Mahabharatham story in Tamil 34 – மகாபாரதம் கதை பகுதி 34

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி-34

தர்மரும், திரவுபதியும் இணைந்திருந்த காட்சியை அர்ஜூனன் கவனித்தாலும் மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அவன் நினைத்திருந்தால், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் மறைத்திருக்கலாம். பார்த்த ஒன்றையே பார்க்கவில்லை என பொய்சாட்சி சொல்லும் காலம் இது. காரணம், நமக்கு அதனால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்! உயிர் மீது ஆசை. ஆனால், அர்ஜூனன் தர்மனின் தம்பியல்லவா! அந்த தர்மத்தின் சாயல் இவன் மீதும் படிந்திருந்தது என்பதில் ஆச்சரியமென்ன! அந்த பதட்டமான மனநிலையிலும் கடமையை அவன் மறக்கவில்லை. வில் அம்புடன் பசுக்களைக் கவர்ந்து சென்றவர்களை தேடிச் சென்றான். சில நிமிடங்களில் அவர்களைப் பிடித்து விட்டான். பசுக்களை மீட்டு அந்தணர்களிடம் ஒப்படைத்தான். மனம் அலைபாய்ந்தது. தர்மரும், திரவுபதியும் வரும் வரை காத்திருந்தான். நடந்த விஷயத்தை தலைகுனிந்து சொன்னான். அர்ஜூனா! இதில் பாதகம் ஏதுமில்லை. ஆயுதசாலைக்குள் சல்லாபத்தில் ஆழ்ந்திருந்தது எனது குற்றமே! மேலும், நீ வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அறியாமல் நடக்கும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. இதுபற்றி கவலை கொள்ளாதே, என்றார் தர்மர். அர்ஜூனன் மறுத்துவிட்டான்.

அண்ணா! தெரிந்து நடந்தது, தெரியாமல் நடந்தது என்ற வித்தியாசம் சட்டத்திற்கு கிடையாது. அது இருக்கவும் கூடாது. தெரிந்தே செய்துவிட்டு, தெரியாமல் செய்தேன் என தப்பித்துக் கொள்ள இது வழிவகுக்கும். மேலும், சட்டத்தை வகுத்தவர்களே அதை மீறுவது என்பது நமக்குள்ள மரியாதையைக் குலைத்து விடும். விதிமுறைகளின் படி நான் ஒரு வருட காலம் தீர்த்த யாத்திரை கிளம்புகிறேன். எனக்கு விடை கொடுங்கள், என்றான். தம்பியின் நேர்மையை எண்ணி பெருமிதமடைந்த தர்மர், அர்ஜூனனுக்கு அனுமதி கொடுத்தார். தாயிடமும், மற்ற சகோதரர்களிடமும் விடைபெற்று அவன் கங்கை கரைக்குச் சென்றான். கங்கைக்கரையில் மக்கள் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மத்தியில் ஒரு பேரழகி தன் தோழிகளுடன் நீராட வந்தாள். கலகலவென்ற சிரிப்பொலி கங்கைக் கரையை நிறைக்க, அவர்கள் ஆற்றில் இறங்கி நீராடினர். அர்ஜூனன் அவர்களைப் பார்த்தான். தோழிகள் சுற்றிலும் நின்று, அவள் மீது தண்ணீரை வாரியிறைக்க, வாழைத்தண்டிலும் வள வளப்பான வெண்ணிற கைகளால் அதை தடுத்து விளையாடினாள் அந்த கட்டழகி. அர்ஜூனனின் பார்வை அவள் மீது விழுந்தது. உலகில் இப்படியும் ஒரு பேரழகியா? இறைவா! உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே! இவள் மட்டும் எனக்கு கிடைத்தால்…! அவன் சிந்தித்தபடியே அவர்கள் நீராடுவதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்தான்.

இந்த காதலுக்கு மட்டும் காலமும் கிடையாது…இடமும் கிடையாது…ஆளும் புரியாது. அந்த பேரழகியும், கரையில் வில் அம்பு சகிதம் நின்றிருந்த அந்த பேரழகனைப் பார்த்து விட்டாள். ராமபிரானும், சீதையும் நோக்கியது போல, அவர்களின் கண்கள் கலந்தன. ஆ…எனது உலகில் கூட இப்படி ஒரு பேரழகனைக் கண்டதில்லையே. இவன் யார்? மணந்தால் இவனைத்தான் மணக்க வேண்டும். ஆனால், இவன் பூலோகவாசியாயிற்றே! நான் நாகலோகத்தவள் அல்லவா? இந்த உறவை யார் ஏற்பார்கள்? அவளது உள்ளம் கலங்கியது. தோழிகள் அவளது பார்வை சென்ற திசையை கவனித்தனர். அவர்கள் கேலி செய்யத் துவங்கி விட்டனர். எங்கள் தலைவியே! அந்த மாவீரனை கண்கொட்டாமல் பார்க்கிறாயே! அவன் மானிடன். அவனை நமது லோகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது, என்றனர் சிரிப்புடன். என் அன்புத்தோழிகளே! அப்படி சொல்லாதீர்கள். கண்டவுடன் அவன் மீது காதல் கொண்டு விட்டேன். தேசங்களை மட்டுமல்ல… இனங்களை மட்டுமல்ல…உலகங்களையும் கடந்தது இந்தக் காதல். நான் அவனை அடைந்தே தீர வேண்டும். அவன் யாரென விசாரியுங்கள், என்றாள். சாதாரணமாகத்தான் பேசுகிறாளோ என நினைத்த தோழிகளுக்கு அவளது காதலின் தீவிரம் புரிந்தது.

என்ன இருந்தாலும், தங்கள் ராணியல்லவா! அவர்கள், அந்த வாலிபனிடம் சென்றனர். அவனைப் பற்றி தெரிந்து கொண்டனர். தலைவிக்கு தகவல் சொன்னார்கள். என்ன… அவன் இந்திரனின் மகன் அர்ஜூனனா? எல்லா உலகமும் விரும்பும் அவனை இப்போது தான் பார்த்திருக்கிறேன். அவன் அர்ஜூனன் என்பது நிஜமானால், இப்போதே சொல்கிறேன். அவன் தான் என் கணவன், என்றாள். கரைக்கு அவசரமாகச் சென்றவள் அவனருகே சென்றாள். எதை எதிர்பார்த்தானோ, அது இவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவே, அர்ஜூனன் அடைந்த மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. அவளை அணைத்துக் கொண்டான். அவள் நாகலோகத்துக்கு அவனை அழைத்தாள். இருவரும் கங்கையில் மூழ்கினர். பிலாத்துவாரம் எனப்படும் நதியின் அடியிலுள்ள துவாரத்தின் வழியே நாகலோகத்துக்கு சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவள் கர்ப்பமானாள். ஒரு மகனைப் பெற்றாள். அவன் அரவான் என பெயர் பெற்றான். பின் மனைவியிடம் தான் வந்த நோக்கத்தைச் சொல்லி, பிராமண வேஷம் தரித்து, இமயமலைக்கு புறப்பட்டான். பின்னர் யமுனை, திருப்பதி, காஞ்சிபுரம், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், சிதம்பரம் தரிசனம் முடித்து, மதுரை வந்தான். மதுரையை ஆண்ட மன்னன் அவனை வரவேற்றான். அவனைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டான். அரண்மனையில் தங்க பிராமண வடிவத்தில் இருந்த அர்ஜூனனுக்கு அனுமதியளித்தான்.

அன்று மாலையில் அவன் அரண்மனைப் பூங்காவுக்கு சென்றான். அங்கேயும் ஒரு கட்டழகி இருந்தாள். அவளது இடை சிறியது. கண்கள் காந்த சக்தி கொண்டது. தோழிகளிடம் பேசும்போது, அவளது சிவந்த அதரங்கள் சிந்திய புன்னகைக்கு விலையே கிடையாது. அர்ஜூனனுக்கு அவளைப் பார்த்தவுடனேயே மயக்கம் ஏற்பட்டது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆற்றுமணலைக் கூட எண்ணி விடலாம், அர்ஜூனன் பெண்டாட்டிகளை எண்ண முடியாது என்று. கட்டழகனைத் தேடி கட்டழகிகள் வருவது சகூம் தானே! தோழிகளின் பேச்சில் இருந்து அவள் மன்னன் மகள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆம்…அவள் இளவரசி சித்திராங்கதை. அர்ஜூனன் தன்னை ஒளிந்திருந்து கவனித்ததை அவள் பார்க்கவில்லை. அவள் மீது கொண்ட மோகத்தால், தனது பிராமண வேடத்தை கலைத்து விட்டு, பேரழகு திலகனாக அவள் முன்னால் போய் நின்றான். சூரியன் தான் வானத்திலிருந்து திடீரென கீழிறங்கி வந்துவிட்டதோ, என அதிர்ந்து போன அவள், அதிர்ச்சியுடன் அவனைக் கண்கொட்டாமல் பார்த்தாள்.