Mahabharatham Episode 21 – மகாபாரதம் பகுதி 21

Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-21

நண்பனால் வஞ்சிக்கப்பட்ட இந்த துரோணர் தான் பாண்டவ, கவுரவர்களுக்கு குருவாக பொறுப்பேற்கிறார். அவரை கிருபாச்சாரியார் சந்தித்தார். பீஷ்மர் அவரை வணங்கினார். சுவாமி! சிநேகிதன் ஒருவன் உங்களுக்கு செய்த துரோகம் எங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இதோ! இவர்கள் எல்லாருமே என் பேரன்கள். இவர்களை தாங்கள் வில்வித்தையிலும், சகல போர்க்கலைகளிலும் வல்லவர்களாக்கி, இவர்களின் உதவியுடன் தங்கள் சபதத்தையும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள், என்றார். துரோணர் மகிழ்ந்தார். அவரை மேலும் மகிழ்விக்கும் வகையில் பீஷ்மர் அவரிடம், துரோணர் பெருமானே! தாங்கள் துருபதனால் நாடு கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டீர்கள். ஆனால், நாங்கள் உங்களை எங்கள் தேசத்து அரசனாகவே பாவிக்கிறோம். ஆம்…இனி நீங்களும் எங்கள் தேசத்து அரசர் தான். இதோ! வெண் கொற்றக்குடையையும், அரசருக்கு கிரீடம், செங்கோல் முதலான சின்னங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்,என்றார்.

பீஷ்மரின் அன்பில் துரோணர் நெகிழ்ந்து விட்டார். தன் குழந்தையின் பசிதீர்க்க ஒரு குவளை பாலுக்கு அலைந்த அவர், இன்று ராஜாவாகி விட்டார். மனிதர்களின் நிலைமையே இப்படித்தான். நேற்று வரை கஞ்சிக்கும். கூழுக்கும் அலைபவன் இன்று காரில் பவனி வருவான். மனிதனின் நிலையை காலம் மாற்றி விடுகிறது. அவனது திறமைக்கும், கல்விக்கும் உரிய புகழ் என்றேனும் ஒருநாள் கிடைத்தே தீருகிறது, அவனோ அவனது முன்னோரோ புண்ணியங்கள் செய்திருக்கும் பட்சத்தில்!

பொறுப்பேற்ற நாளிலேயே பாடங்களை ஆரம்பித்து விட்டார் துரோணர். ஒரு செயலைச் செய்வதாகப் பொறுப்பேற்ற பிறகு, காலநேரம் பார்ப்பது, தயங்குவது இவையெல்லாம் இருக்கவே கூடாது என்பது இந்த இடத்தில் மகாபாரதம் நமக்கு கற்றுத்தரும் பாடம். பாண்டவ, கவுரவர்கள் ஆர்வத்துடன் துரோணரிடம் போர் வித்தைகளைக் கற்றனர். எல்லாருமே வித்தைகளைத் தெளிவாகப் படித்தனர் என்றாலும், ஒரு வகுப்பில் முதல் தர தேர்ச்சி பெறும் மாணவனைப் போல, அர்ஜூனன் எல்லாரையும் விட ஆயுத வித்தைகளில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். குறிப்பாக, வில் வித்தையில் அவனே ஜெயக்கொடி நாட்டினான். அவனை விஜயன் என செல்லமாக அழைப்பார் துரோணர். ஒருநாள் கங்கையில் நீராடி கொண்டிருந்தார் துரோணர். அப்போது, அவரது கால்களைக் கவ்விக் கொண்டது ஒரு முதலை. ரத்தம் பெருக்கெடுத்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்தது. துரோணர் அலற ஆரம்பித்தார்.

கரையில் பாண்டவ, கவுரவர்கள் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். குருவின் அலறல் சத்தம் கேட்டதும், விஷயத்தைப் புரிந்துகொண்டு, என்ன செய்வதென தெரியாமல் திகைத்தனர். தண்ணீருக்குள் முதலை எந்த இடத்தில் கிடக்கிறது என தெரியாமல், வில், அம்பை எடுத்து குறி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அர்ஜூனன் தன் வில்லை வளைத்தான். முதலை இருக்குமிடத்தை குறிப்பால் அறிந்தான். அவ்விடத்தில் அம்பைச் செலுத்தினான். முதலை துடிதுடித்து தண்ணீரின் மேல்மட்டத்திற்கு வந்து விட்டது. அம்புகளை சரமாரியாகப் பாய்ச்சி அதைக் கொன்று விட்டான். துரோணர் பிழைத்தார். யானையாகப் பிறந்த நாராயண பக்தனான கஜேந்திரன், முதலையிடம் சிக்கித்தவித்த போது, அந்த ஆதிமூலமே வந்து காப்பாற்றினான். அதுபோல், நீயும் என் உயிரைக் காத்தாய், என அவனை உச்சிமோந்தார். அத்துடன் தன்னிடம் இருந்த அரியவகை அஸ்திரம் ஒன்றை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

ஒருவழியாக ஆயுதப்பயிற்சி நிறைவடைந்தது. துரோணர் தன் சீடர்களிடம், பாண்டவ, கவுரவர்களே! இத்துடன் பயிற்சி முடிந்து விட்டது. இனி பரிட்சை நடத்தப் போகிறேன். அதாவது, பொதுமக்கள் முன்னிலையில் நீங்கள் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட இது ஒரு போட்டி போலவே அமையும். உங்களுக்குள்ளேயே நீங்கள் மோதிக் கொள்ள வேண்டும். இந்தப் போட்டியை ஆரோக்கியமாக நடத்த வேண்டும். ஒருவர் இன்னொருவரை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. போட்டி விதிகளை எள்ளளவும் மீறக்கூடாது, என்றார். சீடர்கள் ஆர்வத்துடன் தலையசைத்தனர். இதையடுத்து பீஷ்மர் தன் பேரன்களின் வித்தையைப் பார்க்க ஆர்வத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். யுத்த அரங்கம் அலங்கரிக்கப்பட்டது. மக்கள் அமர்ந்து பார்க்க மேடைகள் அமைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன் ஏக்கப்பெருமூச்சு விட்டான்.

ஜாதியால் தாழ்ந்து பிறந்தோமே! இதோ! இந்த அந்தணர் தன் அந்தண சீடர்களுக்கு ஏராளமான ஆயுதக்கலைகளை அளிக்கிறாரே! காட்டில் வசிக்கும் வேடர் குலத்தில் பிறந்த நமக்கு இப்பயிற்சிகள் கிடைக்க வில்லையே! இவர் இந்த இளைஞர் களுக்கு கற்றுத்தந்த கலையை தினமும் கண்கொட்டாமல் கவனித்து, நாமும் ஓரளவு உயரிய நிலையில் தான் இருக்கிறோம். இருப்பினும், இதை யார் ஒத்துக் கொள்வார்கள்? உன் குரு யார் எனக் கேட்பார்களே! ஆயினும், முயற்சி நல்வினை தரும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த மகானை அணுகுவோம், என்றவனாய் துரோணரின் முன்னால் வந்து நின்றான் அந்த இளையவேடன். ஐயா! என் பெயர் ஏகலைவன். தாங்கள் இந்தக்காட்டிற்கு வந்து, தங்கள் சீடர்களுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுப்பதை கவனித்தேன். நீங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் வில்வித்தையை நான் முழுமையாக கவனித்தேன். இதோ பாருங்கள்! என் வித்தையைப் பார்த்தபிறகு, முறையாக இவற்றை எனக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் சீடர்களிலேயே உயர்ந்தவனாக நான் இருப்பேன், என்றவனாய் சில வித்தைகளையும் செய்து காண்பித்தான். அர்ஜூனனின் வித்தையை விட அது மிகவும் நேர்த்தியாக இருந்தது. துரோணர் இந்த இளைஞனுக்கு வித்தை கற்றுத்தர இயலாத நிலையில் இருந்தார். அதற்கு காரணம் ஜாதியல்ல! அர்ஜூனனிடம் அவர் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். அர்ஜூனா! உன்னிலும் மேம்பட்ட ஒரு மாணவனை நான் பார்த்ததில்லை. உன்னை விட ஒரு உயர்வான மாணவனை நான் இனி உருவாக்கவும் மாட்டேன், என்று சொல்லியிருந்தார். என்ன செய்வதென யோசித்தார்.