Mahabharatham story in Tamil 60 – மகாபாரதம் கதை பகுதி 60

 2,335 total views,  2 views today

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 60

அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா! இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா! இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே! நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே! இவன் எங்கிருந்தான்? எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்? என்றான். விராடனே! இவன் உலகை ஆளும் முயற்சியில் கடும் பிரயத்தனம் செய்து, ஒருமுறை தேவலோகத்துக்குள் நுழைந்து விட்டான். அஷ்டவசுக்கள் எனப்படும் எட்டுத்திசைகளின் காவலர்களிடம் சிக்கிக்கொண்டான். மானிடனான இவன், தேவலோகத்துக்குள் நுழைந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அவனை மயிலாகும்படி சபித்து விட்டனர். அவன் மீண்டும் உன் அரண் மனையை அடைந்தான். நீயோ, ஏதோ ஒரு மயில் வந்திருப்பதாக நினைத்து அசட்டை செய்து துரத்தி விட்டாய். பின்னர் இவன் பல இடங்களில் சுற்றித்திரிந்தான். பின்னர் தவம் செய்து, சிவபெருமானின் அருளால் பல அஸ்திரங்களையும், கவசங்களையும் பரிசாக பெற்றான். ஒரு கட்டத்தில் இவன் எனக்கு உதவி செய்தான். அவனை உன்னிடம் ஒப்படைக்கவே அழைத்து வந்தேன், என்றார்.

கண்ணனின் தரிசனம், காணாமல் போன மகன் திரும்பி வந்தது, தங்களுடைய அரண்மனையில் தங்கியிருந்தவர்களோ இந்திரபிரஸ்த தேவர்களான பாண்டவர்கள் என்ற மகிழ்ச்சிகணைகள் ஒரு சேர தாக்கியதால் விராடராஜன் அடைந்த ஆனந்தம் எல்லை மீறியது. பின்னர் அபிமன்யுவுக்கும், விராடனனின் மகள் உத்தரைக்கும் மிகச் சிறப்பாக திருமணம் நடந்தேறியது. பாண்டவர்கள் தங்கள் மகன் அபிமன்யு, மருமகள் உத்தரையுடன் விராட தேசத்தில் இருந்து விடை பெற்று, உபப்லாவ்யம் எனஊருக்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள், துரியோதனனிடம் இருந்து நாட்டை மீட்பது தொடர்பாக கிருஷ்ணரின் அண்ணன் பலராமன், கிருஷ்ணர் மற்றும் தங்கள் தோழமை நாட்டு அரசர்களிடம் விவாதம் நடத்தினர். பலராமன் ஒரு யோசனை சொன்னார். பாண்டவர்களே! நீங்கள் சூதாடித் தான் நாட்டைத் தோற்றீர்கள். அதுபோல் சூதாடித்தான் நாட்டை மீட்க வேண்டும். போரிட்டு தோற்றவர்களே, மீண்டும் போர் தொடுத்து தங்கள் நாட்டை மீட்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். எனவே, சூதாடுவது பற்றி சிந்தியுங்கள், என்றார்.

கிருஷ்ணர் அக்கருத்தை ஆமோதித்தார். இந்த பேச்சு வார்த்தையில் உலூக முனிவரும் பங்கேற்றார். அவரை திருதராஷ்டிரனிடம் தூது அனுப்புவது என முடிவாயிற்று. கிருஷ்ணர் அவரிடம், முனிவரே! ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் படி பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞான வாசம் இரண்டையும் வெற்றியுடன் முடித்துவிட்டதால், நாடு அவர்களுக்கு சொந்தம் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். சூதாடியே மீண்டும் நாட்டைப் பெற விரும்புகிறோம் என்பதையும் சொல்லுங்கள். மறுத்தால், போர் தவிர்க்க முடியாதது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி விடுங்கள். மற்றதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றார். தர்மர் உலூகரிடம், மகரிஷியே! தாங்கள் என் பெரியப்பா திருதராஷ்டிர மகாராஜாவுக்கும், பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகிய பெரியோர்களுக்கும் என்னுடைய பாத நமஸ்காரத்தை தெரியுங்கள், எனச் சொல்லி அனுப்பினார்.

எதிரிகள் வரிசையில் இருந்தாலும், பெரியவர்களுக்குரிய மரியாதையைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற கருத்து இவ்விடத்தில் வலியுறுத்தப்படுகிறது. உலூகர் அஸ்தினாபுரத்தை அடைந்தார். அவரை துரியோதனன் பாதம் பணிந்து வரவேற்றான். திருதராஷ்டிரனும், இதர பெரியவர்களும் ஒரு நவரத்தின சிம்மா சனத்தில் அவரை அமர வைத்து பாதபூஜை செய்து மரியாதை செலுத்தினர். அவர் வந்த காரணம் பற்றி திருதராஷ்டிரன் கேட்ட போது, திருதா உனக்கு தெரியாதது ஏதுமில்லை. உன் தம்பி மக்கள் தங்கள் வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதால், முறைப்படி நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்று சொன்னாரோ இல்லையோ, துரியோதன், கர்ணன், சகுனி ஆகியோர் கொதித்து விட்டனர். திருதராஷ்டிரன் வழக்கம் போல் மவுனமே காத்தான். விதுரர் துரியோதனனிடம் நீதியை போதித்தார். நாட்டை ஒப்படைத்து உயிரைக் காத்துக் கொள்ளும்படி சொன்னார். பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

பாண்டவர்களிடம் நாட்டை ஒப்படைக்கும்படியும், அர்ஜுனனுக்கு எதிராக விற்போர் செய்ய நம்நாட்டில் யாருமே இல்லையே என்றும் பீஷ்மர் சொன்னதும், பிதாமகரே! தாங்கள் ஒரு வீரனா? ராமபிரானால் தோற்கடிக்கப்பட்ட பரசுராமரிடம் வில் வித்தை படித்தீர். அவரையே ஜெயித்தீர். குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற ஒரே தகுதியைத் தவிர உம்மிடம் வேறென்ன தகுதி இருக்கிறது? என் நண்பனை தர்மரிடம் சரணடைந்து விடு என்று சொல்வதில் கோழைத்தனம் நிறைந்திருக்கிறது, என்றான். பீஷ்மர் கர்ணனைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார்., பார்த்தேன், பார்த்தேன், விராட நாட்டிப் போரில் நீ, அர்ஜுனனிடம் புறமுதுகிட்டு ஓடிய உன் வீரத்தை, என்றதும், கர்ணன் பதிலேதும் பேசவில்லை. துரியோதனனும் தாத்தாவின் கேலியான வார்த்தைகளை பொருட்படுத்த வில்லை. தூது வந்த உலூக முனிவரும், துரியோதனா! அர்ஜுனனின் வில் உன்னை புறமுதுகிட்டுச் செய்யும் என்றார்.

யார் சொன்னதையும் கேட்க மறுத்து விட்டான் துரியோதனன். திருதராஷ்டிரனும் பேசாமடந்தையாய் இருக்கவே, கர்ணனின் பேச்சையும், வீரத்தையும் நம்பிய துரியோதனன், தன் நண்பனைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என நினைத்து, உலூகாரைப் பார்த்து கைகொட்டி சிரித்து, முனிவரே! ஒரு பிடி மண்கூட பாண்டவர்களுக்கு கிடையாது, என்பதை தெளிவாகக் கூறிவிடும், எனச் சொல்லி அனுப்பி விட்டான். உலூகாரும் துவாரகை சென்று, அங்கிருந்த கிருஷ்ணரிடம் நடந்ததை சொன்னார்.