Mahabharatham story in Tamil 33 – மகாபாரதம் கதை பகுதி 33

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-33

பேரழகுடன் விளங்கிய இந்திரபிரஸ்தம் நகரில் இந்திரலோகத்தில் கிடைக்காத பொருட்கள் கூட கிடைத்தன. அந்த பரந்தாமனே எழுப்பிய நகரம் அல்லவா? திலோத்துமை என்ற இந்திரலோகத்து பேரழகியும் அங்கே இருந்தாள். வயல்களில் மிக அதிகமாக கரும்பு விளைந்து, தேவைக்கு அதிகமானதால், வெட்டத் தேவையின்றி சாய்ந்து, அதில் இருந்து புறப்பட்ட சாறு ஆறாய் ஓடி, குளங்களை ஏற்படுத்தி யது. அன்னப்பறவைகள் அந்த கருப்பஞ்சாற்று குளங்களில் நீந்திய காட்சி பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது.

இந்திரபிரஸ்தத்தில் ஏராளமான மக்கள் குடியேறினர். இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பல தொழில் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். இந்த நேரத்தில் நாரத மகரிஷி இந்திரபிரஸ்தத்திற்கு வந்தார். இந்த கலகக்காரருக்கு இங்கே என்ன வேலை? அவர் வந்தால், ஏதோ ஒரு கலகம் நடந்தாக வேண்டுமே! ஆம்…அதை நடத்தி வைத்ததன் மூலம், பிற்காலத்தில் ஏற்படப்போகும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தரும் சில நன்மையான செயல்களையும் நடத்தவே அவர் வந்து சேர்ந்தார். அவரை பாண்டவர்களும், குந்திதேவியும் வரவேற்று, ரத்தின சிம்மாசனத்தில் அமர வைத்தனர். ராஜோபசாரத்தை ஏற்றுக்கொண்ட நாரதர் திரவுபதியை அழைத்தார். மகளே!…நீ ஐவருக்கு மனைவியாய் இருக்கிறாய்.

ஒரே நேரத்தில் அவர்கள் ஐந்துபேரும் ஏதாவது கட்டளையிட்டால், நீ என்னதான் செய்வாய்? உலகில் ஒருத்திக்கு ஒருவன் என்பதே சமாளிக்க சிரமமான விஷயம். அந்த ஒருவன் சொன்னதை நிறைவேற்றவே, நம் தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள். உனக்கோ ஐந்து பேர். ஆளுக்கொரு வேலையைச் சொல்வார்கள். யார் சொன்னதை செய்ய முடியாமல் போனாலும் உன்னைத் திட்டுவார்கள். இந்த நிலைமை உனக்கு சிரமமாய் இருக்குமோ இல்லையோ? அது மட்டுமல்ல! இன்னும் சில பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு வந்துவிடக்கூடாதே, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். திரவுபதி பதிவிரதை. சுவாமி! உங்கள் ஆசி இருக்கிறது, என் சகோதரன் கண்ணன் இங்கிருக்கிறார். அந்த பரந்தாமனின் அருளுடன் நான் எந்த சூழலையும் சமாளிப்பேன், என சொல்லிவிட்டாள்.

நாரதர் அவளது நம்பிக்கையை மனதுக்குள் மெச்சினார். ஆனாலும், பிரச்னையை அவர் விடவில்லை. பாண்டவர்களை அழைத்தார். அவர்களிடமும் இதே விஷயத்தைச் சொன்னார். சுவாமி! நீங்கள் சொல்வது நியாயம் தான். இதற்குரிய பாதையையும் நீங்களே காட்டிவிடுங்கள், என்றனர். தர்ம சகோதரர்களே! ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். நாராயணனால் வதம் செய்யப்பட்ட இரண்யகசிபுவை பற்றி நீங்கள் அறிவீர்கள்.

அவனது பேரன்கள் சுந்தன், உபசுந்தன். இரண்டு சகோதரர்களும் பிரிக்கமுடியாத அன்புடன் திகழ்ந்தனர். அவர்கள் மூன்று லோகங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பினர். இதற்காக கடும் தவமிருந்து மும்மூர்த்திகளையும் வரவழைத்து வரமும் பெற்று விட்டனர். அது மட்டுமா! யாராலும் தங்களுக்கு அழிவுவரக்கூடாது என்ற வரமும் பெற்றனர். பிறகென்ன! அட்டகாசம் தான், அமர்க்களம் தான்! இவர்களது தொல்லையைப் பொறுக்கமுடியாமல் தேவர்கள் திலோத்துமை என்ற அழகியைப் படைத்து சுந்த, உபசுந்தர்கள் கண்ணில் படும்படி நடமாட வைத்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. அன்றுவரை ஒற்றுமையாக இருந்த அந்த சகோதரர்கள் மனதில், இவளை யார் முதலில் அடைவது என்ற எண்ணம் உண்டாயிற்று.

சுந்தன் அவளது கையைப் பிடித்து இழுத்தான். உபசுந்தன் அவனிடமிருந்து அவளைப் பறித்தான். சுந்தன் தன் தம்பியிடம், அடேய்! அவள் உனக்கு அண்ணன் மனைவி. தாய் போன்றவள். தாயின் கையை பிடித்து இழுக்கிறாயே, என்றான். உபசுந்தன் அவனிடம், உஹூம்… அவள் என்னுடையவள். நீ என் அண்ணன். எனக்கு தந்தை போன்றவன். அவ்வகையில், அவள் உனக்கு மருமகள் ஆகிறாள். மருமகளை கையைப் பிடித்து இழுக்கிறாயே! வெட்கமாய் இல்லை, என்றான். வந்தது வினை. இருவரும் அந்தப் பெண்ணுக்காக கடும் போரிட்டனர். ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தனர்.

இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்பது இப்போது புரிந்து விட்டதா? உங்கள் ஐந்து பேருக்குள்ளும், திரவுபதியைக் குறித்து சண்டை வந்துவிடக்கூடாது. அதனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை அவளுடன் வாழ வேண்டும். அப்படி ஒருவர் அவளுடன் வாழும் போது, இன்னொருவர் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அப்படி பார்க்க நேர்ந்தால், அவர் ஒரு வருடம் மாறுவேடம் பூண்டு தீர்த்த யாத்திரை போய்விட வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுக்குத் தான் நல்லது, என்றார். தர்ம சகோதரர்களுக்கு அது சரியெனப்பட்டது. திரவுபதிக்கும் முழு மனநிறைவு. அவர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர். நாரதர் அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டார்.

பாண்டவர்களும் இந்த விதிமுறையை எவ்வித பிசகுமின்றி கடைபிடித்தனர். ஆனால், விதி யாரை விட்டது? ஒருநாள், ஒரு அந்தணன், அரண்மனை வாசலில் நின்று, ஏ பாண்டவர்களே! நீங்கள் ஆளுவது நாடா இல்லை காடா? என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள். பிரஜைகளை பாதுகாப்பவனே மன்னன். ஏ தர்மா! வெளியே வா! நியாயம் சொல், என்று கத்தினார். அந்தணரின் சப்தம் ஆயுதசாலைக்குள் இருந்த தர்மருக்கு கேட்க வில்லை. ஆனால், அரண்மனை உப்பரிகையில் உலவிக்கொண்டிருந்த அர்ஜூனனின் காதில், அந்தணனின் அவலக்குரல் கேட்டது. அவன் வேகமாக அந்தணன் நிற்குமிடத்துக்கு வந்தான்.

அந்தணரே! மன்னிக்க வேண்டும். அண்ணா ஆயுதசாலையை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு நியாயம் சொல்ல அவர் வரவேண்டும் என்பதில்லை. நானே பிரச்னையைத் தீர்த்து விடுகிறேன். தங்களுக்கு ஏதும் அநியாயம் நேர்ந்து விட்டதா? என்றான் கவலை தொனிக்க. வில்லாளி வீரனே! என் கறவைப் பசுக்களை இடையன் ஒருவன் பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பினேன். சில கள்வர்கள் அவனை அடித்துப் போட்டு விட்டு பசுக்களை ஓட்டி சென்று விட்டனர். செழிப்பு மிக்க ராஜாங்கம் நடத்துவதாக மார்தட்டுகிறீர்கள்! ஆனால், திருடர்கள் நம் நாட்டுக்குள் வந்து விட்டார்களே! என் மாடுகளை மீட்டுத்தா, என்றார்.

இவ்வளவுதானே! உமது பசுக்களை மீட்டுத்தருவது என் கடமை. நீங்கள் அமைதியாக இல்லத்துக்கு செல்லுங்கள். பசுக்கள் வந்து சேரும், என உறுதியளித்தான். அவசரமாக ஆயுதசாலைக்குள் புகுந்தான். அங்கே தற்செயலாக வந்திருந்த திரவுபதி அண்ணன் தர்மரின் அணைப்பில் இருந்தாள். அவளது முகத்தை கூட அர்ஜூனன் பார்க்கவில்லை. அண்ணனின் கால்களும், திரவுபதியின் சின்னஞ்சிறு அழகிய கால்களும் ஒன்றிணைந்திருப்பதைப் பார்த்து விட்டான். அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.