Mahabharatham story in Tamil 45 – மகாபாரதம் கதை பகுதி 45

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 45

தங்களையும், தங்கள் மனைவியையும் இக்கட்டில் இருந்து விடுவிப்பதே தர்மரின் நோக்கம். அதன் காரணாகவே சூதுக்கு அவர் சம்மதித்தார். சுதந்திரமான சூழ்நிலையில் அவர்கள், காட்டுக்குப் புறப்பட்டனர். தன் குருமார்களான துரோணர், கிருபாச்சாரியார் மற்றும் அஸ்வத்தாமனிடம் தர்மர் ஆசி பெற்றார். மக்கள் மனமுருகி அழுதனர். அவர்கள் காட்டுக்குச் சென்றபோது அவருடன் தவுமிய முனிவர் என்பவரும் சென்றார். அவர்கள் காட்டுக்குள் நுழையவும், 12 ஆயிரம் முனிவர்கள் அங்கிருந்தனர். மகரிஷி தவுமியருடன் அவர்களும் புறப்பட்டனர். காமியவனத்திற்கு அவர்கள் சென்றதை திரவுபதியின் தந்தை துருபதன் கேள்விப்பட்டான். மகளையும், மருமகன்களையும் பார்க்க அவன் காமியவனத்துக்கு வந்து விட்டான். துருபதனுடன் திரவுபதி மற்றும் சந்திரகுலத்து அரசர்கள், திரவுபதியின் சொந்தக்காரர்களான அரசர்கள் ஆகியோரும் வந்தனர்.
போதாக்குறைக்கு கண்ணபிரானும் வந்து சேர்ந்தார்.

இந்த தகவல் எங்களுக்கே இப்போது தான் தெரிந்தது. என் மகளை மானபங்கப்படுத்த முயன்ற அந்த துரியோதனனையும், அவன் வம்சத்தையும், இப்போதே ஒழித்து தீர வேண்டும், என்றான் துருபதன். இன்னும் சில அரசர்கள், திரவுபதியை ஏளனமாக பேசிய அந்த தேரோட்டி மகன் கர்ணனை வானுலுலகுக்கு அனுப்ப வேண்டும், என்றனர். இல்லை….. இல்லை……. இத்தனைக்கும் காரணம் அந்த கொடியவன் சகுனி தான். முதலில் அவனை வெட்டிச் சாய்ப்போம், என்றனர் சில உறவினர்கள். கண்ணபிரான் இவர்களின் உரையாடல் கேட்டு சிரித்தார். அரசர்களே ! கோபம் மனிதனுக்கு சத்ரு. உணர்ச்சிவசப்பட்ட செயல்கள் வெற்றி பெறாது. தர்மர் தர்மம் அறிந்தவர். அவர் சபையோர் முன்னிலையில் வனம் செல்வதாக உறுதியளித்தார். வாக்கு தவறுபவர்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. அமைதியாக இருங்கள். வனவாசம் முடிந்து போருக்கான ஆயத்தங்கள் செய்வோம். முதலில் குந்திதேவியாரை காந்தாரியின் அரண்மனையில் தங்கச்சொல்லுங்கள். திரவுபதியின் ஐந்து பிள்ளைகளும் தாத்தா துருபதன் மாளிகையில் தங்கி வளரட்டும். பாண்டவர்களும் திரவுபதியும் மட்டுமே காட்டில் இருக்க வேண்டும், என்றார்.

கண்ணன் சொன்னபிறகு அங்கே அப்பீலுக்கு இடமேது எல்லாரும் சம்மதித்து விட்டபின்னர் கண்ணன் உட்பட அனைத்து அரசர்களும் அவரவர் இடங்களுக்கு திரும்பினர். தர்மர் கண்ணன் சொன்ன ஏற்பாட்டை அப்படியே செய்தார். இந்நேரத்தில், வியாசர் காமிய வனத்துக்கு வந்தார். பாண்டவர்கள் அவரை வணங்கி வரவேற்றனர். தர்மரிடம் வியாசர், தர்மா ! நடந்ததையே நினைத்துக் கொண்டுடிருப்பதில் பயன் ஏதுமில்லை. ஓரு விஷயம் தெரியுமா ? நடந்து போனதைப் பற்றி பேசுவது பாவம் என்பதை தெரிந்து கொள். எனவே பழைய விஷயங்களை நாம் கிளர வேண்டாம். இனி நடக்க வேண்டியது கவுரவர்களை நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பது ! அதற்கு என்ன தேவை என்பதை இந்த வனவாச காலத்தில் நீ சிந்திக்க வேண்டும். உன் தம்பி அர்ஜுனன் மிகச் சிறந்த வில்லாளி. ஆனால் இப்போது அவனிடமிருக்கும் அஸ்திரங்களைக் கொண்டு, கவுரவர்களை ஜெயிக்க முடியாது. எனவே அவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்று வர வேண்டும். பாசுபதாஸ்திரமே கவுரவர்களை அழிக்கும் ஒரே சாதனம். நீ அர்ஜுனனை கைலாய மலைக்கு அனுப்பு அங்கே அவன் தவமிருந்து அதை பெற்று வரட்டும் என்றார்.

வியாசர் சொன்னபடியே அர்ஜுனன் கயிலாயமலைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அங்கே, அவன் தியானத்தில் ஆழ்ந்தான். சிவபெருமானோ அவனுக்கு பிரத்யட்சம் ஆகவில்லை. வருத்தப்பட்டான்; அங்கிருந்த முனிவர்கள் அர்ஜுனா ! சிவதரிசனம் என்பது அவ்வளவு எளிதல்ல. முற்றும் துறந்த முனிவர்களான நாங்களே அந்த பரமேஸ்வரனைக் காண்பதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கிரகஸ்தனான உன் கண்ணுக்கு அவர் தெரிய வேண்டுமானால், நீ பல விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லி தவவிதிமுறைகளை எடுத்துக் கூறினர். எதற்கும் கலங்காத அர்ஜுனன், அவர்கள் சொன்னபடி அக்னி வளர்த்து அதன் நடுவில் நின்றபடி தவம் செய்தான். சிவத்தியானத்தால் அக்னி அவனுக்கு குளிரவே செய்தது. சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் இதே போல அவன் தவமிருந்தான்.

அர்ஜுனன் குந்திதேவிக்கு இந்திரன் மூலம் பிறந்தவன் என்பது முன்கதை. குந்திதேவியார், துர்வாசர் கற்றுக்கொடுத்து சூரிய மந்திரத்தை விளையாட்டாக சொல்லி அவன் மூலமாக கர்ணனை பெற்றதும், பின்னர் சூரியனால் கன்னியாக்கப் பட்டு பாண்டுவை மணந்து அவன் மூலம் குழந்தைகள் இல்லாததால், தேவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி, அவர்கள் மூலமே குழந்தை பெற்றதும் தெரிந்த விஷயம். அவ்வகையில் அர்ஜுனனுக்கு உதவ இந்திரன் முன்வந்தார். அவனது தவசக்தியை சோதிப்பதற்காக ஊர்வசி, ரம்பை, மேனகையை அனுப்பி மன்மதக்கணையை ஏவ மன்மதனையும் அனுப்பினான். அர்ஜுனன் கண் விழிக்கவே இல்லை. அக்னி குண்டத்திலேயே அசையாமல் நின்றான். அவர்கள் தங்கள் திட்டம் பலிக்காமல் தோற்றனர். மகிழ்ந்த இந்திரன் அவன் முன்காட்சி தந்து பாசுபத அஸ்திரம் நிச்சயம் கிடைக்கும் என மகனுக்கு நம்பிக்கையூட்டினான்.

இந்த நேரத்தில் துரியோதனன் காட்டில் இருக்கும் அர்ச்சுனனைக் கொல்வதற்காக முகாசுரன் என்பவனை ஏவிவிட்டான். அவன் அர்ஜுனனைக் கொல்ல நெருங்கும் வேளையில் பார்வதிதேவியார் கருணை உள்ளத்துடன் பரமசிவனை அணுகினாள். அன்பரே ! தாங்கள், உங்கள் பக்தனின் கடும் தவத்திற்கு ஏன் இன்னும் இரங்கவில்லை ? என்றாள் தாயுள்ளத்தோடு.