Mahabharatham story in Tamil 47 – மகாபாரதம் கதை பகுதி 47

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி – 47

அர்ஜுனனின் அறைக்குள் அவள் வந்ததும், அவன் அவளது பாதங்களில் விழுந்தான். அம்மா, தாங்களை வணங்குகிறேன். எங்கள் குலத்தில் முன்னவரான புரூரவ சக்ரவர்த்திக்கு தாங்கள் மனைவியாக இருந்திருக்கிறீர்கள். அவ்வகையில், எனக்கு தாயாகிறிர்கள், என்றாள். ஊர்வசிக்கு மகாகோபம். ஏ அர்ஜுனா ! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். தேவதாசிகளை உறவு கொண்டாடும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மறந்து விட்டாயா ? நாங்கள் யாரிடம் உறுவு கொள்ள விரும்புகிறோமோ, அவர்கள் எங்களை திருப்தி செய்ய வேண்டுமென்ற விதிக்கு புறம்பாக பேசினாய். உன் வீரம், உன் திறமைக்காக என்னை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன். நீயோ, என்னைத் தாயாகப் பார்த்தாய். நீ பேடியாக (ஆணும் பெண்ணும் மற்ற நிலை) போ, என் சாபம் கொடுத்தாள்.

அந்த மட்டிலேயே அர்ஜுனனின் வீரம் அனைத்தும் தொலைந்து. அவன் பேடியாகி விட்டான். தன் நிலைக்காக அவன் வருந்தினான். ஊர்வசி திரும்பிப் போய்விட்டாள். இந்த விஷயம் இந்திரனை எட்டியதும், அவன் வருத்தப்பட்டான். ஊர்வசியை வரச்சொன்னான். என் மகனுக்கே சாபம் கொடுக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளாகி விட்டாயா ? என அவளைக் கடிந்தான் அவள் நடுங்கி நின்றாள். இந்திராதி தேவா ! என்னை மன்னிக்க வேண்டும். என்னைத் திருப்தி செய்யத் தவறியதாலேயே அவ்வாறு செய்தேன், என அழாக் குறையாகச் சொன்னாள். தேவமாந்தர் சாபத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால், சாப விமோசனம் வேண்டுமானால் கேட்கலாம். அவர் ஊர்வசியுடன் அர்ஜுனன் இருக்குமிடம் வந்தான். மகனே ! எனது இடத்திற்கு வந்து இப்படியொரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். நீ சிவனுடன் போரிட்டு பாசுபதாஸ்திரம் பெற்ற தீரன். அவை அனைத்தும் வீணாய் போய் விட்டதை நினைத்து வருந்துகிறேன், என்றாள்.

தேவர்களும் அர்ஜுனனின் நிலைக்காக வருந்தினர். அவர்கள் ஊர்வசியிடம் தேவமங்கையே ! நீ நியாயமாகவே நடந்து கொண்டாய். இருப்பினும் அர்ஜுனன் வீரன். அவன் தர்மத்தைக் காப்பாற்றும் யுத்தம் செய்வதற்காகவே சிவனிடம் அஸ்திரம் பெற்றான். தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உனக்கு கருத்து வேறுபாடு இருக்காது எனவே, சாபத்தின் தீவிரத்தை குறைத்துக் கொள், என்றனர். ஊர்வசி அவர்களின் கோரிக்கையை ஏற்றாள். அர்ஜுனா ! நீ எப்போதெல்லாம் இந்த வடிவம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறாயோ, அப்போது மட்டும் அதனைப் பெறுவாய் என்றாள். அந்தக் கணமே அர்ஜுனன் தன்னிலை அடைந்து விட்டான். மனிதர்களுக்கு வரும் துன்பம் ஏதோ ஒரு நன்மையை மேற்கொண்டே நிகழ்கிறது. பிற்காலத்தில் இதே வடிவம் அர்ஜுனனுக்கு உதவப்போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை. பின்னர் இந்திரன் அர்ஜுனனுக்கு தேவலோக இளவரசனாக பட்டம் சூட்டினான். இதை இந்திராணி ஆட்சேபித்தாள். என் மணவாளரே ! அர்ஜுனன் உமது பிள்ளை என்பதால், நானும் அவனை ஆசிர்வதித்தேன். ஆனால், மானிடனான அவனை தேவலோகத்து இளவரசனாக்குவதை எதிர்க்கிறேன். இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்றாள்.

அர்ஜுனனும் இந்திராணி சொன்னதை ஒப்புக்கொண்டான். அன்னை சொன்ன வார்த்தைகளில் பிசகிருப்பதாகத் தெரியவில்லை என தந்தையிடம் சொன்னான். தேவர்களுக்கும், ஒரு மானிடனை தேவலோக இளவரசனாக்கியதில் உடன்பாடில்லை. இந்திரன் அவர்களின் உள்ளக்கருத்தை உணர்ந்தவனாய், எல்லோரும் கேளுங்கள். இந்த அர்ஜுனன் சிவனிடம் அஸ்திரம் பெற்றவன். அக்னியிடம் குதிரை, தேர், காண்டீபம் பெற்றான். பல தேவர்கள் இவனுக்கு பல வரங்களை தந்துள்ளனர். எனவே இவன் தேவர்களுக்கு எந்த வகையிலும் குறையாதவன் என்று சமாதானம் சொல்லி, அர்ஜுனா ! நீ எனக்கொரு வரம் தர வேண்டும் என்றார். தந்தையே தேவர்களே மானிடர்களுக்கு வரமளிக்க முடியும். என்னால் உங்களுக்கு என்ன வரம் தரமுடியும் என்றதும் மகனே! கடலுக்கு நடுவே தோமாயபுரம் என்ற நாடு இருக்கிறது. அங்கே மூன்றுகோடி அசுரர்கள் உள்ளனர். அவர்கள் நிவாதகோடி அசுரர்கள் என்பர். திருமால், சுப்ரமணியர், எமன் ஆகியோரால் அழியாத வரம் பெற்றுள்ளனர். அவர்களை நீ அழிக்க வேண்டும், என்றான்

அர்ஜுனன் சற்றும் தயங்கவில்லை. யுத்தமா ! சரி… புறப்படுகிறேன். அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்றாலும், இந்த காண்டீபத்துக்கு பதில் சொல்லட்டும், என்று புறப்பட்டான். தேவர்கள் அதிர்ந்தனர். இந்திரரே ! இதென்ன விபரீதம் ! தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை… அதிலும் மூன்று கோடி கோடி பேரை இவன் தனித்து நின்று எப்படி வெல்வான், என்றனர். தேவமங்கையர்கள் அர்ஜுனனை பார்த்து, இதென்ன அறிவீனம் ! அத்தனை அசுரர்களையும் இவன் ஒருவன் ஜெயித்து விடுவானோ என்று சொல்லி ஏளனமாகச் சிரித்தனர். எதையும் பொருட்படுத்தாத அர்ஜுனனுக்கு, திருமால் ராமாவதாரம் எடுத்தபோது, அவர் பயன்படுத்திய தேரை கொடுத்தான். அதை மாதலி என்ற தேரோட்டி ஓட்டினான். அது ஆகாயத்தில் பறக்கக் கூடிய திறனுடையது. அந்த தேரில், சித்திரசேனன் என்ற கந்தர்வனும் வழிகாட்டியாக வந்தான். கடலை அடைந்ததும், சித்திரசேனா ! நீ போய் அசுரர்களை அர்ஜுனனிடம் போரிட வரச்சொல், என்று மாதலி அனுப்பி வைத்தான். அதற்குள் அர்ஜுனன் தனது வில் நாணை இழுக்க உலகத்தையே கிடுகிடுக்கச் செய்யும் பேரொலி உண்டானது. அசுரர்கள் அதிர்ந்து போய், இந்திரன் தான் தங்களுடன் போரிட வந்துள்ளதாக எண்ணினர். இதற்குள் சித்திரசேனன் அசுரர் உலகம் சென்று அவர்களை போருக்கு அழைத்தான்.

அசுரர்கள் கோபத்துடன் இங்கு வந்தனர். அவர்கள் அர்ஜுனனிடம், உன்னைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்த சாதாரண துரியோதனனை ஜெயிக்க முடியாத நீ எங்களை ஜெயிக்க வந்தாயோ ? என்று சொல்லி சிரித்தனர். இதைக் கேட்ட அர்ஜுனன் கோபமாகி அம்புகளை எய்ய அவர்கள் பதிலுக்கு அம்புவிட கடும் யுத்தம் நடந்தது. ஆனால், அர்ஜுனனின் வில்லாற்றலின் முன் அவர்களது அம்புகள் எடுபடவில்லை. பலமுறை அசுரர்கள் தோற்று விழுந்து இறந்தாலும், உடனே உயிர் பெற்று எழுந்தனர். அர்ஜுனனால் ஏதும் செய்யு முடியாத நிலையில் அசரீரி ஒலித்தது.