Thayumanavar Songs – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்

ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்

ஆகார புவனமின் பாகார மாக
அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார
யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக்
குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே
வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன
மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல்
தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே
திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1.

அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும்
ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத்
தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச்
சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே
இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம்
இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக்
கனந்தருமா கனமேதண் அருளில் தானே
கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே. 2.

பேறனைத்தும் அணுவெனவே உதறித் தள்ளப்
பேரின்ப மாகவந்த பெருக்கே பேசா
வீறனைத்தும் இந்நெறிக்கே என்ன என்னை
மேவென்ற வரத்தேபாழ் வெய்ய மாயைக்
கூறனைத்துங் கடந்தஎல்லைச் சேட மாகிக்
குறைவறநின் றிடுநிறைவே குலவா நின்ற
ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமயகோடி
அத்தனையுந் தொடர்ந்துபுகும் ஆதி நட்பே. 3.

ஆதியந்தம் எனும்எழுவா யீறற் றோங்கி
அருமறைஇன் னமுங்காணா தரற்ற நானா
பேதமதங் களுமலைய மலைபோல் வந்தப்
பெற்றியரும் வாய்வாதப் பேய ராகச்
சாதகமோ னத்திலென்ன வடவால் நீழல்
தண்ணருட்சந் திரமௌலி தடக்கைக் கேற்க
வேதகசின் மாத்திரமா யெம்ம னோர்க்கும்
வெளியாக வந்தவொன்றே விமல வாழ்வே. 4.

விமலமுதற் குணமாகி நூற்றெட் டாதி
வேதமெடுத் தெடுத்துரைத்த விருத்திக் கேற்க
அமையுமிலக் கணவடிவா யதுவும் போதா
தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச்
சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத்
தண்ணருள்தந் தெமைக்காக்குஞ் சாட்சிப் பேறே
இமையளவும் உபகார மல்லால் வேறொன்
றியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்றே. 5.

ஒன்றாகிப் பலவாகிப் பலவாக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவு மாகி
நன்றாகித் தீதாகி மற்று மாகி
நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
இன்றாகி நாளையுமாய் மேலு மான
எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே. 6.

அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி
இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே. 7.

விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி
விளங்குசப்த ரிடிகள்கன வீணை வல்லோர்
எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர்
இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக்
கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளங்
கையில்நெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும். 8.

செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
அப்பரிசா ளரும·தே பிடித்தா லிப்பால்
அடுத்ததந்நூல் களும்விரித்தே அனுமா னாதி
ஒப்பவிரித் துரைப்பரிங்ஙன் பொய்மெய் என்ன
ஒன்றிலைஒன் றென்ப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி
யாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி. 9.

இயல்பென்றுந் திரியாமல் இயம மாதி
எண்குணமுங் காட்டியன்பால் இன்ப மாகிப்
பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி
மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மௌன மோலி
அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில்
அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. 10.

அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
றறிஞரெல்லாம் நடுஅறிய அணிமா ஆதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
இதுவன்றித் தாயகம்வே றில்லை இல்லை
சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத்
தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம். 11.

சன்மார்க்கம் ஞானமதின் பொருளும் வீறு
சமயசங்கே தப்பொருளுந் தானென் றாகப்
பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை
பகர்வரிய தில்லைமன்றுள் பார்த்த போதங்
கென்மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன
எச்சமயத் தவர்களும்வந் திறைஞ்சா நிற்பர்
கன்மார்க்க நெஞ்சமுள எனக்குந் தானே
கண்டவுடன் ஆனந்தங் காண்ட லாகும். 12.

காண்டல்பெறப் புறத்தினுள்ள படியே உள்ளுங்
காட்சிமெய்ந்நூல் சொலும்பதியாங் கடவு ளேநீ
நீண்டநெடு மையுமகலக் குறுக்குங் காட்டா
நிறைபரிபூ ரணஅறிவாய் நித்த மாகி
வேண்டுவிருப் பொடுவெறுப்புச் சமீபந் தூரம்
விலகலணு குதல்முதலாம் விவகா ரங்கள்
பூண்டஅள வைகள்மனவாக் காதி யெல்லாம்
பொருந்தாம லகம்புறமும் புணர்க்கை யாகி. 13.

ஆகியசற் காரியவூ கத்துக் கேற்ற
அமலமாய் நடுவாகி அனந்த சத்தி
யோகமுறும் ஆனந்த மயம தாகி
உயிர்க்குயிரா யெந்நாளும் ஓங்கா நிற்ப
மோகஇருள் மாயைவினை உயிர்கட் கெல்லாம்
மொய்த்ததென்கொல் உபகார முயற்சி யாகப்
பாகமிக அருளஒரு சத்தி வந்து
பதித்ததென்கொல் நானெனுமப் பான்மை என்கொல். 14.

நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து
நலிந்தவுடன் சகமாயை நானா வாகித்
தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச்
சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார்
ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும்
உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற
வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும்
மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும். 15.

மலைமலையாங் காட்சிகண்கா ணாமை யாதி
மறப்பென்றும் நினைப்பென்றும் மாயா வாரி
அலையலையா யடிக்குமின்ப துன்ப மென்றும்
அதைவிளைக்கும் வினைகளென்றும் அதனைத் தீர்க்கத்
தலைபலவாஞ் சமயமென்றுந் தெய்வ மென்றுஞ்
சாதகரென் றும்மதற்குச் சாட்சி யாகக்
கலைபலவா நெறியென்றுந் தர்க்க மென்றுங்
கடலுறுநுண் மணலெண்ணிக் காணும் போதும். 16.

காணரிய அல்லலெல்லாந் தானே கட்டுக்
கட்டாக விளையுமதைக் கட்டோ டேதான்
வீணினிற்கர்ப் பூரமலை படுதீப் பட்ட
விந்தையெனக் காணவொரு விவேகங் காட்ட
ஊணுறக்கம் இன்பதுன்பம் பேரூ ராதி
ஒவ்விடவும் எனைப்போல உருவங் காட்டிக்
கோணறவோர் மான்காட்டி மானை ஈர்க்குங்
கொள்கையென அருள்மௌன குருவாய் வந்து. 17.

வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை
யாதொன்று பற்றின்அதன் இயல்பாய் நின்று
பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன்
பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம். 18.

அறிவாகி ஆனந்த மயமா யென்றும்
அழியாத நிலையாகி யாதின் பாலும்
பிறியாமல் தண்ணருளே கோயி லான
பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில்
நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும்
நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க
செறிவான அறியாமை எல்லாம் நீங்க
சிற்சுகம்பெற் றிடுகபந்தந் தீர்க வென்றே. 19.

பந்தமறும் மெஞ்ஞான மான மோனப்
பண்பொன்றை அருளியந்தப் பண்புக் கேதான்
சிந்தையில்லை நானென்னும் பான்மை யில்லை
தேசமில்லை காலமில்லை திக்கு மில்லை
தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவு மில்லை
சொல்லுமில்லை இராப்பகலாந் தோற்ற மில்லை
அந்தமில்லை ஆதியில்லை நடுவு மில்லை
அகமுமில்லை புறமில்லை அனைத்து மில்லை. 20.

இல்லைஇல்லை யென்னினொன்று மில்லா தல்ல
இயல்பாகி என்றுமுள்ள இயற்கை யாகிச்
சொல்லரிய தன்மையதா யான்றா னென்னத்
தோன்றாதெல் லாம்விழுங்குஞ் சொரூப மாகி
அல்லையுண்ட பகல்போல அவித்தை யெல்லாம்
அடையவுண்டு தடையறவுன் அறிவைத் தானே
வெல்லவுண்டிங் குன்னையுந்தா னாகக் கொண்டு
வேதகமாய்ப் பேசாமை விளக்குந் தானே. 21.

தானான தன்மயமே யல்லால் ஒன்றைத்
தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே
போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்
போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம்
ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற
ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார்
அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். 22.

அதுவென்றால் எதுவெனவொன் றடுக்குஞ் சங்கை
ஆதலினால் அதுவெனலும் அறவே விட்டு
மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்
பதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட
படிக்குநிரு விகற்பத்தாற் பரமா னந்த
கதிகண்டு கொள்ளவும்நின் னருள்கூ ரிந்தக்
கதியன்றி யுறங்கேன்மேற் கருமம் பாரேன். 23.

பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன். 24.

ஆயுமறி வாகியுன்னைப் பிரியா வண்ணம்
அணைந்துசுகம் பெற்றவன்பர் ஐயோ வென்னத்
தீயகொலைச் சமயத்துஞ் செல்லச் சிந்தை
தெளிந்திடவுஞ் சமாதானஞ் செய்வேன் வாழ்வான்
காயிலைபுன் சருகாதி யருந்தக் கானங்
கடல்மலைஎங் கேஎனவுங் கவலை யாவேன்
வாயில் கும்பம் போற்கிடந்து புரள்வேன் வானின்
மதிகதிரை முன்னிலையா வைத்து நேரே. 25.

நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம்
நித்தம்வர வுங்களைஇந் நிலைக்கே வைத்தார்
ஆரேயங் கவர்பெருமை என்னே என்பேன்
அடிக்கின்ற காற்றேநீ யாரா லேதான்
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து
பெய்கின்ற முகில்காள்எம் பெருமான் நும்போல்
தாராள மாக்கருணை பொழியச் செய்யுஞ்
சாதகமென் னேகருதிச் சாற்று மென்பேன். 26.

கருதரிய விண்ணேநீ எங்கு மாகிக்
கலந்தனையே யுன்முடிவின் காட்சி யாக
வருபொருளெப் படியிருக்குஞ் சொல்லா யென்பேன்
மண்ணேயுன் முடிவிலெது வயங்கு மாங்கே
துரியஅறி வுடைச்சேடன் ஈற்றின் உண்மை
சொல்லானோ சொல்லென்பேன் சுருதி யேநீ
ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை யாமுன்
உரையன்றோ உன்முடிவை உரைநீ என்பேன். 27.

உரையிறந்து பெருமை பெற்றுத் திரைக்கை நீட்டி
ஒலிக்கின்ற கடலேஇவ் வுலகஞ் சூழக்
கரையுமின்றி யுன்னைவைத்தார் யாரே என்பென்
கானகத்திற் பைங்கிளிகாள் கமல மேவும்
வரிசிறைவண் டினங்காள்ஓ திமங்காள் தூது
மார்க்கமன்றோ நீங்களிது வரையி லேயும்
பெரியபரி பூரணமாம் பொருளைக் கண்டு
பேசியதுண் டோவொருகாற் பேசு மென்பேன். 28.

ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை
ஓட்டுதல்போல் நான்பேதை உப்போ டப்பை
மருவவிட்டுங் கர்ப்பூர மதனில் தீபம்
வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
அருளுடைய பரமென்றோ அன்று தானே
யானுளனென் றும்மனக்கே ஆணவாதி
பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப்
பேசியதன் றேஅருள்நூல் பேசிற் றன்றே. 29.

அன்றுமுதல் இன்றைவரைச் சனன கோடி
அடைந்தடைந்திங் கியாதனையால் அழிந்த தல்லால்
இன்றைவரை முக்தியின்றே எடுத்த தேகம்
எப்போதோ தெரியாதே இப்போ தேதான்
துன்றுமனக் கவலைகெடப் புலைநா யேனைத்
தொழும்புகொளச் சீகாழித் துரையே தூது
சென்றிடவே பொருளைவைத்த நாவ லோய்நஞ்
சிவனப்பா என்ற அருட் செல்வத் தேவே. 30.

தேவர் தொழும் வாதவூர்த் தேவே என்பேன்
திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக்
காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த
அரசேசும் மாவிருந்துன் அருளைச் சாரப்
பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப்
புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா
ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன்
ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே. 31.

ஓதரிய சுகர்போல ஏன்ஏன் என்ன
ஒருவரிலை யோஎனவும் உரைப்பேன் தானே
பேதம்அபே தங்கெடவும் ஒருபே சாமை
பிறவாதோ ஆலடியிற் பெரிய மோன
நாதனொரு தரமுலகம் பார்க்க இச்சை
நண்ணானோ என்றென்றே நானா வாகிக்
காதல்மிகு மணியிழையா ரெனவா டுற்றேன்
கருத்தறிந்து புரப்பதுன்மேற் கடன்முக் காலும். 32.

காலமொடு தேசவர்த்த மான மாதி
கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி
மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி
மதாதீத மானஅருள் மரபு வாழி
சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத்
தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி
ஆலடியிற் பரமகுரு வாழி வாழி
அகண்டிதா காரஅரு ளடியார் வாழி. 33.