இருக்கிறவருமான சோமநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகிறேன்.

நிகராகக் கூறப்படும் மலைகளுள் பெரியதானதும் தேன்கள் எப்போதும் சான்னித்தமாக இருக்கப்படுகிறதுமான ஸ்ரீசைலம் எனும் இடத்தில் சந்தோஷமாக வசிக்கிறவரும், சம்சார சாகரத்திற்கு அணைபோல் உள்ளவருமான மல்லிகார்ஜுனர் என்ற லிங்கத்தை வணங்குகிறேன்.

அவந்திகா நகரத்தில் சாது ஜனங்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவதாரம் செய்தவரும், தேவர்களுக்கு ஈசனுமான மஹாகாலேஷ்வரன் என்ற லிங்கத்தை, அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டி நமஸ்கரிக்கின்றேன்.

காவேரி, நர்மதை இவ்விரண்டின் பரிசுத்தம்மான சங்கமத்தின் சமீபத்தில், மாந்தாத்ருபுரத்தில் ஸஜ்ஜனங்களை கரை ஏற்ற வேண்டி வசிக்கிறவரும், ஓம்காரேஸ்வர லிங்கம் என்று பிரசித்தி பெற்றதும் அத்விதீயருமான ஸ்ரீ பரமேஸ்வரனைத் துதிக்கின்றேன்.

ஈசான-வடகிழக்கு திக்கில் ப்ராஜ்வலிகா நிதானத்தில்- ருத்ரபூமியில் வசிக்கிறவரும், பார்வதி தேவியுடன் கூடியவரும், தேவர்கள், அசுரர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்ட பாத பத்மங்களை உடையவருமான ஸ்ரீவைத்யநாதர் என்ற லிங்கத்தை நான் வணங்குகின்றேன்.

தென்திசையில் மிக்க அழகான சதங்கம் எனும் நகரத்தில் பலவிதமான சமபத்துக்களுடன் அலங்கரித்த அங்கங்களுடன் கூடியவரும், சிறந்த பக்தியையும் மோக்ஷத்தையும் அளிக்கிறவருமான ஸ்ரீநாகேஷ்வரர் என்ற லிங்கத்தை சரண் அடைகின்றேன்.

இமயமலையில் தாழ்வான பிரதேசத்தில் கேதாரம் என்ற சிகரத்தில் ரமிக்கிறவரும், முனிசிரேஷ்டர்களாலும் தேவர்கள், அசுரர்கள், யஷர்கள், நாகர்கள் முதலியவர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுகிறவரும் அத்விதீயருமான கேதாரேஸ்வரர் என்றலிங்கத்தை துதிக்கின்றேன்.

பரிசுத்தமான சஹயமலையின் சிகரத்தில் கோதாவரி நதிக்கரையில் சுத்தமான இடத்தில் வசிப்பவரான எவரை தரிசனம் செய்வதால் பாவங்கள் விலகுகின்றனவோ அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற லிங்கத்தை துதிக்கின்றேன்.

தாமிரபரணி நதி சேரும் சமுத்திரக்கரையில் கணக்கற்ற பாணங்களைக் கொண்டு அணைகட்டி ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட அந்த ராமேஸ்வரர் எனும் லிங்கத்தை நான் நியதியாய் வணங்குகின்றேன்.

டாகினீ, சாகினீ முதலிய புதகணங்களால் பூஜிக்கப்படுகிறவரும் பக்தர்களுக்கு ஹிதத்தை அளிக்கிறவரும், பீமேஸ்வரலிங்கம் என்று பிரசித்தி பெற்றவருமான அந்த பரமேஸ்வர லிங்கத்தை வணங்குகின்றேன்.

காசியில் ஆனந்தவனத்தில் ஆனந்தத்துடன் வசிப்பவரும், சந்தோஷக் குவியலாய் விளங்குகிறவரும், பாபக் குவியல் அற்றவரும், அனாதரர்களுக்கு நாதனும், வாராணாசி சேத்ர நாயகனும் ஆன ஸ்ரீவிஸ்வநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகின்றேன்.

அழகாயும் விசாலமாயும் உள்ள இலாபுரம் என்ற இடத்தில் விளங்குகிறவரும், உலகத்தில் மிகச் சிறந்தவரும் பெரிய உதாரஸ்வரூபத்தை உடையவரும் க்ருஷ்ணேச்வர லிங்கம் என்று பெயர் பெற்றவரும் ஆகிய பரமேஸ்வரனை சரணம் அடைகின்றேன்.