Thayumanavar Songs – சிற்சுகோதய விலாசம்

சிற்சுகோதய விலாசம்

காக மோடுகழு கலகை நாய்நரிகள்
சுற்று சோறிடு துருத்தியைக்
காலி ரண்டுநவ வாசல் பெற்றுவளர்
காமவேள் நடன சாலையை
போகஆசைமுறி யிட்ட பெட்டியைமும்
மலமி குந்தொழுகு கேணியை
மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை
முடங்க லார்கிடை சரக்கினை
மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக
வேதம் ஓதியகு லாலனார்
வனைய வெய்யதடி கார னானயமன்
வந்த டிக்குமொரு மட்கலத்
தேக மானபொயை மெய்யெ னக்கருதி
ஐய வையமிசை வாடவோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 1

குறிக ளோடுகுண மேது மின்றியனல்
ஒழுக நின்றிடும் இரும்பனல்
கூட லின்றியது வாயி ருந்தபடி
கொடிய ஆணவ அறைக்குளே
அறிவ தேதும்அற அறிவி லாமைமய
மாயி ருக்குமெனை அருளினால்
அளவி லாததனு கரண மாதியை
அளித்த போதுனை அறிந்துநான்
பிறவி லாதவண நின்றி டாதபடி
பலநி றங்கவரு முபலமாய்ப்
பெரிய மாயையி லழுந்தி நின்னது
ப்ரசாத நல்லருள் மறந்திடுஞ்
சிறிய னேனுமுனை வந்த ணைந்துசுக
மாயி ருப்பதினி என்றுகாண்
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 2

ஐந்து பூதமொரு கானல் நீரென
அடங்க வந்தபெரு வானமே
ஆதி யந்தநடு வேது மின்றியரு
ளாய்நிறைந் திலகு சோதியே
தொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி
குணமி றந்துவளர் வத்துவே
துரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு
தோன்ற நின்றருள் சுபாவமே
எந்த நாளுநடு வாகி நின்றொளிரும்
ஆதியே கருணை நீதியே
எந்தை யேஎன இடைந்திடைந் துருகும்
எளிய னேன்கவலை தீரவுஞ்
சிந்தை யானதை யறிந்து நீயுனருள்
செய்ய நானுமினி யுய்வனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 3

ஐவ ரென்றபுல வேடர் கொட்டம
தடங்க ம்ர்க்கடவன் முட்டியாய்
அடவி நின்றுமலை யருகில் நின்றுசரு
காதி தின்றுபனி வெயிலினால்
மெய்வ ருந்துதவ மில்லைநற் சரியை
கிரியை யோகமெனும் மூன்றதாய்
மேவு கின்றசவு பான நன்னெறி
விரும்ப வில்லையுல கத்திலே
பொய்மு டங்குதொழில் யாத தற்குநல
சார தித்தொழில் நடத்திடும்
புத்தி யூகமறி வற்ற மூகமிவை
பொருளெ னக்கருதும் மருளன்யான்
தெய்வ நல்லருள் படைத்த அன்பரொடு
சேர வுங்கருணை கூர்வையோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 4

ஏகமானவுரு வான நீயருளி
னால னேகவுரு வாகியே
எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய
இசையு நாள்வரை யநாள்முதல்
ஆக நாளது வரைக்கு முன்னடிமை
கூடவே சனன மானதோ
அநந்த முண்டுநல சனன மீதிதனுள்
அறிய வேண்டுவன அறியலாம்
மோக மாதிதரு பாச மானதை
அறிந்து விட்டுனையும் எனையுமே
முழுது ணர்ந்துபர மான இன்பவெள
மூழ்க வேண்டும் இதுஇன்றியே
தேக மேநழுவி நானுமோ நழுவின்
பின்னை உய்யும்வகை உள்ளதோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 5

நியம லட்சணமும் இயம லட்சணமும்
ஆச னாதிவித பேதமும்
நெடிது ணர்ந்திதய பத்ம பீடமிசை
நின்றி லங்குமச பாநலத்
தியல றிந்துவளர் மூல குண்டலியை
இனிதி றைஞ்சியவ ளருளினால்
எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்
எங்கள் மோனமனு முறையிலே
வயமி குந்துவரும் அமிர்த மண்டல
மதிக்கு ளேமதியை வைத்துநான்
வாய்ம டுத்தமிர்த வாரி யைப்பருகி
மன்னு மாரமிர்த வடிவமாய்ச்
செயமி குந்துவரு சித்த யோகநிலை
பெற்று ஞானநெறி அடைவனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 6

எறிதி ரைக்கடல் நிகர்த்த செல்வமிக
அல்ல லென்றொருவர் பின்செலா
தில்லை யென்னுமுரை பேசி டாதுலகில்
எவரு மாமெனம திக்கவே
நெறியின் வைகிவளர் செல்வ மும்உதவி
நோய்க ளற்றசுக வாழ்க்கையாய்
நியம மாதிநிலை நின்று ஞானநெறி
நிட்டை கூடவுமெந் நாளுமே
அறிவில் நின்றுகுரு வாயு ணர்த்தியதும்
அன்றி மோனகுரு வாகியே
அகில மீதுவர வந்த சீரருளை
ஐய ஐயஇனி என்சொல்கேன்
சிறிய னேழைநம தடிமை யென்றுனது
திருவு ளத்தினிலி ருந்ததோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 7

எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர்
எனக்கு ழைந்துருகி நன்மையாம்
இதமு ரைப்பஎன தென்ற யாவையும்
எடுத்தெ றிந்துமத யானைபோல்
கவ்வை யற்றநடை பயில அன்பரடி
கண்டதே அருளின் வடிவமாக்
கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு
கைகுவித்து மலர் தூவியே
பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம்
விழியு திர்ப்பமொழி குளறியே
பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது
பாவையொத் தசைத லின்றியே
திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும்
இன்ப வீட்டினி லிருப்பனோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 8

மத்தர் பேயரொடு பாலர் தன்மையது
மருவியே துரிய வடிவமாய்
மன்னு தேசமொடு கால மாதியை
மறந்து நின்னடிய ரடியிலே
பத்தி யாய்நெடிது நம்பும் என்னையொரு
மையல் தந்தகில மாயையைப்
பாரு பாரென நடத்த வந்ததென்
பார தத்தினுமி துள்ளதோ
சுத்த நித்தவியல் பாகு மோவுனது
விசுவ மாயை நடுவாகவே
சொல்ல வேண்டும்வகை நல்ல காதிகதை
சொல்லு மாயையினு மில்லைஎன்
சித்த மிப்படி மயங்கு மோஅருளை
நம்பி னோர்கள்பெறு பேறிதோ
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 9

பன்மு கச்சமய நெறிப டைத்தவரும்
யாங்க ளேகடவு ளென்றிடும்
பாத கத்தவரும் வாத தர்க்கமிடு
படிற ருந்தலை வணங்கிடத்
தன்மு சத்திலுயிர் வரவழைக்கும்எம
தரும னும்பகடு மேய்க்கியாய்த்
தனியி ருப்பவட நீழ லூடுவளர்
சனக னாதிமுனி வோர்கள்தஞ்
சொன்ம யக்கமது தீர அங்கைகொடு
மோன ஞானம துணர்த்தியே
சுத்த நித்தஅரு ளியல்ப தாகவுள
சோம சேகரகிர் பாளுவாய்த்
தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு
எம்மு கத்தினும் வணங்குவேன்
தெரிவ தற்கரிய பிரம மேஅமல
சிற்சு கோதய விலாசமே – 10