Mahabharatham story in Tamil 76 – மகாபாரதம் கதை பகுதி 76

மகாபாரதம் – பகுதி 76

படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ என்று நினைத்த கவுரவப்படை பின் வாங்க ஆரம்பித்தது. இதுகண்டு துணுக்குற்ற துரியோதனின் மைத்துனர்கள், அவனுக்கு ஆதரவாக வர போர் உக்கிரமானது. அவர்களைச் சிதறி ஓட வைத்தான் பீமன். விராடதேச இளவரசன் உத்தரகுமாரனைக் கொன்ற சல்லியனை நோக்கி முன்னேறினான் அவனது தம்பி
சுவேதன்.


இதுகண்ட துரியோதனன் பீஷ்மரை அவனுடன் போரிட அனுப்பினான். சுவேதனோ பெரும் வில்லாளி. அவன் விட்ட பாணங்களின் விவளவாக பிதாமகர் பீஷ்மரே தன் வில்லையும் அம்புகளையும் இழந்து நிராயுதபாணியானார் என்றால், அவனது வீரத்தை அளவிட மதிப்பேது? அதன் பின் மற்றொரு வில்லை எடுத்து அவர் போரிட வேண்டிய தாயிற்று. அவர் விட்ட அம்பில் சுவேதனின் கிரீடம் பறந்தது. இது கண்டு கோபமடைந்த சுவேதன் கடும்போர் புரிந்து மீண்டும் அவரை சோர்வுக்குள்ளாக்கினான்.

இவனை எப்படித்தான் வெல்வது என்று பீஷ்மரே யோசிக்க ஆரம்பித்து விட்டார். பீஷ்மர் சோர்ந்து விட்டதைக் கவுனித்த துரியோதனன், மேலும் பல அரசர்களை அவருக்கு துணைக்கு அனுப்பினான். ஒருவனை அடிக்க இத்தனை பேரா என்று சொல்லுமளவுக்கு, சுவேதனை சுற்றி நின்று அரசர்கள் தாக்கினர். ஆனால், வீராதி வீரனான சுவேதன் அவர்கள் அனைவரையும் பின்வாங்கச் செய்யும் வகையில் அஸ்திரங்களை எய்தான்.


இப்படி ஒருவன் தன் பக்கம் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று துரியோதனனே நினைக்குமளவுக்கு நிலைமை போய்விட்டது. இதையடுத்து மேலும் ஐந்து பலசாலி அரசர்களை அனுப்பினான். அவர்களில் குகுர தேசத்து மன்னனும் அடக்கம். அவனும் பெரும் வில்லாளி. அவர்களையும் தோற்கடித்தான் சுவேதன்.வானுலக தேவர்களே அவனது வீரத்தை ஆஹா என விண்ணிலிருந்து பாராட்டினர். அவனது இந்த வெற்றிக்கு காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் அவன் இந்த வில்லை, தான் செய்த தவத்திற்காக சிவபெருமானிடமிருந்தே பெற்றிருந்தான். சிவதனுசுக்கு ஏது தோல்வி? அதனால் தான் இவ்வளவு உக்கிரமாக அவனால் போரிட முடிந்தது. இவனை அழிக்க வேண்டுமானால் வீரம் பயன்படாது. விவேகம் தான் பயன்படும் என்று பீஷ்மர் சிந்தித்தார். எங்கே பொறுமை குறைகிறதோ, எங்கு உணர்ச்சிகள் அதிகமாகிறாதோ, அங்கே தோல்வி தேடி வந்து சேரும்.


இந்த தத்துவத்தை உணர்ந்தவர் பிதாமகர் பீஷ்மர். அவர் சுவேதனிடம், வில்வித்தையில் உன்னிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்றே சொல்வேன். ஆனால், உன் திறமை மட்டுமே இப்படி ஒரு வெற்றியை விட்டு, தன் உறையில் இருந்து வாளை உருவியபடியே, என்னையா வீரனில்லை என்றீர்? என்றபடியே, பீஷ்மர் முன்னால் நீட்டினான். அக்கணமே, பீஷ்மர் வில்லை எடுத்து அவனது கையில் அஸ்திரத்தைப் பாய்ச்ச அவனது கை அறுந்து விழுந்தது. ஆனாலும், அந்த வீரமகன் அதைப் பொருட்படுத்தவில்லை.

இடது கையில் வாளைப் பிடித்து பீஷ்மரின் தலையை அறுத்தெடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டான். அப்போது பீஷ்மர் மற்றொரு அம்பைப் பாய்ச்ச அவனது மார்பில் தைத்தது. அவன் விண்ணுலகை அடைந்தான். அவன் சுத்த வீரனாக சொர்க்கத்துக்குள் நுழைந்ததும், தேவர்களே அவனை மாலையிட்டு வரவேற்றார்கள். வெறும் வீரமும், ஒற்றைக் கலையும் மட்டும் மனிதனை வெற்றி பெற வைத்து விடாது. சகல கலைகளையும் மனிதன் கற்க வேண்டும். கற்றாலும் அறிவுத்திறனையும் பயன்படுத்த தெரிய வேண்டும். அவனே பூரண வெற்றியடைய முடியும் என்பது பாரதம் நமக்கு உணர்த்தும் பாடம்.


முதல்நாள் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அன்று கவுரவர் பக்கமே அதிக வெற்றி என்பது போல் மாயை ஏற்பட்டது. தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த விராடராஜன் கலங்கி நின்றான். அவனை தர்மர் தேற்றினார். விராடராஜா! உன் மகன் சுவேதனை விண்ணுலக தேவர்களே பாராட்டியிருக்கிறார்கள். அவன் வீர சொர்க்கமே அடைந்தான். மகாத்மா பீஷ்மரே மாண்பு தவறி நடந்து கொண்டதன் விளைவே உன் மகனின் மரணம் என்பதே உனக்கு வெற்றி தான்.

உத்தர குமாரனும் பல வீரச்செயல்களை செய்தே மாண்டான். வீரப்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்கள் இறந்து போனால் வருந்தக்கூடாது, என தேற்றினார். அப்போது விராடராஜன் மனம் மகிழ்ந்து, தர்மரே! என் பிள்ளைகள் உயிர் மட்டுமல்ல, எனது உயிரும் உமக்காகவே செல்லும், என்றான். தர்மர் அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். இரண்டாம் நாள் விடிந்தது. பாண்டவர் படைக்கு அன்று திரவுபதியின் மூத்த சகோதரன் திருஷ்டத்யும்நன் தலைமை சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். இரண்டு படைகளும் களத்தில் இறங்கின.