Mahabharatham story in Tamil 91– மகாபாரதம் கதை பகுதி 91

மகாபாரதம் பகுதி-91

கண்ணபிரான் உடனே தனது பாஞ்சஜன்ய சங்கை ஊதினார். அதன் ஒலி கேட்டு களத்தில் நின்ற அனைவரும் அடங்கி நின்றனர். அப்போது, அர்ஜுனனிடம், அர்ஜுனா! கலங்காதே! இதோ இந்த வேலாயுதத்தை வைத்துக் கொள். முன்பொரு முறை பூமாதேவி இந்த வேலால் தான் நரகாசுரனைக் கொன்றாள். இது எத்தகைய கவசங்களையும் துளைக்கும் சக்தி வாய்ந்தது,என்று சொல்லிக் கொடுத்தார். அதைக் கொண்டு துரியோதனனை அர்ஜுனன் கொன்றிருக்கலாம், ஆனால், தன் அண்ணன் பீமன் செய்த சபதம் நினைவுக்கு வந்தது. என்னால் தான் உனக்கு அழிவுஎன துரியோதனனிடம் அவன் சபதம் செய்திருந்ததால், துரியோதனன் மீது அந்த வேலை எறிந்தான். அந்த வேல் துரியோதனனின் கவசத்தை நொறுக்கியது. அதற்கு மேல் துரியோதனன் அங்கு நிற்கவில்லை. பின்வாங்கி ஓடிவிட்டான். இதன்பிறகு அர்ஜுனன் மற்ற வீரர்களின் தலைகளைக் கொய்து விட்டு முன்னேறிச் சென்றான். கடுமையான சோதனைகள் நமக்கு வரும் போது கண்ணனை நினைத்தால் போதும்! எத்தகைய தகிடுதத்தம் செய்தேனும் அவன் நம் துன்பங்களை தீர்த்து விடுவான். அவனால் முடியாதது ஏதுமில்லை. குறிப்பாக, கிரக தோஷம் உள்ளவர்கள் கிருஷ்ணன் கோயிலுக்கு போய் நெய் தீபம் ஏற்றி வைத்தால் அவன் நமக்கு பாதுகாப்பு தருவான். துன்பங்கள் பறந்தோடி விடும். அழிய இருந்த வேளையில், பிரம்மனால் தரப் பட்ட கவசத்தையே அர்ஜுனன் அடித்து நொறுக்கியிருக்கிறான் என்றால் அதற்கு காரணம் கண்ணனை சரணாகதி அடைந்ததால் தான்! இதற்கிடையே கர்ணன் உள்ளிட்டவர்களை புறமுதுகிடச் செய்தும், துரியோதனனின் தம்பிமார்கள் சிலரைக் கொன்றும் பீமன் முன்னேறிச் சென்று சாத்தகி இருந்த இடத்திற்கு போய் சேர்ந்தான். அங்கே சாத்தகியும், கவுரவர்களின் அதிரதச் சேனாதிபதியான பூரிச்ரவஸும் போர் செய்து கொண்டிருந்தனர்.

சாத்தகியை பூரிச்ரவஸ் மல்யுத்தம் செய்து கொல்ல முயன்றான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அர்ஜுனா! என் தம்பி சாத்தகியைக் காப்பாற்று. பூரிச்ரவஸ் மீது அம்பு வீசி அவனைக் கொன்றுவிடு,என்றார்.அர்ஜுனன் மறுத்தான். சமபலம் வாய்ந்த இருவீரர்கள் மோதும் போது, அவர்களில் ஒருவருக்கு ஆதரவாக நடப்பது முறையா கிருஷ்ணா!என்று கேட்டான். கிருஷ்ணருக்கு கோபம் பொங்கியது. சொன்னதைச் செய்,என்று உத்தரவிட்டார். அர்ஜுனனும் அவன் தோள்கள் மீது அம்புகளை வீச, அவன் கீழே விழுந்தான். அப்போது சாத்தகி அவனைக் கொன்று விட்டான். உடனே துரியோதனன் கத்தினான். கிருஷ்ணா! நீ செய்தது கொஞ்சமும் தர்மமல்ல. இரு வீரர் களில் ஒருவருக்கு சாதகமாக நடந்து கொண்டாயே,என்றான் கோபத்துடன். துரியோதனா! தர்மத்தைப் பற்றி நீ பேசாதே. நேற்றைய போரில் அபிமன்யுவை தர்மப்படியா கொன்றாய்?எனக் கேட்டு அவனை அடக்கினார். அவனால் பதில் பேச முடியவில்லை. உடனே துரியோதனன் படை வீரர்களை நோக்கி, ஜயத்ரதனை நிலவறைக்குள் மறைத்து வையுங்கள். அவனருகே அர்ஜுனனை நெருங்க விடாதீர்கள். ஜயத்ரதன் காப்பாற்றப்பட்டு விட்டால் அர்ஜுனன் அழிந்து போவான்,என ஆவேசமாக பேசினான்.ஜயத்ரதனுக்கு காவல் மேலும் பலப்படுத்தப்பட்டது. அவன் பயந்து போய் நிலவறையில் பதுங்கியிருந்தான். அஸ்தமன வேளையும் நெருங்கி விட்டது. களமே பரபரப்பில் இருந்தது. அர்ஜுனன் வெல்வானா? மாள்வானா? அப்போது, கிருஷ்ண பராமாத்மா யாரும் அறியாமல், வஞ்சனையாக ஒரு உபாயம் செய்தார். தன் சக்ராயுதத்தை வானில் ஏவி, சூரியனை மறைக்கச் செய்தார். அஸ்தமனம் ஆகிவிட்டது போன்ற தோற்றம் ஏற்படவே, கவுரவர்கள் ஆர்ப்பரித் தனர். அர்ஜுனனும் அஸ்தமனம் ஆகிவிட்டதென்றே நம்பினான். ஐயத்ரதனை நிலவறையில் இருந்து வெளியே வரும்படி சொன்னார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் வந்தான். அஸ்தமனம் ஆகிவிட்டதால் இனி அர்ஜுனனால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவில் வீறுகொண்டு களத்துக்குள் வந்தான். அப்போது கண்ணபிரான் அர்ஜுனனிடம், அர்ஜுனா! இதோ வருகிறான் ஜயத்ரதன்! அவன் மீது அம்பை வீசி கொல். அவனைக் கொல்லும் முன் ஜயத்ரதனைப் பற்றிய ஒரு ரகசியத்தைக் கேள்,என்று அர்ஜுனனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னார்.

கண்ணா! இது என்ன நியாயம்? அஸ்தமனம் ஆகிவிட்டது. இனி, நான் அக்னியில் விழுந்து இறப்பது தானே முறை. நான் தேரை விட்டு இறங்கப் போகிறேன்,என்றவனை கண்ணன் கோபித்தார்.அர்ஜுனா! முதலில் இதைக் கேள். இந்த ஜயத்ரதனின் தந்தை விருத்தக்ஷத்ரன் மிகப்பெரிய தபஸ்வி. அவன் இவனைப் பெற்றவுடன் தவமிருந்தான். அப்போது அசரீரி தோன்றி, என்ன வரம் வேண்டுமென கேட்டது. தன் மகனின் தலையை யார் ஒருவன் தரையில் உருளச் செய்கிறானோ அவனது தலை சுக்கு நுõறாக வெடிக்க வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே வரமும் தரப்பட்டது. இப்போதும் அவனது தந்தை வேறு பல கோரிக்கைகளுக்காக காட்டில் தவமிருக்கிறான். இப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதால், இவனது தந்தை சந்தியாவந்தனம் செய்ய நீரைக் கையில் அள்ளி வைத்திருப்பான். இவனது தலை அவனது கையில் விழும் வகையில் உனது குறி அமைய வேண்டும். அவனது கையில் தலை விழவும் என்னவோ ஏதோவென அவன் கீழே எறிவான். அவனது தலையும் வெடித்து விடும்,என்றார். அர்ஜுனன் மீண்டும் மறுத்தான். கண்ணா! நீ சொல்வது கொஞ்சம் கூட தர்மத்துக்கு ஒப்பாது. நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன். அக்னி மூட்டப்போகிறேன் என்று சொல்லி ஒரு பாணத்தைத் தொடுத்து அக்னியை உண்டாக்கினான். அக்னியை வலம் வரத்துவங்கி விட்டான். கிருஷ்ணர் மீண்டும் அவனை எச்சரித்தார். அர்ஜுனா! தேரில் ஏறப்போகிறாயா இல்லையா?