Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்

பலன்கள் பல அருளும் புரட்டாசி மாத விரதங்கள்

தெய்வ அனுக்கிரகத்துடன், முன்னோர் களின் ஆசியையும் பெற்றுத் தரும் மிக அற்புத மான மாதம் புரட்டாசி. இம்மாதத்தின் பெயரைக் கேட்டதுமே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனுமே நம் நினைவுக்கு வருவர். ஆமாம், பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை.

அம்பாளுக்கு உகந்த- சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கெளரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங் களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

மேலும், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம் வருவதும் இம்மாதத்தில்தான். ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள். மகத்துவமான அந்த விரத வழிபாடுகளை நாமும் விரிவாக அறிவோமா?

கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத் தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள். அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம். அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர். அவர்களை தியானிப் பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்’ என்பது ஐதீகம்.இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு. இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். வரும் அக்டோபர் 3-ம் தேதி, திருமலை திருப்பதியில் பிரம்மோற்ஸவம் துவங்குகிறது. அக்டோபர் 7 அன்று கருடஸேவை நடைபெறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டா சியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

கேதாரீஸ்வர விரதம்

பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ் வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும். சரி! இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” என்றார்.

வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

21 இழைகள் – 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.

புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண் டிய இன்னும் சில விரதங்களைத் தெரிந்துகொள்வோமா?

ஸித்தி விநாயக விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

சஷ்டி – லலிதா விரதம்:

புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம்:

புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை – பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்:

புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்:

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

அனந்த விரதம்:

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

முன்னோர்கள் அருளும் மஹாளயம்

புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும். இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

Read More:

Purattasi Viratham

Why don’t we eat non veg foods in the month of Purattasi?

Importance of Mahalaya Amavasya in Tamil

Purattasi Viratham Scientific Reason

Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal

Purattasi-Story,Significance And Spirituality-தமிழ் மாதங்களில் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?