Thayumanavar Songs – தேசோ மயானந்தம்

12. தேசோ மயானந்தம்

மருமலர்ச் சோலைசெறி நன்னீழல் மலையாதி
மன்னுமுனி வர்க்கேவலமாய்
மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம்
மார்க்கத்தில் நின்றுகொண்டு
கருமருவு காயத்தை நிர்மலம தாகவே
கமலாச னாதிசேர்த்துக்
காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக்
கலைமதியி னூடுதாக்கி
உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல்
உணர்வான விழியைநாடி
ஒன்றோ டிரண்டெனாச் சமரச சொரூபசுகம்
உற்றிடஎன் மனதின் வண்ணந்
திருவருள் முடிக்கஇத் தேகமொடு காண்பனோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 1.

இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான்
என்னுமொரு மகரவாய்ப்பட்
டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம்
எனக்கொங்கை வரிசைகாட்டுந்
துப்பிதழ் மடந்தையர் மயற்சண்ட மாருதச்
சுழல்வந்து வந்தடிப்பச்
சோராத ஆசையாங் கானாறு வான்நதி
சுரந்ததென மேலும்ஆர்ப்பக்
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங்
கைவிட்டு மதிமயங்கிக்
கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே
கண்ணருவி காட்டும்எளியேன்
செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை
செய்வையோ சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 2.

தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்
சந்தையிற் கூட்டம் இதிலோ
சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை
சதுரங்க சேனையுடனே
வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்
வஞ்சனை பொறாமைலோபம்
வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
வஞ்சனையி லாதகனவே
எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
இரவுபக லில்லாவிடத்
தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே
யானென்ப தறவுமூழ்கிச்
சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 3.

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை
அடங்கி மனம்வீழநேரே
அறியாமை யாகின்ற இருளகல இருளளியும்
அல்லா திருந்தவெளிபோல்
கோடா தெனைக்கண் டெனக்குள்நிறை சாந்தவெளி
கூடிஇன் பாதீதமுங்
கூடினே னோசரியை கிரியையில் முயன்றுநெறி
கூடினே னோஅல்லன்யான்
ஈடாக வேயாறு வீட்டினில் நிரம்பியே
இலகிவளர் பிராணனென்னும்
இருநிதி யினைக்கட்டி யோகபர னாகாமல்
ஏழைக் குடும்பனாகித்
தேடா தழிக்கவொரு மதிவந்த தென்கோலோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 4.

பாடாது பாடிப் படித்தளவில் சமயமும்
பஞ்சுபடு சொல்லன்இவனைப்
பார்மினோ பார்மினோ என்றுசபை கூடவும்
பரமார்த்தம் இதுஎன்னவே
ஆடாதும் ஆடிநெஞ் சுருகிநெக் காடவே
அமலமே ஏகமேஎம்
ஆதியே சோதியே எங்குநிறை கடவுளே
அரசே எனக்கூவிநான்
வாடாது வாடுமென் முக வாட்டமுங்கண்டு
வாடா எனக்கருணைநீ
வைத்திடா வண்ணமே சங்கேத மாவிந்த
வன்மையை வளர்ப்பித்ததார்
தேடாது தேடுவோர் தேட்டற்ற தேட்டமே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 5.

பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து
பேசரிய வாசியாலே
பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப்
பேரம்ப லக்கடவுளாய்
அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே
அமிர்தப்ர வாகசித்தி
அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை
ஆண்டனைபின் எய்திநெறியாய்க்
குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக்
கோலமாய் அசபாநலங்
கூறினபின் மௌனியாய்ச் சும்மா இருக்கநெறி
கூட்டினை எலாமிருக்கச்
சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 6.

ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன்
அறிவினை மயக்கவசமோ
அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும்
அடுக்கடுக் காஅமைத்துப்
பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி
பிறங்குவத லாதொன்றினும்
பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப்
பேரின்ப முத்திநிலையுந்
தாராது தள்ளவும் போகாது னாலது
தள்ளினும் போகேனியான்
தடையேது மில்லையாண் டவனடிமை யென்னுமிரு
தன்மையிலும் என்வழக்குத்
தீராது விடுவதிலை நடுவான கடவுளே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 7.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்
கரடிவெம் புலிவாயையுங்
கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல்கொளலாஞ்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி னும்புகுதலாஞ்
சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்
தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 8.

எல்லாம் அறிந்தவரும் ஏதுமறி யாதவரும்
இல்லையெனு மிவ்வுலகமீ
தேதுமறி யாதவ னெனப்பெயர் தரித்துமிக
ஏழைக்குள் ஏழையாகிக்
கல்லாத அறிவிற் கடைப்பட்ட நான்அன்று
கையினால் உண்மைஞானங்
கற்பித்த நின்னருளி னுக்கென்ன கைம்மாறு
காட்டுவேன் குற்றேவல்நான்
அல்லார்ந்த மேனியொடு குண்டுகட் பிறைஎயிற்
றாபாச வடிவமான
அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ
தடாதடா காசுநம்பால்
செல்லா தடாஎன்று பேசுவா யதுதந்த
செல்வமே சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 9.

மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல்
மெனசிலம் பொலிகளார்ப்ப
வீங்கிப் புடைத்துவிழ சுமையன்ன கொங்கைமட
மின்னார்கள் பின்ஆவலால்
என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள்
இருவர்களில் ஒருவருண்டோ
என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை
ஏதென் றெடுத்துமொழிவேன்
அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன
அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம்
அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக்
கறமாதி பொருளுரைப்பத்
தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற
செல்வமே சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 10.

புத்தமிர்த போகமுங் கற்பகநன் னீழலில்
பொலிவுற இருக்குமியல்பும்
பொன்னுலகி லயிரா வதத்தேறு வரிசையும்
பூமண்ட லாதிக்கமும்
மத்தவெறி யினர்வேண்டும் மாலென்று தள்ளவும்எம்
மாலுமொரு சுட்டும் அறவே
வைக்கின்ற வைப்பாளன் மௌனதே சிகனென்ன
வந்தநின் னருள்வழிகாண்
சுத்தபரி பூரண அகண்டமே ஏகமே
சுருதிமுடி வானபொருளே
சொல்லரிய வுயிரினிடை யங்கங்கு நின்றருள்
சுரந்துபொரு கருணைமுகிலே
சித்திநிலை முத்திநிலை விளைகின்ற பூமியே
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 11.